உணவுப் பதப்படுத்துதல் தொழிற்சாலைகள் அமைச்சகம்

கோவையில் ரூ 100 கோடி செலவில் பெரும் உணவுப் பூங்கா:

அமைச்சர் சாத்வி நிரஞ்சன் ஜோதி அறிவிப்பு. :

சேலம் மற்றும் மதுரையில் மேலும் இரண்டு உணவுப் பூங்காக்கள் அமைக்கும் திட்டம் பரிசீலனையில் உள்ளது:

Posted On: 20 JAN 2017 5:03PM by PIB Chennai

தமிழ்நாட்டில் கோயம்பத்தூரில் ரூ 100 கோடி செலவில் பெரும் உணவுப் பூங்கா அமைக்கப்படும் என்று மத்திய உணவுப் பதப்படுத்துதல் துறை இணை அமைச்சர் சாத்வி நிரஞ்சன் ஜோதி கூறியிருக்கிறார்.

 

சென்னையில் இன்று அசோச்சாம் அமைப்பும் மத்திய உணவுப் பதப்படுத்துதல் துறை அமைச்சகமும் இணைந்து ஏற்பாடு செய்த “இந்தியாவில் உணவுப் பொருள் சில்லறை விற்பனை:  நிலவரம் மற்றும் வாய்ப்பு” என்ற தலைப்பிலான மாநாட்டை தொடங்கி வைத்துப் அமைச்சர் பேசினார்.

 

மாநிலத்தில் சேலம் மற்றும் மதுரையில் மேலும் இரண்டு பெரும் பூங்காக்கள் அமைக்கும் திட்டம் தமது அமைச்சகத்தின் பரிசீலனையில் இருப்பதாக அவர் தெரிவித்தார்.

 

நாட்டில் இதுவரை 22 பெரும் உணவுப் பூங்காக்கள் அமைக்க ஒப்புதல் வழங்கப்பட்டிருப்பதாகவும் இதில் 14 உணவுப் பூங்காக்கள் செயல்பாட்டுக்கு வந்திருப்பதாகவும் அவர் கூறினார்.

 

சில குறிப்பிட்ட வேளாண் பொருட்கள் சில்லறை விற்பனை, 100 சதவீத அந்நிய முதலீட்டை அனுமதிக்கலாம் என்ற தமது அமைச்சகத்தின் பரிந்துரை தொடர்பாக மத்திய அரசு விரைவில் முடிவு எடுக்க இருப்பதாக அமைச்சர் கூறினார். இந்த யோசனை ஏற்கப்பட்டால் விவசாயிகள் தயாரிக்கும் பொருட்களுக்கு அதிக விலை கிடைக்கும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

 

நாட்டில் விவசாயிகள் தயாரிக்கும் உணவுப் பொருட்களில் ரூ 92,000 கோடி பொருட்கள் வீணாகுவதாகவும் இதனைத் தடுக்க நாடு முழுவதும்  குளிர்பதனக் கிடங்குகள் அமைக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

 

இந்தியாவில் இதுபோன்ற குளிர்பதனக் கிடங்குகள் அதிகம் தமிழ்நாட்டில் இருப்பது மகிழ்ச்சி தரக்கூடியதான செய்தி என்று அமைச்சர் தெரிவித்தார்.

 

இந்த மாநாட்டில் உணவு பதப்படுத்துத்தல் துறையைச் சார்ந்த தனியார் தொழில் நிறுவனத் தலைவர்கள், விவசாயிகள் மற்றும் தொழில் முனைவோர் பங்கேற்றனர்.

 

****

சஞ்சய்/ரெசின்/முத்து


(Release ID: 1480890)