ஆயுஷ்
“உலக ஹோமியோபதி மாநாடு” குடியரசுத் துணைத் தலைவர் தொடங்கிவைத்தார்
Posted On:
10 APR 2018 4:28PM by PIB Chennai
குடியரசுத் துணைத் தலைவர் திரு. எம். வெங்கைய நாயுடு இரண்டுநாள் நடைபெறும் “உலக ஹோமியோபதி தின அறிவியல் மாநாட்டை” தில்லியில் இன்று தொடங்கிவைத்தார். இந்த மாநாட்டுக்கு ஆயுஷ் அமைச்சகம் ஏற்பாடு செய்துள்ளது. நிகழ்ச்சிக்கு மத்திய ஆயுஷ் துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) திரு ஸ்ரீபிரசாத் யெஸ்ஸோ நாயக் தலைமை வகித்தார்.
நிகழ்ச்சியில் பேசிய குடியரசுத் தலைவர், ஹோமியோபதி மருத்துவத் துறையைச் சேர்ந்தவர்களும் விஞ்ஞானிகளும் மருத்துவ அறிவியல் துறையில் உலகில் அதிகம் பிரபலமான சிகிச்சை முறை குறித்த ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தினார். இத்துறையில் ஈடுபட்டுள்ள விஞ்ஞானிகள் ஹோமியோபதி மருத்துவத்தில் புதிய கண்டுபிடிப்புகளையும் புதிய ஆய்வுகளையும் மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
தரமான மூலப் பொருள்களுடன் உருவாக்கப்படுவதை உறுதி செய்யும் ஹோமியோபதி மருந்துகளுக்கு காப்புரிமை பெறுவதற்காக ஹோமியோபதி ஆய்வுக்கான மத்திய கவுன்சில் (CCRH) அமைப்பைச் சார்ந்த விஞ்ஞானிகள் மும்பையில் உள்ள இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கழகத்தைச் (IIT Bombay) சார்ந்த விஞ்ஞானிகளுடன் இணைந்து பணியாற்றுவதைக் குடியரசுத் துணைத் தலைவர் பாராட்டினார்.
ஹோமியோபதி மருத்துவத்தின் நம்பகத் தன்மைக்கு மேலும் வலுவூட்டும் விதத்தில் ஆய்வாளர்கள் மேலும் செயல்படவேண்டும் என்று வலியுறுத்திய குடியரசுத் துணைத் தலைவர் அதன் மூலம் ஹோமியோபதி மருத்துவம் புதிய உயரத்தை எட்டும் என்றார்.
தேசம் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்றும் குடியரசுத் துணைத் தலைவர் வலியுறுத்தினார். “வளமான தேசமாக (Wealthy Nation) இருப்பதை விட வலிமையான தேசமாக (Healthy Nation) இருப்பதே மிகவும் முக்கியம்” என்று திரு. வெங்கைய நாயுடு வலியுறுத்தினார்.
ஹோமியோபதி மருத்துவத் துறையில் ஆய்வு நடத்தி பங்களிப்பு செலுத்தியவர்களைப் பாராட்டி ஊக்குவிக்கும் வகையில் ஹோமியோபதி ஆய்வு மத்திய கவுன்சில் (CCRH) விருதுகளைக் குடியரசுத் துணைத் தலைவர் வழங்கினார்.
ஹோமியோபதி ஆய்வு மத்திய கவுன்சில் (CCRH) 40 ஆண்டுகளை நிறைவு செய்யும் விதத்தில் இணையவழி கருத்தரங்கத் தொடரை (Webinar series) திரு. எம். வெங்கைய நாயுடு தொடங்கிவைத்தார். இது மைன்ட் டெக்னாலஜிஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்துடன் இணைந்து உருவாக்கப்பட்டது. அத்துடன் இந்த மாநாடு உலகளாவியதாக அமையும் வகையில் ‘WHD CCRH App’ என்ற செயலியும் தொடங்கப்பட்டது.
(Release ID: 1528545)