சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம்
சாலைத் தகவல் முறை தொடர்பாகத் தென்கொரியாவுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொள்வதற்கான வாய்ப்புகளை இந்தியா ஆராய்ந்து வருகிறது
प्रविष्टि तिथि:
23 APR 2018 2:13PM by PIB Chennai
இந்தியாவில் சாலைத் தகவல் முறையை அறிமுகப்படுத்துவது குறித்து தென்கொரியாவுடன் ஒப்பந்தம் செய்துகொள்வதற்கான வாய்ப்புகளை ஆராய்ந்துவருவதாக மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை, கப்பல், நீர்வளம், நதிகள் மேம்பாடு மற்றும் கங்கை புனரமைப்புத் துறை அமைச்சர் திரு.நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். தென்கொரிய விரைவுச் சாலைகள் தகவல் கழகத்தால் பின்பற்றப்படுவதைப் போன்ற நடைமுறை இந்தியாவிலும் உருவாக்கப்படஉள்ளது. ஒருங்கிணைக்கப்பட்ட கட்டுப்பாட்டு அறையில் இருந்து நெடுஞ்சாலைகளை ஒருங்கிணைத்துக் கண்காணிக்கும் வசதி கொண்டதாக இந்த நடைமுறை அமையும்.
புதுதில்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் இன்று, 29-வது தேசிய சாலைப் பாதுகாப்பு வாரத்தைத் தொடங்கிவைத்துப் பேசிய அமைச்சர், நாட்டில் சாலையைப் பயன்படுத்துவோரின் பாதுகாப்பை உறுதி செய்வதற்குத் தமது அமைச்சகம் முன்னுரிமை அளிக்கும் என்றார். தாம் அமைச்சராகப் பொறுப்பேற்றபோது, சாலை விபத்துக்களில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1.5 லட்சமாக இருந்ததாகவும், தற்போது அதனைப் பாதியாகக் குறைக்க இலக்கு நிர்ணயித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்த ஆண்டு சாலைப் பாதுகாப்பு வாரம் ஏப்ரல் 23 முதல் 29 வரை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், பள்ளிக்கூடம் மற்றும் வர்த்தக வாகனங்களின் ஓட்டுநர்கள் மீது கவனம் செலுத்தப்படும் என்றும் தெரிவித்தார். நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர்களிடையே உரையாற்றிய திரு.நிதின் கட்கரி, ஒவ்வொரு மாணவரும், அவரது குடும்பம் மற்றும் சமுதாயத்தின் சாலைப் பாதுகாப்புத் தூதராக செயல்பட வேண்டுமென்று கேட்டுக்கொண்டார்.
சாலைப் பாதுகாப்பு பற்றிய தேசிய அளவிலான கட்டுரைப் போட்டியில் வெற்றி பெற்ற பள்ளி மாணவர்கள் 15 பேருக்கு விருதுகளையும் அமைச்சர் வழங்கினார். முதல் 3 இடங்களைப் பிடித்தவர்களுக்கு ரொக்கப் பரிசாக முறையே ரூ.15 ஆயிரம், ரூ.10ஆயிரம் மற்றும் ரூ.5 ஆயிரமும், சான்றிதழும் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியின் போது, பாதுகாப்பான இந்தியா சவால் '18' என்ற இணைய தளமும் தொடங்கப்பட்டது. இது தவிர, “பாதுகாப்பான பயணத்தை மேற்கொள்வீர்” என்ற தலைப்பிலான சிறுகதைத் தொகுப்பையும் அமைச்சர் வெளியிட்டார்.
கூடுதல் விவரங்களுக்கு www.pib.nic.in என்ற இணையதளத்தைக் காணவும்.
(रिलीज़ आईडी: 1529934)
आगंतुक पटल : 206