நீர்வளத் துறை அமைச்சகம்
நதிகள் இணைப்பு தொடர்பாக சம்பந்தப்பட்ட மாநிலங்களிடையே கருத்தொற்றுமையை உருவாக்க வேண்டியது அவசியம்: திரு. நிதின் கட்கரி
Posted On:
20 AUG 2018 4:42PM by PIB Chennai
கடலில் கலந்து வீணாகும் தண்ணீரை தேவையான பகுதிகளுக்கு கொண்டு சென்று பயன்படுத்த ஏதுவாக, நதிகள் இணைப்புத் திட்டத்தை செயல்படுத்த, சம்பந்தப்பட்ட மாநிலங்களிடையே கருத்தொற்றுமையை உருவாக்க வேண்டியது அவசியம் என மத்திய நீர்வளம் மற்றும் நதிகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு. நிதின் கட்கரி வலியுறுத்தியுள்ளார்.
நதிகள் இணைப்பு தொடர்பான சிறப்புக் குழுவின் 15-வது கூட்டம் மற்றும் தேசிய தண்ணீர் மேம்பாட்டு முகமையின் 32-வது வருடாந்திரக் கூட்டம் புதுதில்லியில் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் பேசிய மத்திய அமைச்சர் திரு. நிதின் கட்கரி, நதிகள் இணைப்பு குறித்து பயனுள்ள விவாதங்களை நடத்தி, பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதன் மூலம், நதிகள் இணைப்புத் திட்டத்தை முன்னுரிமை அடிப்படையில் செயல்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு மாநில அரசுகளை கேட்டுக் கொண்டார்.
நாட்டின் உணவு மற்றும் தண்ணீர் பாதுகாப்பை மேம்படுத்த, நதிகள் இணைப்புத் திட்டத்தை செயல்படுத்த வேண்டியது மிகவும் அவசியமானது என்றும், இத்திட்டத்தின் மூலம், நாட்டில் உள்ள வறட்சியான மற்றும் தண்ணீர் பற்றாக்குறை உள்ள பகுதிகளுக்கு தண்ணீர் வழங்க முடியும் என்றும் அவர் கூறியுள்ளார்.
முதற்கட்டமாக மாநில அரசுகளுடன் ஆலோசித்து அவர்களது ஒப்புதலுடன், கோதாவரி – காவிரி (கல்லணை வரை) நதிகள் இணைப்பு உட்பட 5 திட்டங்களை செயல்படுத்துவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் திரு. நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
இந்த திட்டங்களை வெற்றிகரமாக நிறைவேற்றுவதன் மூலம், வெள்ளப் பெருக்கு காலத்தில் பேரழிவு ஏற்படுவது குறைவதுடன், பாசன வசதிகள் மேம்படும் என்றும் கிராமப்புற வேளாண் தொழில் மூலம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படுவதுடன், ஏற்றுமதி அதிகரித்து, கிராமப்புற மக்கள் வேலை தேடி இடம்பெயர்வது தடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
நதிகள் இணைப்புத் திட்டத்தை செயல்படுத்துவதில், மாநிலங்களுக்கு இடையேயும், மத்திய – மாநில அரசுகளுக்கு இடையேயும் உள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கான சட்ட ரீதியான நடைமுறைகள் பற்றி ஆலோசிப்பதற்கு இதுவே சரியான தருணம் என்றும் திரு. நிதின்கட்கரி தெரிவித்தார்.
கூடுதல் விவரங்களுக்கு www.pib.nic.in என்ற வலைதளத்தைப் பார்க்கவும்.
--------------
(Release ID: 1543453)