நீர்வளத் துறை அமைச்சகம்
நாட்டின் 91 முக்கிய நீர்த்தேக்கங்களில் தண்ணீர் இருப்புநிலை ஆறு சதவிகிதம் உயர்ந்துள்ளது
Posted On:
31 AUG 2018 10:26AM by PIB Chennai
2018 ஆகஸ்ட் 30 ஆம் தேதி முடிவடைந்த வாரத்தில் நாட்டின் 91 முக்கிய நீர்த்தேக்கங்களில் தண்ணீர் இருப்பு 112.083 பில்லியன் கன மீட்டர் ஆக இருந்தது. இது இந்த நீர்த்தேக்கங்களின் மொத்தக் கொள்ளளவில் 69 சதவிகிதம் ஆகும்.
91 நீர்த்தேக்கங்களின் மொத்த நீர் சேமிப்புத் திறன் 161.993 பில்லியன் கன மீட்டர் ஆகும். நாட்டில் மதிப்பிடப்பட்டுள்ள மொத்தத் தண்ணீர் சேமிப்புத் திறனான 257.812 பில்லியன் கன மீட்டரில் இது 63 சதவிகிதம் ஆகும். இந்த 91 நீர்த் தேக்கங்களில் 37-ல் மொத்தம் 60 மெகாவாட்டுக்கும் கூடுதலான மின் உற்பத்தித் திறன் கொண்ட நீர் மின்சக்தி நிலையங்கள் அமைந்துள்ளன.
தெற்கு மண்டலத் தண்ணீர் இருப்பு நிலவரம்
தெற்கு மண்டலத்தில் தமிழ்நாடு, கேரளம், ஆந்திரப் பிரதேசம், தெலங்கானா, ஆந்திரப் பிரதேசம் & தெலங்கானா ( இரண்டு மாநிலத்தின் இரண்டு ஒருங்கிணைந்த திட்டங்கள் ), கர்நாடகா ஆகியன அடங்கியுள்ளன. இந்த மாநிலங்களில் உள்ள 31 நீர்த்தேக்கங்கள் மத்திய நீர் ஆணையத்தின் கண்காணிப்பில் உள்ளன. இந்த நீர்த் தேக்கங்களின் மொத்தச் சேமிப்புத் திறன் 51.59 பில்லியன் கன மீட்டர் ஆகும்.
இந்த நீர்த்தேக்கங்களின் மொத்தக் கொள்ளளவில் தற்போது 81 சதவிகிதம் தண்ணீர் அதாவது 41.95 பில்லியன் கன மீட்டர் தண்ணீர் இருப்பில் உள்ளது. சென்ற ஆண்டின் இதே காலத்தோடு ஒப்பிடுகையில் இந்த அளவு 35 சதவிகிதம் ஆகும். கடந்த 10 ஆண்டுகளில் இதே காலத்தில் இருந்த சராசரி நீர் அளவுடன் ஒப்பிடுகையில், இந்த அளவு 58 சதவிகிதம் ஆகும். சென்ற ஆண்டின் இதே காலத்தை விட தற்போதைய நீர் இருப்பு நன்றாக உள்ளது. கடந்த 10 ஆண்டுகளின் சராசரி இருப்புடன் ஒப்பிடுகையில் தற்போதைய இருப்பு நன்றாகவே உள்ளது.
தமிழ்நாடு, கேரளம், தெலங்கானா, கர்நாடகா, பஞ்சாப், ஒடிஸா, மஹாராஷ்டிரா, உத்தரகாண்ட், மத்தியப் பிரதேசம், சட்டிஸ்கார் ஆகிய மாநிலங்களில் சென்ற ஆண்டை விட இந்த ஆண்டு நீர் இருப்பு சிறப்பாக உள்ளது.
(Release ID: 1545347)