சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்
2018 ஆண்டு இறுதி அறிக்கை: சமூகநீதி, அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் மாற்றுத் திறனாளிகள் அதிகாரமளித்தல் துறை
Posted On:
14 DEC 2018 5:33PM by PIB Chennai
மாற்றுத் திறனாளிகளின் நலன் மற்றும் அதிகாரமளித்தலை நோக்கமாகக் கொண்டு, அதுகுறித்த கொள்கைகள் மற்றும் செயல்பாடுகளுக்கு முக்கியக் கவனம் செலுத்தும் வகையில், சமூகநீதி மற்றும் அமலாக்க அமைச்சகத்தில், 2012, மே, 12-ஆம் தேதி தனியாக மாற்றுதிறனாளி விவகாரங்கள் துறை உருவாக்கப்பட்டது.
மாற்றுத்திறனாளிகளுக்கு அதிகாரமளித்து, உள்ளடக்கிய சமுதாயத்தை சமமான வாய்ப்புகளுடன் உருவாக்குவது இந்த துறையின் முக்கிய நோக்கமாகும். மாற்றுத்திறனாளிகள் உற்பத்தித் திறனுடன் பாதுகாப்பான, கண்ணியமான வாழ்க்கையை மேற்கொள்ள உதவுவதும் இத்துறையின் நோக்கமாகும்.
இத்துறையின் நெடுநோக்கத்தையும், இதர குறிக்கோள்களையும் அடைவதற்கு கீழ்கண்ட செயல்பாடுகளை இந்த துறை மேற்கொள்கிறது:
- மறுவாழ்வு நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல்
- முன்கூட்டியே கண்டுபிடித்து தவிர்ப்பு ஆலோசனைகளை வழங்குதல், உடலியல் மறுவாழ்வு மற்றும் உதவிக் கருவிகள் மற்றும் உபகரணங்கள் வழங்கும் மருத்துவ மறுவாழ்வுப் பணிகளை மேற்கொள்ளுதல்.
- தொழிற்கல்வி உள்ளிட்ட கல்வி ரீதியிலான மறுவாழ்வு நடவடிக்கைகள்
- பொருளாதார மறுவாழ்வு மற்றும் சமூக அதிகாரமளித்தல்
- மறுவாழ்வுப் பணியாளர்களை உருவாக்குதல்
- திறனுடன் கூடிய உடனுக்குடனான சேவை வழங்கும் அமைப்பை மேம்படுத்துதல்
- சமுதாயத்தின் பல்வேறு பிரிவினரிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதுடன், மாற்றுத்திறனாளிகளுக்கு அதிகாரமளிப்பதை ஆதரித்தல்
மாற்றுத்திறனாளிகளுக்கு கருவிகள் / உபகரணங்கள்
- கருவிகள் / உபகரணங்கள் வழங்குவதற்கான 1,456 முகாம்களில், 2.4 லட்சத்திற்கும் அதிகமான மாற்றுத் திறனாளிகளுக்கு 2018-ல் 3,430 மோட்டார் பொருத்திய மூன்று சக்கர வாகனங்கள் உள்ளிட்ட உதவிக் கருவிகள் வழங்கப்பட்டன. இந்த ஆண்டில் 287 உட்செவி மாற்று அறுவை சிகிச்சை நடத்தப்பட்டன.
- கருவிகள் / உபகரணங்கள் திட்டத்தின்கீழ் வழங்கப்பட்ட பெரிய கருவிகள் மற்றும் உபகரணங்கள்: மோட்டார் பொருத்தப்பட்ட மூன்று சக்கர வாகனங்கள் 119, சாதாரண மூன்று சக்கர வாகனங்கள் 262, சக்கர நாற்காலிகள் 277, முடக்கோல்கள் 1236, நடைக்கோல்கள் 327, ப்ரெய்லி பிரம்புகள் 34, காதுகேட்கும் கருவி 742, செல்ஃபோன்கள் 26.
- தேசிய வயோஸ்ரீ திட்டத்தில் வழங்கப்பட்ட முக்கிய கருவிகள் மற்றும் உபகரணங்கள்: நடைக்கோல்கள் 1089, சற்கர நாற்காலிகள் 250, காதுகேட்கும் கருவிகள் 773, பல்செட் 45, கண்ணாடி 806.
மாற்றுத்திறனாளிகள் அதிகாரமளித்தலுக்கான தேசிய விருதுகள்
சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தினமான டிசம்பர் 3ஆம் தேதி, மாற்றுத் திறனாளிகள் அதிகாரமளித்தல் துறை ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் குடியரசு துணைத் தலைவர் திரு. எம். வெங்கையா நாயுடு, மாற்றுத்திறனாளிகள் அதிகாரமளித்தலுக்கான தேசிய விருதுகளை வழங்கினார்.
எளிதில் அணுகக்கூடிய இந்தியா இயக்கம்:
எளிதில் அணுகக்கூடிய இந்தியா இயக்கம் 2015 டிசம்பர் 3-ஆம் தேதி தொடங்கப்பட்டது. இதன்படி, கட்டிட அமைப்புகள், போக்குவரத்து, தகவல் - தொலைத்தொடர்பு அமைப்புகள் ஆகியவற்றை மாற்றுத்திறனாளிகள் எளிதில் அடையும்வகையில் அமைப்பதை இந்த இயக்கம் நோக்கமாக கொண்டது. மொத்தமுள்ள 100 மத்திய அரசு அமைச்சகங்கள் / துறைகளில் 94-ல் மாற்றுத் திறனாளிகள் எளிதில் அணுகக்கூடிய வசதிகள் உருவாக்கப்பட்டுள்ளன. மாநில அரசுகள், யூனியன் பிரதேசங்களின் 917 வலைதளங்களில் 217 எர்நெட் இந்தியா அமைப்பு மூலம் மாற்றுத் திறனாளிகள் அணுகக்கூடிய வகையில் அமைக்கப்பட்டுள்ளன.
மாற்றுத் திறனாளிகள் அடையாள அட்டைத் திட்டம்
மாற்றுத் திறனாளிகள் குறித்த தேசிய தரவு தளத்தை அமைப்பதற்கென இந்த துறை மாற்றுத் திறனாளிகள் தனித்துவ அடையாள அமைப்பை தொடங்கியுள்ளது. இதன்மூலம் தனித்துவ அடையாள அட்டைகள் மற்றும் மாற்றுத்திறனாளி சான்றிதழ்கள் வழங்கப்படும்.
2018-ல் மேற்கொள்ளப்பட்ட இதர முக்கிய நடவடிக்கைகள்
- பல்வேறு மாநில / யூனியன் பிரதேச அரசுகளின் 100 வலைதளங்களை மாற்றுத்திறனாளிகள் அணுகக்கூடியதாக மாற்றும் திட்டத்தை மத்திய சமூகநீதி அதிகாரமளித்தல் அமைச்சர் திரு. தாவர்சந்த் கெலாட், 19.01.2018 அன்று தொடங்கி வைத்தார்.
- நாட்டின் எட்டு இடங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு கருவிகள் / உபகரணங்கள் வழங்கும் சிறப்பு முகாம்கள் 2018-ல் நடத்தப்பட்டன.
- மாற்றுத்திறனாளிகள் குறித்த முதலாவது மற்றும் இரண்டாவது மத்திய ஆலோசனை வாரியக் கூட்டம், சமூகநீதி அதிகாரமளித்தல் அமைச்சர் தலைமையில் புதுதில்லி விஞ்ஞான் பவனில் முறையே 13.2.2018, 5.10.2018 தேதிகளில் நடைபெற்றன.
- ஆட்டிசம், பெருமூளை வாதம், மனநலக் குறைவு, பன்முக குறைபாடு ஆகியவற்றால் பாதிக்கப்பட்டுள்ள நபர்களின் நலத்திற்கான தேசிய அறக்கட்டளை தொடங்கி வைக்கப்பட்டது.
- நாட்டின் முதலாவது செய்கை மொழி 3000 வார்த்தைகளைக் கொண்ட அகராதியை, புதுதில்லியில் இந்த துறை அமைச்சர் திரு. தாவர்சந்த் கெலாட் வெளியிட்டார். இந்த அகராதியை இந்திய செய்கை மொழி ஆராய்ச்சி பயிற்சி மையம் உருவாக்கியது.
- மாற்றுத் திறனாளி இளைஞர்களுக்கான தேசிய தகவல் தொழில்நுட்பப் போட்டிகள், ஹரியானா மாநிலம், குருஷேத்ரா என்.ஐ.டி-யில் 2018, ஜுன், 25, 26 தேதிகளில் நடத்தப்பட்டது.
- மாற்றுத் திறனாளிகளுக்கான திறன் மேம்பாட்டு தேசிய பயிலரங்கு புதுதில்லி விஞ்ஞான் பவனில் 2018, ஜுலை 3ஆம் தேதி நடைபெற்றது.
- லண்டனில் 2018, ஜுலை 24ஆம் தேதி நடைபெற்ற உலக மாற்றுத் திறனாளி உச்சிமாநாட்டில் சமூகநீதி அதிகாரமளித்தல் அமைச்சர் தலைமையில் இந்தியக் குழு பங்கேற்றது.
- மாவட்ட மாற்றுத் திறனாளி மறுவாழ்வு மையங்கள் சார்ந்த மாற்றியமைக்கப்பட்ட திட்டத்தின் முக்கியப் பகுதிகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியான தேசிய மாநாடு, புதுதில்லி அம்பேத்கர் சர்வதேச மையத்தில் 2018, செப்டம்பர் 14-ஆம் தேதி நடத்தப்பட்டது.
- உலக சிறந்த நடைமுறைகள் அடிப்படையிலான மாற்றுத்திறனாளி தேசியப் பயிலரங்கு புதுதில்லி சாணக்கியபுரியில் உள்ள பிரவாசி பாரதீய மையத்தில் 2018, அக்டோபர் 23ஆம் தேதி நடைபெற்றது.
- ஆஸ்திரேலிய மற்றும் இந்திய அரசுகளுக்கு இடையே மாற்றுத்திறனாளிகள் துறையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் 22.11.2018 அன்று கையெழுத்தானது.
மேலும் விவரங்களுக்கு www.pib.nic.in என்ற வலைதளத்தைப் பார்க்கவும்.
******
விகீ/சிஜே/க
(Release ID: 1558100)