நிதி அமைச்சகம்
காப்பீட்டு இடைத்தரகு நிறுவனங்களில் 100% வெளிநாட்டு நேரடி முதலீட்டை அனுமதிக்க மத்திய பட்ஜெட்டில் திட்டம்
Posted On:
05 JUL 2019 1:42PM by PIB Chennai
காப்பீட்டு இடைத்தரகு நிறுவனங்களில் 100% வெளிநாட்டு நேரடி முதலீட்டை அனுமதிக்க மத்திய பட்ஜெட்டில் உத்தேசிக்கப் பட்டுள்ளது. மத்திய நிதி மற்றும் பெருநிறுவன விவகாரத் துறை அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன், 2019-20 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை இன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தபோது இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
உலக வெளிநாட்டு நேரடி முதலீடு 2018-ல் 13% குறைந்துள்ளது. முந்தைய ஆண்டில் 1.5 டிரில்லியன் அமெரிக்க டாலர்கள் என்ற நிலையில் இருந்து, 2018ல் 1.3 டிரில்லியன் அமெரிக்க டாலர்கள் என்ற அளவுக்குக் குறைந்துவிட்டது. தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக இது குறைந்திருக்கிறது. 2018-19ல் இந்தியாவில் வெளிநாட்டு நேரடி முதலீடு வலுவான நிலையில் இருந்தது. முந்தைய ஆண்டைவிட 6 % வளர்ச்சி கண்டு 64.375 பில்லியன் அமெரிக்க டாலர்கள் என்ற நிலையை எட்டியது.
வெளிநாட்டு நேரடி முதலீட்டுக்கு உகந்த நாடாக இந்தியாவை உருவாக்கும் வகையில், இந்த ஆதாயங்களை மேலும் பலப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை நிதியமைச்சர் அறிவித்தார்:
ஒரு நிறுவனத்தில் 24% என்ற கட்டாய வரம்பிலான எப்.பி.ஐ. அளவை உயர்த்துவதற்கு பட்ஜெட்டில் உத்தேசிக்கப் பட்டுள்ளது. இதுகுறித்து முடிவு செய்யும் வாய்ப்பு சம்பந்தப்பட்ட கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வழங்கப்படும் என அமைச்சர் தெரிவித்தார்.
என்.ஆர்.ஐ. பிரிவு முதலீட்டுத் திட்ட வழிமுறையை வெளிநாட்டுப் பிரிவு முதலீட்டு வழிமுறையுடன் இணைக்க உத்தேசித்துள்ளதாக அமைச்சர் கூறினார். இந்தியப் பங்குகளை வாங்குவதில் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு தடைகள் இல்லாத வசதியை அளிக்க இவ்வாறு செய்யப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.
********
(Release ID: 1577510)