நிதி அமைச்சகம்
இரண்டாவது ஜி20 நிதியமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கி கவர்னர்கள் மாநாட்டில் திருமதி நிர்மலா சீதாராமன் பங்கேற்பு
Posted On:
15 APR 2020 8:37PM by PIB Chennai
கோவிட்-19 நோய்த்தொற்று நெருக்கடியில் உலக அளவில் ஏற்பட்டுள்ள பொருளாதாரத் தாக்கம் பற்றி விவாதிக்க, சௌதி அரேபியாவின் தலைமையில் இன்று நடைபெற்ற இரண்டாவது ஜி20 நிதியமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கி கவர்னர்கள் மாநாட்டில் திருமதி நிர்மலா சீதாராமன் பங்கேற்றார்.
ஜி20 தலைவர்களின் அசாதாரணமான கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை, குறிப்பாக கோவிட்-19 தொடர்பான நடவடிக்கைகளுக்கு ஜி20 செயல்திட்டம் உருவாக்குவது தொடர்பான முயற்சிகளை உறுதியுடன் செயல்படுத்திய சௌதி அரேபிய தலைமைக்கு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பாராட்டு தெரிவித்தார்.
மாநாட்டில் பேசிய நிதியமைச்சர், நீடித்த அளவில் பெரிய பொருளாதார ஸ்திரத்தன்மையைப் பராமரிப்பதுடன், மக்களின் வாழ்க்கை மற்றும் உயிர்களைப் பாதுகாப்பதில் நிதியமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கி கவர்னர்களின் பங்கு பற்றி வலியுறுத்தினார். இதுவரையில், கடந்த 2 வாரங்களில், 320 மில்லியன் மக்களுக்கு 3.9 பில்லியன் டாலர் அளவுக்கு இந்தியா நிதியுதவிகளை வழங்கியுள்ளது என்று நிதியமைச்சர் தெரிவித்தார். உதவித்தொகையைப் பெறுவதற்கு மக்கள் பொது இடங்களுக்கு வெளியே வரும் நிலையைத் தவிர்க்கும் வகையில், டிஜிட்டல் தொழில்நுட்பங்கள் மூலம் அவர்களின் வங்கிக் கணக்கிலேயே இந்தத் தொகையை நேரடியாகச் செலுத்துவதில் சிறப்பு கவனம் செலுத்தப்பட்டது என்றும் அவர் குறிப்பிட்டார்.
இந்திய அரசு, இந்திய ரிசர்வ் வங்கி மற்றும் இதர ஒழுங்குமுறை அமைப்புகள் மேற்கொண்ட நிதிக்கொள்கை நடவடிக்கைகள் காரணமாக, சந்தை முடங்கிவிடாமல் பார்த்துக் கொள்ளப்பட்டது என்றும், கடன் கிடைக்கும் வாய்ப்புகளுக்கு உத்வேகம் அளிக்கப்பட்டது என்றும் அமைச்சர் கூறினார்.
(Release ID: 1614920)