தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்
                
                
                
                
                
                
                    
                    
                        பொது முடக்கத்தின் போதும் குழந்தை உயிர் காக்க உதவிக் கரம் நீட்டிய அஞ்சல் துறை 
                    
                    
                        
                    
                
                
                    Posted On:
                19 APR 2020 6:16PM by PIB Chennai
                
                
                
                
                
                
                ‘உயிர் காக்கும் மருந்து கிடைக்குமோ?’ என அஞ்சிய குழந்தைக்கு “அஞ்சேல் உதவுகிறேன்” என்று ஓடோடி வந்து உதவியுள்ளது இந்திய அஞ்சல் துறை.
கொரோனா (கோவிட் 19) தொற்று அபாயம் காரணமாக நாடு முழுவதும் பொது முடக்கம் அமலில் உள்ளது. இந்நிலையில் ஹிமசாலப் பிரதேசத்தில் உனா என்ற இடத்தில் எட்டு வயது ஷாலினி (பெயர் மாற்றப்பட்டது)  என்ற ஒரு குழந்தை புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று வருகிறாள். அவளுக்கு அளிக்கப்பட்டு வந்த சில மருந்துகள் கைவசம் காலியாகிக் கொண்டே வந்தன. இதனால், அவளது பெற்றோர் கவலைப்பட்டனர். காரணம், அந்த மருந்துகள் அரிதானவை என்பதால், அவர்களது ஊரில் கிடைக்கவில்லை. உடனே அவர்கள் தில்லியில் உள்ள தங்களது நண்பருக்குத் தகவல் தெரிவித்து, அந்த மருந்துகள் தில்லியில் கிடைப்பதால் உனாவுக்கு அனுப்பி உதவும்படி கேட்டுக் கொண்டனர்.
போக்குவரத்து, கூரியர் சேவை ஆகியவற்றில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால், மருந்துகளை அனுப்புவதற்கு உதவும்படி அந்த நண்பர் தில்லியில் மத்திய தகவல் தொடர்பு, சட்டம்-நீதி மற்றும் மின்னணு- தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் திரு. ரவிசங்கர் பிரசாதை அணுகி உதவும்படி வேண்டுகோள் விடுத்தார்.
ஷாலினிக்கு அளிக்க வேண்டிய மருந்துகள் ஏப்ரல் 19ம் தேதி வரையில்தான் இருப்பு உள்ளன என்றும் அவர் அமைச்சரிடம் தெரிவித்தார். உடனே அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் அந்த மருந்துகள் உனாவில் இருக்கும் சிறுமி ஷாலினிக்கு உடனடியாக கிடைப்பதற்கு ஏற்பாடு செய்யும்படி இந்திய அஞ்சல் துறைக்கு உத்தரவிட்டார்.
அதையடுத்து தில்லி, ஹரியாணா, பஞ்சாப், ஹிமாசலப் பிரேதசம் ஆகிய அஞ்சல் துறை வட்டங்கள் ஒருங்கிணைந்து உடனடியாக விரைந்து செயல்பட்டன. மருந்துகள் உனாவில் வசிக்கும் ஷாலினி இல்லத்திற்கு உரிய நேரத்தில் சென்றடைந்தன. இதற்காக பஞ்சாப் வட்ட அஞ்சல் துறை தனி மோட்டார் வேனில் நேரடியாக ஷாலினியின் வீட்டிற்கே மருந்துகளை சரியாக ஏப்ரல் 19ம் தேதி அளிக்க ஏற்பாடு செய்தது.
ஒரு அஞ்சல் துறை பணியாளர் மருந்துகளை எடுத்துச் சென்று ஷாலினி வீட்டில்  ஏப்ரல் 19 பகல் 12 மணிக்கு நேரடியாகக் கொண்டு சேர்த்தார். அந்த மருந்துகளை ஷாலினியின் தாய் பெற்றுக் கொண்டார். அவர்கள் கேட்ட அத்தனை மருந்துகளும் போதிய அளவுக்கு இருந்தன. தனது மகளைக் காப்பாற்ற உதவியதற்காக இந்திய அஞ்சல் துறைக்கு அவர் மிகுந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.
                
                
                
                
                
                (Release ID: 1616324)
                Visitor Counter : 306