சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்

உலகின் இலட்சக்கணக்கான சவால்களுக்கு கோடிக்கணக்கான தீர்வுகள் வழங்கும் திறன் இந்தியாவிடம் உள்ளது என பிரதமர் திரு.நரேந்திர மோடி பெருமிதம்: “உள்ளூர்ப் பொருள்களுக்குக் குரல் கொடுப்போம்’’ என்னும் தாரக மந்திரத்தைப் பயன்படுத்தி தன்னிறைவு இந்தியா என்னும் தொலைநோக்கை அடைய 130 கோடி மக்களுக்கும் தமது சுதந்திர தின உரையில் வலியுறுத்தல்.

Posted On: 28 AUG 2020 8:32PM by PIB Chennai

சுதந்திர தினத்தன்று பிரதமர் திரு. நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரை குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், வெபினார் ஒன்று இன்று நடைபெற்றது. மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் மண்டல மக்கள் தொடர்புப் பிரிவு  மற்றும் சென்னை பத்திரிகை தகவல் அலுவலகம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.

பிரதமர் அறிவித்த பல்வேறு திட்டங்கள் மற்றும் கொள்கைகள் குறித்து பல்வேறு துறைகளைச் சேர்ந்த நிபுணர்கள் விளக்கினர். தமிழ்நாடு, புதுச்சேரி ஆர்பிஐ-யின் முன்னாள் மண்டல இயக்குநர் டாக்டர் ஜே. சதக்கத்துல்லா, நிதித்துறைக்கான முன்முயற்சிகள் மற்றும் திட்டங்கள் குறித்து பங்கேற்றவர்களிடம் விளக்கினார். “ஜன் தன் வங்கிகள் உதவியுடன், 40 கோடிக்கும் அதிகமானோர் கணக்குகளைத் தொடங்கினர். இந்தியா முழுவதும் மொபைல் கட்டமைப்பை இணைக்க ஆதார் பெரிதும் உதவியது என்று கூறினார்.

நிதித்துறை உண்மையிலேயே உலகமயமாக்கப்பட்டு, தொழில்நுட்பத்தைச் சிறப்பாகப் பயன்படுத்தி வருகிறது. நிதித் துறையில், அரசு எடுத்த பல்வேறு நடவடிக்கைகளால், அது வலுவடைந்துள்ளதுடன், மக்களிடையே நம்பிக்கை உணர்வை ஏற்படுத்தியுள்ளது என்றார் அவர்.

சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களில், சுமார் 11 கோடி பேர் பணியாற்றுவதால்நாட்டின் பொருளாதாரத்துக்கு அவை மிகவும் முக்கியமானவை. பிரதம மந்திரி முத்ரா திட்டத்தின் மூலம், 25 கோடி தொழில் முனைவோர் பயனடைந்துள்ளனர்’’ என்று அவர் கூறினார்.

தேசிய டிஜிட்டல் சுகாதார இயக்கத்தின் பயன்கள் குறித்து விவரித்த மூத்த பத்திரிகையாளர் திரு.ஆர்.வெங்கடேஷ், “ இத்திட்டத்தின் கீழ், அனைத்துக் குடிமக்களுக்கும் சுகாதார அடையாள அட்டை வழங்கப்படும்செய்து கொள்ளப்பட்டப் பரிசோதனை, நோய் பாதிப்பு, நோய் கண்டறிதல், சிகிச்சை, கொடுக்கப்பட்ட மருந்துகள் உள்ளிட்ட முழுமையான சுகாதார வரலாறு அதில் கொடுக்கப்பட்டிருக்கும். இந்தச் சுகாதார அட்டையின் உதவியுடன், நோயாளியின் உடல்நலத் தகவல்களை மருத்துவரால் எளிதில் அறிந்து கொள்ள முடியும். இது பரிசோதனைகள் மற்றும் நோய் கண்டறிதலை மீண்டும் மேற்கொள்வதைத் தவிர்க்க உதவும். சுகாதார அடையாள அட்டை டிஜிட்டல் வடிவில் மத்திய சர்வரில் சேமிக்கப்படுவதால், இதை எந்தப் பகுதியிலிருந்தும் அணுக முடியும்’’ என்று கூறினார். இந்தத்திட்டம் மருத்துவர்கள், மருத்துவமனைகள், மருந்துக்கடைகள் உள்ளிட்ட மருத்துவத் துறையினர் அனைவரையும் இணைக்கக் கூடியதாகும் என அவர் தெரிவித்தார்.

இந்த முன்முயற்சி மூலம், அடுத்த பத்தாண்டுகளில், அநேகமாக அனைத்து குடிமக்களின் சுகாதாரப் பதிவு டிஜிட்டல்மயமாக்கப்படும். இதன் மூலம் மருத்துவர்கள் நோயாளிகளின் ஆரோக்கியத்தை உன்னிப்பாகக் கவனிக்க இயலும் என்று அவர் கூறினார்சுகாதார ஆவணங்களை முடக்குவதைத் தவிர்க்கும் வகையில், இந்த தகவல்கள் அனைத்தும் பாதுகாப்பாக வைக்கப்படும் என மத்திய அரசு உறுதியளித்துள்ளது என திரு .வெங்கடேஷ் கூறினார். ஆரம்ப சுகாதார மையங்களின் உள்கட்டமைப்பு மேம்பாட்டை நோக்கிய ஒரு முன்னேற்றம் இத்திட்டம் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

ஒரு நாடு ஒரே ரேசன் அட்டைத் திட்டம் குறித்து விளக்கிய திரு.ஆர்.வெங்கடேஷ், புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் இத்திட்டத்தின் மூலம் பயனடைவார்கள் என்றார். ஒவ்வொரு மாநிலத்திலும் ரேசன் முறை மாறுபட்டிருப்பதால், புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் பாதிக்கப்படுகின்றனர். இந்தப் புதிய திட்டத்தின் மூலம், மக்களின் ஆவணங்கள் டிஜிட்டல்மயமாக்கப்பட்டு, தங்கள் சொந்த மாநிலங்களில் பெறத் தகுதி பெற்ற  மானிய விலைப் பொருள்களை பிற இடங்களில் பெறுவதற்கு வழி ஏற்படும் என்று அவர் கூறினார்.

பிரதம மந்திரி பாரதிய ஜன ஔஷதி பரியோஜனா குறித்துப் பேசிய , பிரதமர் பாரதிய ஜன் ஔஷதி கோவை மையத்தின் உரிமையாளர் திருமதி.பி.பாக்யலட்சுமி, ஒரே விதமான மருந்துக்கலப்புள்ள பொதுவான மருந்துகள் (Generic Drug) பற்றிய விழிப்புணர்வு பரவலாக உள்ளது என்றும், 2017-இல் நாளொன்றுக்கு 10 அல்லது 15 ஆக இருந்த எண்ணிக்கை 2020-இல் 100 ஆக உயர்ந்துள்ளது என்றும் கூறினார். “பொதுவான மருந்துகளின் உபயோகத்தில், தற்போதைய தொற்றுப் பரவல் காலத்தில் ஏழை மக்கள் முக்கிய பயனாளர்களாக உள்ளனர். நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், புற்றுநோய் போன்ற முக்கிய நோய்களுக்கான மருந்துகள் இக்கடைகளில் குறைந்த விலையில் கிடைக்கின்றன’’ என்று அவர் கூறினார். மருந்துகள் தவிர, இன்சுலினும் குறைந்த விலையில் விற்கப்படுவதாகவும், சானிடரி நாப்கின்கள் ஒரு பட்டை ஒரு ரூபாய் விலையில் விற்கப்படுகின்றன என்றும்  அவர் தெரிவித்தார்.

கோவை கண்ணம்பாளையத்தைச் சேர்ந்த திரு. சுப்பிரமணியம் தனது அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டார். கடந்த 20 ஆண்டுகளாக, உயர் ரத்த அழுத்தத்துக்கு தான் மருந்து எடுத்துக் கொள்வதாகவும், 2017 முதல் பொது மருந்தை எடுத்துக் கொள்வதால், மாதத்திற்கு ரூ.1500 வீதம் மருந்துச் செலவை தான்  மிச்சப்படுத்துவதாகவும் அவர் கூறினார். சுமார் 200 பேரிடம் இதுகுறித்த விழிப்புணர்வை தான் ஏற்படுத்தியதாக அவர் தெரிவித்தார்.

 சென்னை மண்டல மக்கள் தொடர்புப் பிரிவு இணை இயக்குநர் திரு. ஜே. காமராஜ், சுதந்திர தினத்தன்று பிரதமர் ஆற்றிய உரையின் சாரத்தை சுருக்கமாக விளக்கினார். இந்தியா தன்னிறைவை அடைய வேண்டுமென்ற பிரதமரின் தொலைநோக்கை அவர் எடுத்துரைத்தார். உலகின் இலட்சக்கணக்கான சவால்களுக்கு கோடிக்கணக்கான தீர்வுகள் வழங்கும் திறன் இந்தியாவிடம் உள்ளது என பிரதமர் பெருமிதத்துடன் பேசியதைச் சுட்டிக்காட்டிய அவர்,  “உள்ளூர்ப் பொருள்களுக்குக் குரல் கொடுப்போம்’’ என்னும் தாரக மந்திரத்தைப் பயன்படுத்தி, தன்னிறைவு இந்தியா என்னும் தொலைநோக்கை அடைய 130 கோடி மக்களுக்கும் அவர் அழைப்பு விடுத்ததைச் சுட்டிக்காட்டினார். மறுதிறன் மற்றும் உயர்திறன் மூலம் இதனை எட்டலாம். புதிய கல்விக் கொள்கை, புதுமையான கண்டுபிடிப்பு மற்றும் ஆராய்ச்சி மூலம் இந்தியாவைத் தன்னிறைவு பெற்ற நாடாக மாற்ற முடியும் என்பதை வலியுறுத்துவதாக  அவர் கூறினார். விவசாயத்தில் தன்னிறைவைப் பெற உதவிய விவசாயிகளை பிரதமர் பாராட்டியதை அவர் பகிர்ந்து கொண்டார். விவசாய உற்பத்தி சந்தைப்படுத்துதல் குழு சட்டத்தில் கொண்டு வரப்பட்ட சீர்திருத்தங்களை விளக்கிய அவர், இது விவசாயிகளின் விற்பனை பேர ஆற்றலை அதிகரித்துள்ளதாக கூறினார். பிரதமர் தமது உரையில், புதிய விவசாயக் கட்டமைப்பு நிதியாக 100000 கோடி ஒதுக்குவது பற்றிக் குறிப்பிட்டதை அவர் சுட்டிக்காட்டினார். நிகிழ்ச்சியில் அவர் நன்றியுரையும்  நிகழ்த்தினார்.

முன்னதாக வரவேற்புரையாற்றிய சென்னை பத்திரிகை தகவல் அலுவலக இயக்குநர் திரு. குருபாபு பலராமன், பிரதமரின் உரையின் தொலைநோக்கு பற்றி விவாதிப்பதன் முக்கியத்துவம் குறித்து வலியுறுத்தினார். வரும் ஆண்டுகளில் இந்தியா பெரும் உச்சத்தை எட்டுவதற்கு சாத்தியமான  திட்டம் இது என்று அவர் குறிப்பிட்டார். --------------------------------------------------------------------------------------------

தமிழ்நாடுபுதுச்சேரி  ஆர்பிஐ மண்டல முன்னாள் இயக்குநர் டாக்டர். ஜே. சதக்கத்துல்லா வெபினாரில் உரையாற்றுகிறார்

சென்னை பத்திரிகை தகவல் அலுவலக இயக்குநர் திரு. பி.குருபாபு பலராமன் வெபினாரில் உரையாற்றுகிறார்

Shri. Venkatesh, Senior Journalist addressing in the webinar

பிரதம மந்திரி பாரத் ஜன் ஔஷதி மையத்தின் உரிமையாளர் திருமதி பி.பாக்யலட்சுமி வெபினாரில் உரையாற்றுகிறார்

Shri. J. Kamaraj, Joint Director, Regional Outreach Bureau, Chennai addressing in the webinar.

வெபினாரின் ஒரு காட்சி



(Release ID: 1649367) Visitor Counter : 178


Read this release in: English