சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்

டிஜிட்டல்மயமாக்கல் நிலைத்து நிற்கும்

Posted On: 31 AUG 2020 8:01PM by PIB Chennai

"உயர் கல்வியில் டிஜிட்டல்மயமாக்கல் வெளிப்படைத்தன்மைக்கு வழி வகுத்து ஊழலைத் தடுக்கிறது," என்று சேலம், பெரியார் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர். டாக்டர். பி. குழந்தைவேல் கூறினார். தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் மக்கள் தொடர்பு கள அலுவலகம், சேலம் மற்றும் பத்திரிகை தகவல் அலுவலகம், சென்னை ஆகியவை இதழியல் மற்றும் வெகுஜனத் தொடர்புத் துறை, பெரியார் பல்கலைக்கழகம், சேலத்துடன் இணைந்து நடத்திய இணையக் கருத்தரங்கு ஒன்றில் அவர் இவ்வாறு கூறினார்.

 

உயர்கல்வி நிறுவனங்களில் அதிகரித்து வரும் டிஜிட்டல்மயமாக்கல் என்னும் தலைப்பில் விரிவாகப் பேசிய டாக்டர். குழந்தைவேல், மாணவர்களை விட ஆசிரியர்களுக்கு டிஜிட்டல்மயமாக்கல் சவால் மிகுந்ததாக இருப்பதாகக் குறிப்பிட்டார். மாணவர்கள் அணுகக்கூடிய தகவல் வளங்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் போதிலும், சந்தேகங்களுக்கு விளக்கம் கேட்டு அவர்கள் ஆசிரியர்களை அணுகும் போது, நிறைய ஆய்வு செய்து சமீபத்திய தகவல்களை ஆசிரியர்கள் வழங்க வேண்டியிருக்கிறது.

 

நேர்மறை அம்சத்தைக் குறித்து பேசிய அவர், டிஜிட்டல்மயமாக்கல் மூலம் உலகெங்கிலும் உள்ள நிபுணர்கள் நடத்தும் இணையக் கருத்தரங்குகளில் நம்மால் கலந்து கொண்டு அறிவைப் பெருக்கிக் கொள்ள முடிகிறதென்றும், இல்லையென்றால் இது சாத்தியமாகியிருக்காது என்றும் அவர் கூறினார். கல்வி நிறுவனங்களின் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதில் இந்திய அரசு கவனம் செலுத்துகிறது என்று அவர் கூறினார்.

 

"டிஜிட்டல் சந்தைப்படுத்துதல் விவசாயிகளுக்கு மிகவும் உதவிகரமாக உள்ளது. பல்வேறு நகரங்களின் விலை வித்தியாசங்களைப் பற்றி விவசாயிகளுக்கு முன்பெல்லாம் தெரியாது. ஆனால் தற்போது, டிஜிட்டல் சந்தைப்படுத்துதலின் உதவியோடு, உதாரணத்துக்கு சேலத்தில் அல்லது கோயமுத்தூரில் இருக்கும் ஒரு விவசாயி, தனது பொருளுக்கு மகாராஷ்டிராவில் என்ன விலை என்பதைத் தெரிந்து கொண்டு, அதன் மூலம் சிறந்த விலைக்குத் தனது பொருளை விற்க முடியும்," என்று டாக்டர். குழந்தைவேல் கூறினார். டிஜிட்டல் சந்தைப்படுத்துதலின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு, டிஜிட்டல் சந்தைப்படுத்துதல் குறித்த தொழில் சார்ந்த படிப்புகளை பெரியார் பல்கலைக்கழகத்தில் அறிமுகப்படுத்தும் திட்டங்கள் உள்ளன," என்று அவர் மேலும் கூறினார்.

 

மேலும் பேசிய அவர், மென்பொருள் மற்றும் டிஜிட்டல் வர்த்தகத் தொழில்நுட்பம் தொடர்பான 'இண்டஸ்ட்ரி 4.0'-இன் முக்கியத்துவத்தைப் புரிந்து கொண்டு, திறன் சார்ந்த படிப்புகளுக்கு பல்கலைக்கழகம் அதிக முக்கியத்துவத்தை வழங்குவதாகத் தெரிவித்தார். "நாட்டிற்கும், நமது விஞ்ஞானிகளுக்கும் இண்டஸ்ட்ரி 4.0 மிகவும் முக்கியமானதாகும். எனவே, மிகைப்படுத்தப்பட்ட மெய்மம் (Augmented Reality) மற்றும் மெய்நிகர் மெய்மம் (Virtual Reality) தொழில்நுட்பங்கள் பெரியார் பல்கலைக்கழகத்தின் இதழியல் மற்றும் வெகுஜனத் தொடர்புத் துறையால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன," என்று அவர் மேலும் தெரிவித்தார்.

 

டிஜிட்டல் சகாப்தத்தில் கற்பித்தல் மற்றும் கற்றலில் ஏற்படும் மாற்றங்கள் என்னும் தலைப்பில் பெரியார் பல்கலைக்கழக இதழியல் மற்றும் வெகுஜனத் தொடர்பு துறை பேராசிரியர் மற்றும் தலைவரும், ஆட்சிமன்றக் குழு உறுப்பினருமான டாக்டர். வி. நடராஜன்  பேசினார். அனுபவ மெய்மத் தொழில்நுட்பம் மெய்நிகர் உலகத்துக்கு மாணவர்களைக் கொண்டு செல்வதாகவும், அங்கு அவர்கள் எளிமையான மற்றும் சிறப்பான முறையில் கருத்துகளைப் புரிந்து கொள்ளலாம் என்றும் அவர் தெரிவித்தார். "இந்தத் தொழில்நுட்பத்தின் மூலம் கடினமான பாடங்களையும் சிறப்பாக கற்றுக் கொள்ளலாம். டிஜிட்டல் கற்றலின் விளையாட்டுமயமாக்கல் என்னும் மற்றொரு முறையின் மூலம் ஊடாடும் விளையாட்டுகளை விளையாடிக் கொண்டே மாணவர்கள் கற்கலாம். விடையின் துல்லியத்தின் மூலமும், அதை முடிக்க எடுத்துக் கொண்ட நேரத்தைக் கொண்டும் புள்ளிகளை மதிப்பிடலாம்," என்று அவர் கூறினார்.

 

திறன் சார்ந்த படிப்புகள் தான் எதிர்காலம் என்றும், 20 லட்சத்துக்கும் அதிகமான முழுக்கவும் திறன் சார்ந்த வேலைவாய்ப்புகள் 2025-இல் உருவாகும் என்றும், அவற்றுக்கு வெறும் பட்டப்படிப்பு மட்டும் போதாது என்றும் அவர் மேலும் கூறினார். இதைக் கருத்தில் கொண்டு, பல்வேறு திறன் சர்ந்த பயிற்சிகளை தேசிய திறன் மேம்பாட்டுக் கழகம் அறிமுகப்படுத்தியுள்ளது என்று டாக்டர். நடராஜன் கூறினார்.

 

மிகைப்படுத்தப்பட்ட மெய்மம் மற்றும் மெய்நிகர் மெய்மம் ஆகியவை பாடத்திட்டத்தில் மனித இடையீட்டை அதிகளவில் குறைப்பதாகவும், வெளியீடு ஒரு சார்பாக இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். "இடவசதி தேவைப்படாத மெய்நிகர் ஆய்வகங்கள் தான் எதிர்காலம் ஆகும். இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியல் ஆகிய அனைத்துப் பாடங்களுக்கும் இவ்வகையான ஆய்வகங்கள் பயனுள்ளதாக இருக்கும். இவற்றைத் தவிர, இலக்கியம், மொழி மற்றும் இசை ஆகியவற்றையும் தொழில்நுட்பத்தின் மூலம் சிறப்பாகக் கற்றுக் கொள்ளலாம்," என்று அவர் கூறினார்.

 

சமீப காலங்களாக சமூக ஊடகங்களில் பொய்ச் செய்திகள் பரவுவதைப் பற்றிய கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த அவர், ஒழுங்கான கல்வியும், ஊடகங்களைப் பற்றிய விழிப்புணர்ச்சியையும் மாணவர்களுக்கு வழங்குவது அவசியம் என்றும் இது தொடர்பான தகவல்கள் பள்ளிக் கல்வியில் சேர்க்கப்பட வேண்டும் என்றும் கூறினார்.

 

தலைமை உரையாற்றிய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத் தலைமை இயக்குநர் (தென் மண்டலம்) திரு.எஸ். வெங்கடேஸ்வர், ஆந்திரப் பிரதேசத்தில் நிர்வாகப் பணிகள் முழுக்க டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளதாகவும், வெளிப்படைத்தன்மை, துல்லியம் மற்றும் வேகத்தை இது உறுதி செய்வதாகவும் கூறினார். பேராசிரியர்களின் பணியைப் பாராட்டிய அவர், சிந்தனை ஊற்றுகளாக அவர்கள் விளங்குவதாகவும், தகவல்களின் மிகப் பெரிய களஞ்சியங்கள் என்றும் புகழாரம் சூட்டினார்.

 

அறிமுக உரையாற்றிய திரு. குருபாபு பலராமன், இயக்குநர், பத்திரிகை தகவல் அலுவலகம், சென்னை, உயர் கல்வியில் டிஜிட்டல்மயமாக்கத்தை பெருந்தொற்று கட்டாயமாக்கியுள்ளதாக கூறினார். கல்லூரி மாணவர்களுக்கு மட்டுமே ஒரு காலத்தில் நடத்தப்பட்டுக் கொண்டிருந்த டிஜிட்டல் வகுப்புகள், பள்ளிக் குழந்தைகளின் வாழ்க்கைக்குள்ளும் தற்போது நுழைந்திருப்பதாக அவர் கூறினார். குறிப்பாக மாணவர்களின் ஆராய்ச்சிப் பணிகளில் கருத்துத் திருட்டைத் தடுக்க டிஜிட்டல் தளங்கள் பயனுள்ளதாக இருக்கின்றன. ஆசிரியர்களின் பணித் திட்டம் நிற்காமல் இருப்பதை டிஜிட்டல்மயமாக்கல் உறுதி செய்கிறது என்று அவர் மேலும் தெரிவித்தார்.

 

முன்னதாக, வரவேற்புரையாற்றிய திரு. காமராஜ், இணை இயக்குநர், மண்டல மக்கள் தொடர்பு அலுவலகம், சென்னை, மாண்புமிகு பிரதமர் கூறியவாறு நமது வளங்களை வலுப்படுத்தவும், நாட்டை தற்சார்பாக்கவும் பல்வேறு வழிகளை கோவிட்-19 காட்டியுள்ளது என்றார். டிஜிட்டல்மயமாக்கலுக்குப் பிறகு ஆன்லைன் பரிவர்த்தனைகள் வெகுவாக வளர்ந்துள்ளதாக அவர் கூறினார்.

 

திரு. எஸ். முரளி, கள விளம்பர அலுவலர், மக்கள் தொடர்பு கள அலுவலகம், சேலம், நன்றியுரை நல்கினார்.

 

***



(Release ID: 1650117) Visitor Counter : 239


Read this release in: English