சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம்

தேசிய நெடுஞ்சாலை ஆணையகத்துக்கு 2020-21ஆம் நிதியாண்டில் முந்தைய 3 ஆண்டுகளைவிட அதிகபட்ச நீளத்துக்குத் திட்டங்கள் ஒதுக்கீடு


2020 ஏப்ரல் - ஆகஸ்டு காலத்தில் 844 கிலோ மீட்டர் நீளத்துக்கு ரூ.31 ஆயிரம் கோடி மதிப்பில் 26 திட்டங்களுக்கு அனுமதி

Posted On: 31 AUG 2020 5:41PM by PIB Chennai

கொரோனா வைரஸ் பாதிப்புச் சூழ்நிலையால் சவால்கள் ஏற்பட்டுள்ள நிலையிலும் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்துக்கு, 2020-21ஆம் நிதியாண்டில் இதுவரையில் அதிகபட்ச நீளத்துக்கான திட்டங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. கடந்த 3 ஆண்டுகளில் இதே காலக்கட்டத்தில் ஒதுக்கப்பட்டதைவிட இது அதிகமானது. 2020 நிதியாண்டில் ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரையிலான காலத்தில் 744 கிலோ மீட்டர் நீளத்துக்கான 26 திட்டங்கள் தங்களுக்குக் கிடைத்திருப்பதாக தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் தெரிவித்துள்ளது. 2019-20 நிதியாண்டில் இதே காலக்கட்டத்தில் 676 கி.மீ. நீளத்துக்கும், 2018-19 நிதியாண்டில் இதே காலக்கட்டத்தில் 504 கி.மீ. நீளத்துக்கும் தங்களுக்கு அனுமதி கிடைத்ததாக ஆணையம் குறிப்பிட்டுள்ளது. இந்த 26 திட்டங்களுக்கான மதிப்பீடு ரூ.31 ஆயிரம் கோடி. கட்டடங்கள் கட்டுமானம், நிலம் கையகப்படுத்துதல் மற்றும் கட்டுமானத்துக்கு முந்தைய இதர செயல்பாடுகளுக்கான செலவுகளும் இதில் அடங்கும்.

நடப்பு நிதியாண்டில் 4500 கி.மீ. நீளத்துக்கான நெடுஞ்சாலைத் திட்டங்களைப் பெறுவதற்கு ஆணையம் இலக்கு நிர்ணயித்துள்ளது. அந்த இலக்கை மிஞ்சுவதற்கான வாய்ப்பை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.

முடக்கநிலை மற்றும் இப்போதைய நெருக்கடியிலும், இத் துறையில் மற்றவர்களின் நம்பிக்கையைப் பெறும் வகையில் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் பல்வேறு முன்முயற்சிகளை எடுத்துள்ளது. பணப்புழக்கத்தை எளிதாக்கவும், ஒப்பந்ததாரர்களுக்குப் பணம் கிடைக்கச் செய்யவும், அலுவலகங்களை மூடியதன் காரணமாக யாருக்கும் பணப்பட்டுவாடா தாமதம் ஆகிவிடாமல் இருக்க ஆணையம் நடவடிக்கை எடுத்தது. மார்ச் 2020 முடக்கநிலை காலத்தில் டிஜிட்டல் தளங்கள் மூலம் ரூ.10 ஆயிரம் கோடி பணத்தை ஆணையம் வழங்கியுள்ளது. நடப்பு நிதியாண்டின் முதலாவது காலாண்டில், பொருள்கள் வழங்கிய நிறுவனங்களுக்கு இந்த ஆணையம் ரூ.15 ஆயிரம் கோடிக்கும் மேலாக பணம் பட்டுவாடா செய்துள்ளது. மேலும், ஒப்பந்ததாரர்களுக்கு மாதாந்திரப் பட்டுவாடா செய்வதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதனால் பணிகளைச் செய்யும் நிறுவனங்கள் ஊக்குவிக்கப்பட்டன. எனவே சாலை அமைக்கும் வேகம் அதிகரித்துள்ளது.

பணம் வழங்கல் மற்றும் நெடுஞ்சாலை உருவாக்கம் அதிகரித்துள்ள நிலையில், நோய்த் தொற்றால் பாதிப்பு ஏற்பட்ட சூழ்நிலையிலும், இந்த ஆணையத்துக்கு ஆண்டின் தொடக்கம் நல்லபடியாக அமைந்துள்ளது. தேசிய நெடுஞ்சாலைகள் கட்டமைப்பைத் துரிதமாக உருவாக்கி, பாதுகாப்பான, தடையற்ற, எளிதான பயண அனுபவத்தை வழங்குவதற்கு ஆணையம் முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது.



(Release ID: 1650163) Visitor Counter : 211