சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்

ஒரே பாரதம் உன்னத பாரதம் திட்டம் நாட்டை கலாச்சார ரீதியில் ஒருங்கிணைக்கிறது

ஜம்மு காஷ்மீர், லடாக்குடன் தமிழகம் சேர்கிறது

Posted On: 02 SEP 2020 7:07PM by PIB Chennai

உலகின் பெரிய ஜனநாயக நாடான இந்தியா, வேற்றுமையில் ஒற்றுமை என்னும் தாரக மந்திரத்துடன் முக்கியத்துவம் பெற்றுத்  திகழ்கிறது. இதனால், கோவிட்-19 தொற்றை எதிர்த்து போராடுவதில் நாடு ஒன்றுபட்டு நிற்பதில் வியப்பு ஏதுமில்லை. இந்தச் சூழலில் விவசாயிகள் அபரிமிதமான மகசூலைக் குவித்து , உணவு பாதுகாப்பை உறுதி செய்து உயர்ந்து நிற்கின்றனர். இதற்காக மாண்புமிகு பிரதமரின் பாராட்டையும் அவர்கள் பெற்றுள்ளனர். பொது முடக்க காலத்தில், ஷ்ராமிக் ரயில்கள், நாடு முழுவதும், பரவியிருந்த லட்சக்கணக்கான புலம் பெயர்ந்த தொழிலாளர்களை அவர்களது சொந்த நகரங்களுக்கும், கிராமங்களுக்கும் அழைத்துச் சென்றுள்ளது. டெல்டா விவசாயிகளுக்கு பிற மாநிலங்களிலிருந்து ரயில்கள் மூலம் உரங்கள் திருச்சிக்கு கொண்டு வரப்பட்டன. இதேபோல உணவு தானியங்கள் பிற மாநிலங்களுக்கு கொண்டு செல்லப்பட்டன. கலாச்சார வேற்றுமை, பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த மக்களுக்கு இடையே பரஸ்பர கலந்துரையாடல்  மூலம் மகிழ்ச்சிகரமாக கொண்டாடப்பட வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார். அப்போதுதான், நாடு முழுவதும் ஒருமித்த எழுச்சியை சாதாரண மனிதன் புரிந்து கொள்ள முடியும். ஒரே பாரதம், உன்னத பாரதம் 2015 அக்டோபர் 31-ம் தேதி, நவீன இந்தியாவை ஒருங்கிணைத்த, இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் பட்டேலின் 140-வது பிறந்த நாள் அன்று,  பிரதமரால் அறிவிக்கப்பட்டது.  ஒரே பாரதம் உன்னத பாரதம் இயக்கத்தின்படி, ஒரு ஆண்டுக்கு ஒவ்வொரு மாநிலம், யூனியன் பிரதேசமும், மற்றொரு மாநிலம் /யூனியன் பிரதேசத்துடன் கலாச்சார ரீதியில் இணைக்கப்படும். அந்த மாநிலங்கள், தங்கள் மொழி, இலக்கியம், உணவு, திருவிழாக்கள், கலாச்சார விழாக்கள், சுற்றுலா போன்றவற்றில் நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து அவற்றை பரஸ்பரம் பரிமாறிக்கொள்ளும்.

அந்த வகையில், தமிழகம், ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக்குடன் கலாச்சார ரீதியில் இணைகிறது. இளைஞர்கள் கலாச்சாரத்தை தெரிந்து கொள்ளும் வகையில், அவர்களது கலாச்சார பரிமாற்றங்கள் நடைபெறும். வடக்கு எல்லையில் உள்ள ஜம்மு காஷ்மீர், தெற்கு கடைக்கோடியில் உள்ள தமிழகத்துடன் இந்த வகையில் இணைக்கப்பட்டுள்ளது. இது பன்முகப்பட்ட கலாச்சாரம் மற்றும் பழக்க வழக்கங்களை உண்மையிலேயே வெளிப்படுத்துவதாகும். இரண்டு மாநிலங்களுக்கும் இடையே, ஒற்றுமைகளை விட வேறுபாடுகளே அதிகம் உள்ளன. தட்ப,வெப்ப நிலையும் இரு மாநிலங்களிலும், ஒன்றுக்கொன்று முற்றிலும் வேறுபட்டதாகும். குல்மார்க்,ஶ்ரீநகர், சோனாமார்க் ஆகிய சுற்றுலா இடங்களை காஷ்மீர் கொண்டுள்ளது.  ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு போன்ற ரம்மியமான இடங்களை தமிழகம் கொண்டுள்ளது.  மனதை மயக்கும் ஆகார்பால், நூரி சாம்ப், ஸப்ராவன் ஆகிய அருவிகள் ஜம்மு காஷ்மீரில் உள்ளன. குற்றாலம், திற்பரப்பு, ஒகேனக்கல் ஆகிய அருவிகள் தமிழகத்தில் சுற்றுலா பயணிகளைக் கவரும் இடங்களாகத் திகழ்கின்றன.  ஜம்மு காஷ்மீர், லடாக் ஆகியவை பனி சூழ்ந்து, பனிக்கட்டிகளுடன் தனித்துவமானவையாக உள்ளன. தமிழகம் நீண்ட கடற்கரைக்கு பெயர் பெற்றது. பருவநிலையைப் போல, இரு பகுதிகளிலும், ஆடை அணிவதலும் முற்றிலும் வேறுபாடுகள் காணப்படுகின்றன.  இருப்பினும், இசை மற்றும் நடனத்தில் ஈடுபாடு கொள்வதில் இரு மாநிலங்களும் பொதுவானவையாகத் திகழ்கின்றன. தமிழகத்தில், பரதநாட்டியத்துடன் செழுமை வாய்ந்த பழமையான நடனக்கலை முதலிடத்தில் உள்ளது. சோழ, பல்லவ, பாண்டிய மன்னர்கள், நடனக் கலைக்கு கட்டியம் கூறும் வகையில் சிதம்பரம் நடராஜர் ஆலயம், தஞ்சை பிரகதீஸ்வரர் ஆலயம் போன்ற    கோயில்களை எழுப்பி அக்கலையை ஊக்குவித்தனர். கரகாட்டம், கோலாட்டம், மயிலாட்டம், பொய்க்கால் குதிரை ஆட்டம், தப்பாட்டம், கூத்து போன்ற நாட்டுப்புற நடனங்கள் தமிழகத்தின் ஒவ்வொரு பகுதியிலும் புகழ் பெற்றவை ஆகும்.

கண்ணைக்கவரும் வகையில் உடைகளை அணிந்து மக்கள் ஆடும் தும்ஹால் நடனம் போன்றவை ஜம்மு காஷ்மீரில் சிறப்பு வாய்ந்த தாகும்.  ஈத், ரம்ஜான் போன்ற பண்டிகைகளின் போது ரவுப் நடனம் ஆடப்படுவது வழக்கம். திருமணங்களின் போது பச்சா நக்மா என்னும் நடனத்தை சிறுவர்கள் ஆடுவார்கள். திருமண சடங்குகளுக்கு பின்னர், மணமகள் தனது வீட்டை விட்டு புறப்டும் போது, வூகி நிச்சான் என்னும் நடனம் நடைபெறும். காஷ்மீரத்து சால்வைகள், மிளகாய், காஷ்மீர் குங்குமப்பூ ஆகியவை தென்பகுதியில் பிரசித்தமானவை. தெற்கில் கிடைக்கும், மிளகு உள்ளிட்ட இதர மசாலா பொருட்களுக்கு வடக்கில் வரவேற்பு  அதிகம். இரு மாநிலங்களிலும் அரிசி பொதுவான உணவாகவும், தேநீர் பொதுவான பானமாகவும் உள்ளன. தென்பகுதி மக்கள், ஜம்முவில் உள்ள வைஷ்ணவ தேவி, அமர்நாத் யாத்திரை மேற்கொள்வதும், அங்கிருந்து மக்கள்  ராமேஸ்வரம், மதுரை, காஞ்சிபுரம், திருச்சி, தஞ்சை ஆகிய இடங்களுக்கு புனித யாத்திரை மேற்கொள்வதும் வழக்கமானவையாகும். சூரிய உதயம், அஸ்தமனத்தைக் காண கன்னியாகுமரிக்கு சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வருவது போல, ஶ்ரீநகர் தால் ஏரியில் படகு வீடுகளில் பயணிக்க சுற்றுலா பயணிகள் அங்கு செல்வதும் வழக்கம்.

கோவிட்-19 பரவலைத் தடுக்கவும், கட்டுப்படுத்தவும் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளால், மக்களின் போக்குவரத்து முடங்கி, சுற்றுலா தொழில் பெரிதும் பாதிப்புக்குள்ளாகியிருக்கிறது. மத்திய அரசின் மக்கள் தொடர்பு பிரிவுகளால், இதுதொடர்பான வெபினார்கள் நடத்தப்படுகின்றன. தமிழகம் மற்றும் ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த பல்வேறு கல்லூரிகளில் கலாச்சார கருத்துகள் பரிமாறப்படுகின்றன. தமிழகம், ஜம்மு காஷ்மீரைப் போல, பஞ்சாப், ஆந்திராவுடனும், இமாச்சலப்பிரதேசம் கேரளாவுடனும், உத்தரகாண்ட், கர்நாடகத்துடனும், அரியானா, தெலங்கானாவுடனும், புதுச்சேரி, டாமன், டையூவுடனும், லட்சத்தீவு, அந்தமான் நிக்கோபார் தீவுகளுடனும் இணைக்கப்படுகின்றன. தற்போதைய  சிக்கலில் இருந்தும், பின்னடைவில் இருந்தும் , நாட்டை மீட்டு, மீள் எழுச்சி பெற்று பெருமையுடன் திகழவைக்க, கோவிட்-19 தொற்றுக்கு எதிராக  அனைவரும் ஒன்றுபட்டு போராட வேண்டியது அவசியமாகும்.

-------------------------------------

 

 

 



(Release ID: 1650734) Visitor Counter : 3406


Read this release in: English