சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
azadi ka amrit mahotsav

பொதுமக்கள் பெரிதும் அறிந்திராத உயிர் தியாகம் செய்த விடுதலைப் போராளிகளை முன்னிலைப்படுத்துவதே 75-வது சுதந்திர தின விழாக் கொண்டாட்டத்தின் முக்கிய நோக்கம்

प्रविष्टि तिथि: 17 AUG 2021 12:10PM by PIB Chennai

இந்திய அரசின் மதுரை மக்கள் தொடர்பு கள அலுவலகம் சார்பில் மதுரை பெட்கிராட் தொண்டு நிறுவனம், மதுரை சாதனைப் பெண்கள் குழு மற்றும் தேனி மாவட்டம் ஏ.எச்.எம்.டிரஸ்ட் ஒத்துழைப்போடு 75- ஆம் ஆண்டு இந்திய சுதந்திர தினக்கொண்டாட்டம் என்ற தலைப்பில் இணையவழி கருத்தரங்கம் நேற்று நடைபெற்றது.

    இந்நிகழ்ச்சிக்கு புதுச்சேரி மக்கள் தொடர்பு கள அலுவலக துணை இயக்குனர் முனைவர் தி.சிவகுமார் தலைமை வகித்து பேசியதாவது:

விடுதலைப் போராட்டத்தில் கவனிக்கப்படாத, கண்டுகொள்ளப்படாத புகழப்படாத போராளிகளை, உயிர் தியாகம் செய்தவர்களை அடையாளம் கண்டு அவர்கள் முன்னிலைப்படுத்தப்படவேண்டும் என்பதுதான் 75-வது சுதந்திர தின விழாக் கொண்டாட்டத்தின் முக்கிய நோக்கம். 1930, 40-களில் பிறந்தவர்களுக்கு சுதந்திரத்தைப் பற்றி சிறிது தெரியும், இதற்கு முன்பு பிறந்தவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், சுதந்திரத்திற்கு பின்பு பிறந்தவர்களுக்கு நாம் பெற்றுள்ள சுதந்திரத்தின் அருமை குறித்துத் தெரிவதில்லை.  இன்றைய இளைஞர்களுக்கு தொலைத்தொடர்பு சாதனங்கள் இல்லாமல் மற்ற அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்து ஒரு நாள் வீட்டிலேயே இருக்கச் சொன்னால் அவர்களால் இருக்க முடியாது. அப்போதுதான் அவர்களுக்கு தெரியவரும் சுதந்திரத்திற்காகப் போராடி பல ஆண்டுகள் சிறைவாசம் செய்த தியாகிகளின் அருமையைப்பற்றி.  பிரபலமான தலைவர்கள் போராட்டத்தை ஒருங்கிணைத்தார்கள், உயிர்த்தியாகம் செய்தார்கள். ஆனால், இவர்கள் ஒருங்கிணைத்தது யாரை என்று பார்த்தால் உணர்வுபூர்வமாகப் போராட்டத்தில் ஈடுபட்ட கோடிக்கணக்கான மக்களை, லட்சக்கணக்கில் சிறை சென்றவர்களை மற்றும் ஆயிரக்கணக்கில் உயிர் தியாகம் செய்தவர்களை. எனவே ஒருங்கிணைத்தவர்களும் பங்கு பெற்றவர்களும் சம அளவில் முக்கியம் என்ற உணர்வு ஒவ்வொருவருக்கும் வரவேண்டும். எனவே நம்மைச் சுற்றி நம் ஊரில், நமது மாவட்டத்தில், போராட்டத்தில் ஈடுபட்டவர்களை பற்றி தெரிந்து கொள்ளவேண்டும் என்ற அக்கறை வரவேண்டும். நமது நாடு அஹிம்சை முறையில் போராடி வெற்றிபெற்ற நாடு மட்டுமல்லாமல் ஆண்களுக்குச் சமமாகப் பெண்களும் போராடி பெற்றதாகும். ஆனால் வரலாற்றில் இவர்கள் அதிக அளவில் இடம் பெறவில்லை, வெறும் காவல் நிலையக் குறிப்புகளாகவும் மற்றும் சிறைச்சாலைக் குறிப்புகளாகவும் மட்டுமே உள்ளனர். நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்களின் இந்திய தேசிய ராணுவத்தில் இருந்து வெளிநாடுகளில் உயிர் இழந்தவர்கள் தகவல்கள் நம்மிடம் இல்லை. போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பிணக்குவியல்களாகவே அடையாளப் படுத்தப்பட்டார்களே தவிர சுதந்திர வீரர்களாக அடையாளம் காணப்படவில்லை.

    சென்னையில் மீனவக் குடும்பத்தைச் சேர்ந்த 13 வயது சின்னக்கண்ணன் ப்ரெசிடெண்சி (மாநிலக்) கல்லூரியில் விளையாட்டு மைதானத்தில் பந்து பொறுக்கித்தரும் வேலைபார்த்தவர். ஒத்துழையாமை இயக்க போராட்டத்தில் பங்குபெற்று ஜெய்ஹிந்த் என்று கூறிக்கொண்டிருந்த வேளையில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் இறந்து விடுகிறார். இவர் சுதந்திரப் போராட்டத் தியாகி இல்லையா? தேவகோட்டையைச் சேர்ந்த 24 வயது ஆறுமுகம் ஆச்சாரி வெள்ளையனே வெளியேறு இயக்கப் போராட்டத்தில் பங்குபெற்றபோது நடந்த துப்பாக்கிச் சூட்டில் மார்பிலே குண்டு பாய்ந்து இறந்தார்.  இதேபோல் சென்னையிலும் நிறையபேர் இறந்திருக்கிறார்கள்.  குறிப்பாக பி.என்.சி. மில் தொழிலாளர்கள் கூலிப் பிரச்சனை உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களை பிரிட்டிஷ் அரசுக்கு எதிராக நடத்தினார்கள். மார்ச் 11, 1942-இல் நடந்த போராட்டம், அதனைத் தொடர்ந்து நடந்த துப்பாக்கிச் சூட்டில் எண்ணற்றவர்கள் இறப்பு, அவர்களுக்கு ஆதரவு கொடுத்தவர்களும் இறந்துபோனார்கள், இதில் ராதாகிருஷ்ணன் என்கின்ற 17 வயது பால் வியாபாரி உள்ளிட்டோர் அடங்குவர்.  எனவே, இப்படிப்பட்ட தியாகிகளையும் சம்பவங்களையும் நாம் தெரிந்து கொள்வது அவசியம் என தெரிவித்தார்.

 

காந்தி கிராம கிராமிய நிகர்நிலைப் பல்கலைக்கழக காந்திய நிர்மாணத்திட்ட அருங்காட்சியக இயக்குனர், முனைவர் த.ரவிச்சந்திரன் பேசுகையில் உலக நாடுகளின் விடுதலைப் போர்களில் இந்தியாவின் தனித்துவம் என்ற தலைப்பில் கருத்துரை வழங்கினார். காந்தியடிகள் தலைமையில் நடைபெற்ற இந்திய விடுதலைப் போராட்டமானது அஹிம்சை முறையில் நடைபெற்றது. பிரெஞ்சுப் புரட்சி, அமெரிக்க விடுதலைப்புரட்சி மற்றும் ரஷ்ய விடுதலைப்புரட்சி போன்றவற்றில் லட்சக்கணக்கான அப்பாவி மக்களும் போரிட்டவர்களும் ராணுவத்தினரும் கொல்லப்பட்டனர்.  ஆனால், நாம் இந்திய விடுதலை இயக்கத்தில் நாமே ரத்தம் சிந்தினோம், நாமே உயிர் துறந்தோம்.  எனவே, இது ஒரு தனித்துவமிக்க போராட்டம். மேலும், இந்திய அரசியல் சாசனமானது உலகின் எந்த நாடுகளிலும் இல்லாத தனித்துவம் வாய்ந்த சமய சார்பின்மையை உள்ளடக்கியுள்ளது. எனவே தான் இஸ்லாமியர்களும், தலித்துகளும் சீக்கியர்களும் தலைமை பொறுப்பினை ஏற்று திறம்பட செயல்பட முடிகின்றது என்று கூறினார்.

 

காந்தி கிராம கிராமிய நிகர்நிலைப் பல்கலைக்கழக பேராசிரியர் மற்றும் தமிழ் மற்றும் இந்திய மொழிகள் புலத்தலைவர் முனைவர் பா.ஆனந்தகுமார் தமிழ் இலக்கியங்களில் இந்திய விடுதலைப்போர் என்ற தலைப்பில் பேசியதாவது :

`இந்திய விடுதலைப் போர் தமிழ் இலக்கியத்தில் விரிவான பதிவைப் பெற்றுள்ளது. பாரதியாரின் படைப்புகள் இதன் மையமாகத் திகழ்கின்றன. பாரதியார், காசி, கல்கத்தா, சூரத் ஆகிய இடங்களில் நடந்த இந்திய தேசிய காங்கிரஸ் மாநாடுகளில் கலந்து கொண்டுள்ளார். இந்திய விடுதலையை களத்தில் நின்று பாடியவர். திலகரை அரசியல் குருவாக ஏற்றுக் கொண்டு அவரது பால பாரத சங்கத்தில் இணைந்து செயல்பட்டார். அவரது ஒவ்வொரு தேசியப் பாடலுக்கும் வரலாற்றுக் குறிப்பு உண்டு. விவேகானந்தரின் சகோதரர் யுகாந்தர் பத்திரிகை ஆசிரியர் பூபேந்திர நாத் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்ட போது பூபேந்திர விஜயம் பாடலைப் பாடினார். வ.உ.சி.‌ சிறையில் அடைக்கப்பட்ட போது சுதந்திர தாகம் பாடலைப் பாடினார். சென்னையில் 1907-ஆம் ஆண்டு நடைபெற்ற சுதேசிய  ஊர்வலத்தின் இறுதியில் தேசியக் கொடி ஏற்றப்பட்டது. அப்போது தான் தாயின் மணிக்கொடி பாடலைப் பாடினார். பாரதி காட்டும் தேசியக் கொடியில் ஒருபுறம் இந்திரனின் வச்சிராயுதமும் மற்றொரு புறம் இஸ்லாமியரின் இளம் பிறையும் நடுவில் வந்தே மாதரம் எனும் மந்திரச் சொல்லும் இடம் பெற்றுள்ளது. பாரதியைப் போல பாரதிதாசன், நாமக்கல் இராமலிங்கம், கவிமணி ஆகிய கவிஞர்களும் இந்திய விடுதலையை வரவேற்றுப் பாடியுள்ளனர். நாடகத்தின் மூலம் தெ.பொ.கிருஷ்ணசாமி பாவலர், மதுரகவி பாஸ்கர தாஸ், விசுவநாத தாஸ் ஆகியோர் விடுதலைப் போராட்ட உணர்வைப் பொது மக்களிடம் கொண்டு சென்றனர்

சிவகங்கை மன்னர் துரைசிங்கம் அரசு கலைக்கல்லூரி வரலாற்றுத்துறை இணைப்பேராசிரியர் முனைவர் சு.கண்ணன் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் நோக்கமும் அதன் தாக்கமும் என்ற தலைப்பில் பேசியதாவது :

`ஆகஸ்ட் 8, 1942-இல் காந்தி தலைமையில் துவங்கிய வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் முக்கிய நோக்கம் இந்தியாவிலிருந்து ஆங்கிலேய ஆட்சியை உடனடியாக வெளியேற்ற வேண்டும்; வெள்ளையர்கள் அனைவரும் வெளியேற்றப்பட வேண்டும்; ஏகாதிபத்தியம் மற்றும் பாசிசத்தை ஒழித்து இந்தியாவை சுதந்திர நாடக அறிவிக்க வேண்டும்; ஆங்கிலேயர் வெளியேற்றத்திற்கு பிறகு இந்தியாவில் தற்காலிக அரசை உருவாக்க வேண்டும்; ஆங்கில ஆட்சிக்கு எதிராக சட்ட மறுப்பு இயக்கத்தைத் துவங்க வேண்டும் மற்றும் ஜப்பானின் தாக்குதலிலிருந்து இந்தியாவை காப்பாற்ற வேண்டும். இது 'வெள்ளையனே வெளியேறு' மற்றும் 'செய் அல்லது செத்து மடி' என்ற இரண்டு தாரக மந்திரங்களை தந்தது. இதனுடைய தாக்கம் என்று சொல்லப்போனால் ஆகஸ்ட் 9, முதல் 15 வரை நகர்ப்புறங்களிலும், ஆகஸ்ட் 16 முதல் 30 வரை கிராம அளவிலும் செப்டம்பர் 30 முதல் டிசம்பர் 30 வரை இளைஞர் மத்தியிலும் பரவியது. மக்கள் அரசு மூன்று இடங்களிலே நிறுவப்பட்டது.  இறுதியில், இனி இந்தியாவை ஆங்கிலேயர்கள் ஆட்சி செய்ய முடியாது என்பதை அவர்களுக்கு உணர்த்தியது எனத் தெரிவித்தார்.

 

இந்நிகழ்ச்சிக்கு ஏ.எச்.எம்.டிரஸ்ட் மேலாண்மை இயக்குனர் திரு முகமது ஷேக் இப்ராஹிம் முன்னிலை வகித்தார். பெட்கிராட் நிறுவன ஒருங்கிணைப்பாளர் திருமதி கிருஷ்ணவேணி மற்றும் தமிழ்நாடு தன்னார்வ நலக்குழும தலைவர் திருமதி மு.ஸ்டெல்லா வாழ்த்துரை வழங்கினார்.

மதுரை மக்கள் தொடர்பு கள அலுவலக விளம்பர உதவியாளர் திரு ப.வேல்முருகன் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்து வரவேற்புரை ஆற்றினார். சாதனைப்பெண்கள் குழு ஒருங்கிணைப்பாளர் திருமதி அ.விஜயலட்சுமி இறுதியில் நன்றி தெரிவித்தார்.


(रिलीज़ आईडी: 1746606) आगंतुक पटल : 1196