விவசாயத்துறை அமைச்சகம்
வேளாண் அறிவியல் கண்காட்சியை தொடங்கிவைத்தார் மத்திய அமைச்சர் திரு நரேந்திர சிங் தோமர்
சிறு விவசாயிகளை அதிகாரமிக்கவர்களாக மாற்ற வேண்டும் என்பதே மத்திய அரசின் குறிக்கோள்
Posted On:
02 MAR 2023 5:54PM by PIB Chennai
புதுதில்லியில் 3 நாள் வேளாண் அறிவியல் கண்காட்சியை மத்திய வேளாண் அமைச்சர் திரு நரேந்திர சிங் தோமர் இன்று (02.03.2023) தொடங்கி வைத்தார். விஞ்ஞானிகள், விவசாயிகள், தொழில்முனைவோர், அறிவியல் அறிஞர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்ட இந்தக் கண்காட்சியில் உரையாற்றிய திரு தோமர், சிறு விவசாயிகளை அதிகாரமிக்கவர்களாக மாற்ற வேண்டும் என்பதே பிரதமர் திரு நரேந்திர மோடியின் நோக்கம் என்றார். இந்தியாவின் கோரிக்கையை ஏற்று இந்த ஆண்டு சர்வதேச சிறுதானிய ஆண்டாக கொண்டாடப்படுவதை நினைவு கூர்ந்த அவர், நாட்டின் ஒட்டுமொத்த விவசாயிகளில் 86 சதவீதம் பேர் சிறு விவசாயிகளாக இருப்பதையும் சுட்டிக்காட்டினார். சிறு விவசாயிகள், சிறு தானியங்களை அதிக அளவில் விளைவிப்பதால், அவர்களின் நலன் கருதியே மத்திய அரசு பல்வேறு திட்டங்களை முனைப்பாக செயல்படுத்தி வருவதாகவும் குறிப்பிட்டார்.
மார்ச் 18—ம் தேதி புதுதில்லியில் நடைபெறும் நிகழ்ச்சியில் சர்வதேச சிறுதானிய ஆண்டுக் கொண்டாட்டத்தை பிரதமர் திரு நரேந்திர மோடி முறைப்படி தொடங்கிவைக்க உள்ளதாகவும் தெரிவித்தார். ஜி—20 நாடுகளின் தலைமைத்துவத்தை இந்தியா ஏற்றுள்ள நிலையில், ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம் என்ற கருப்பொருளின் அடிப்படையில், உலக நாடுகளுக்குத் தலைமை வகிக்கும் பாதையில் இந்தியா பயணிக்கிறது என்றார். இந்தியா எப்போதும் விவசாயத்தை சார்ந்திருக்கின்ற நாடு என்றும் விவசாயம் செழிக்கும் போது நாட்டின் முன்னேற்றம் உறுதி செய்யப்படுகிறது என்றும் மத்திய அமைச்சர் தெரிவித்தார்.
விவசாயிகளின் கடின உழைப்பு, அறிவியல் அறிஞர்களின் அறிவாற்றல், மத்திய அரசின் விவசாயிகள் நலன் சார்ந்த கொள்கைகள் ஆகியவைற்றின் மூலம், நமது விவசாயம் உலக நாடுகளில் முதன்மை பெற்றிருக்கிறது என்றும் கூறினார். விவசாயிகளின் நலன் கருதி மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ள பிரதமரின் விவசாயி வருவாய் ஆதரவு நிதி, பிரதமரின் பயிர்க்காப்பீட்டுத் திட்டம், 10,000 புதிய வேளாண் உற்பத்தி நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு வேளாண் திட்டங்களையும் மத்திய அமைச்சர் திரு நரேந்திர சிங் தோமர் பட்டியலிட்டார்.
----
AP/ES/KPG/
(Release ID: 1903741)