Special Service and Features
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு சென்னையில் மூன்று நாள் மாநாடு மற்றும் புகைப்படக் கண்காட்சி
Posted On:
05 MAR 2023 3:41PM by PIB Chennai
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு மூன்று நாள் மாநாடு மற்றும் புகைப்படக் கண்காட்சி சென்னையில் நாளை துவங்குகிறது.
பாலின சமத்துவத்தில் தொழில்நுட்பமும் கண்டுபிடிப்புகளும் என்ற கருப்பொருளில் இந்த ஆண்டு சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. சர்வதேச மகளிர் தினத்தையொட்டி மத்திய அரசின் தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் மத்திய மக்கள் தொடர்பகம் - மண்டல அலுவலகம் சென்னை மற்றும் பத்திரிகை தகவல் அலுவலகம் - சென்னை ஆகியவை சென்னைப் பல்கலைக்கழகத்தின் நாட்டு நலப் பணித் திட்டம் மற்றும் டாட் ஸ்கூல் ஆஃப் டிசைன் நிறுவனங்களுடன் இணைந்து மூன்று நாள் மாநாட்டிற்கும் புகைப்படக் கண்காட்சிக்கும் ஏற்பாடு செய்துள்ளன. பெண்களுக்கு அதிகாரமளித்தல் மற்றும் பாலின சமத்துவம் என்ற கருப்பொருளில் இந்த மாநாடு நடைபெற இருக்கிறது. தமிழகத்தைச் சேர்ந்த பெண் முன்னோடித் தலைவர்கள் குறித்த புகைப்படக் கண்காட்சியும் நடைபெற இருக்கிறது.
மூன்று நாள் மாநாட்டினை மார்ச் 6 திங்கள்கிழமை அன்று தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் திருமதி குஷ்பூ சுந்தர் தொடங்கி வைக்கிறார். தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழக்தின் முன்னாள் துணை வேந்தர் டாக்டர் சுதா சேஷயன் சிறப்பு அழைப்பாளராகவும், நாரி சக்தி விருது பெற்ற ஸ்கார்ஃப் (ஸ்கிசோஃப்ரினியா ஆராய்ச்சி அறக்கட்டளை) இணை நிறுவனர் மற்றும் துணைத் தலைவர் டாக்டர். தாரா ரங்கசாமி கௌரவ விருந்தினராகவும் கலந்து கொள்ளும் இந்த நிகழ்ச்சிக்கு தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் தலைமை இயக்குநர் (தென் மண்டலம்) திரு. எஸ். வெங்கடேஸ்வர் தலைமை தாங்குவார்.
விழாவில், DOT ஸ்கூல் ஆஃப் டிசைன் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைவர் ஏஆர் ஆர் ராம்நாத் வரவேற்புரையாற்றுவார். மத்திய மக்கள் தொடர்பகம் மற்றும் பத்திரிகை தகவல் அலுவலகத்தின் கூடுதல் இயக்குநர் திரு.எம்.அண்ணாதுரை அறிமுக உரையாற்றுவார். மத்திய தகவல் தொடர்பு மண்டல அலுவலகத்தின் இயக்குநர் திரு. ஜெ. காமராஜ் நன்றியுரை வழங்குவார்.
சர்வதேச பெண்கள் தினம் பற்றிய மூன்று நாள் மாநாட்டில் முதல் நாள் பெண்களுக்கு அதிகாரமளித்தலும் பாலின சமத்துவமும் என்ற பொருளில் அமர்வுகள் நடைபெறும். 'பெண்களுக்கு அதிகாரமளித்தல், மனநிலையை மாற்றுதல்' என்ற தலைப்பில் டாக்டர் தாரா ரங்கசாமி உரையாற்றுவார். 'கல்வி மூலம் பெண்களை மேம்படுத்துதல்' தலைப்பில் டாக்டர் சுதா சேஷயன், பெண்களுக்கு அதிகாரமளிக்கும் பயணத்தில் உள்ள சவால்களும் தடைகளும்' என்ற தலைப்பில் ஹெர் ஸ்டோரீஸ் இதழின் ஆசிரியரும் இணை நிறுவனருமான திருமதி நிவேதிதா லூயிஸ் உரை நிகழ்த்துவார்கள். 'தொழில் முனைவோராக சமூகத்தில் பெண்களின் பங்கு' தலைப்பில் ஸ்டோரி கார்பெட் இயக்குநர் செல்வி முஃபீன் இர்ஷாத் தனது கருத்துக்களை முன்வைப்பார். 'கலாச்சாரத் தடைகளை உடைத்தல்' பற்றி வனவிலங்கு புகைப்படக்கலைஞர் திருமதி ரித்திகா ராமசாமி பேசுவார். இரண்டாம் நாள், சட்டம் மற்றும் கொள்கை நடவடிக்கைகள் என்ற பொருளில் அமர்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. 'சமூகச் சட்டம், அரசின் கொள்கைகள், பெண்களுக்கு அதிகாரமளித்தலுக்கான அணுகுமுறைகள்' என்ற பொருளில் இந்தியன் ஆயில் நிறுவனத்தின் கார்ப்பரேட் கம்யூனிகேஷன் துறை பொது மேலாளர் திருமதி சபீதா நடராஜ், 'பெண்களுக்கு அதிகாரமளிப்பதில் பெரும் தடையாக இருக்கும் சமூகத்தின் பார்வை மற்றும் கண்ணோட்டம் ' என்ற பொருளில் ராணிமேரி கல்லூரி வரலாற்றுத் துறைப் பேராசிரியர் டாக்டர் மு. ரசியா பர்வீன் ஆகியோர் தங்கள் சிந்தனைகளை எடுத்துச் சொல்கிறார்கள். 'பாலியல் மற்றும் இனப்பெருக்க உரிமைகள்' தலைப்பில் எழுத்தாளர் மற்றும் திரைப்பட இயக்குநர் திருமதி. கீதா இளங்கோவன் உரை நிகழ்த்துவார். 'பெண்களுக்கு அதிகாரமளிப்பதில் ஆரோக்கியம் மற்றும் சுகாதார அமைப்புகளின் பங்கு' குறித்து அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவ மருத்துவமனை மருத்துவ அதிகாரி ஷீபா பேசுவார்.
நீதித்துறை பரிமாணங்கள் என்ற அமர்வில் 'இந்தியாவில் பெண்களுக்கு அதிகாரமளிப்பதில் நீதித்துறையின் பங்கு' பற்றி வழக்கறிஞர் திருமதி கற்பகம் மாயவன் தனது கருத்துக்களை பகிர்ந்து கொள்கிறார். பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றப்பிரிவு துணைக் காவல் ஆணையர் திருமதி. G. வனிதா IPS 'பெண்களுக்கு எதிரான குற்றங்கள் பாலின சமத்துவத்தில் பெண்கள் மீதான பழி' குறித்து சிறப்புரை ஆற்றுவார்.
'ஆக்கப்பூர்வமான கலைத் தொழில்களில் பெண்களுக்கு அதிகாரமளித்தல்' என்ற பொருளில் மூன்றாம் நாள் மாநாடு நடைபெற இருக்கிறது. OTT தளம் எவ்வாறு ஊடகத்தில் பெண் பிரதிநிதித்துவத்தை மறுவரையறை செய்கிறது என்று திரைப்படத் தயாரிப்பாளரான ஹேப்பி ஹாட் பிக்சர்ஸ் திருமதி அபிநயா செல்வம் உரையாற்றுகிறார். 'சமூக ஊடகம் மற்றும் பெண்களுக்கு அதிகாரமளித்தல்: ஒரு புத்தம் புதிய அம்சம்' பற்றி ரேடியோ ஜாக்கி திருமதி மிர்ச்சி சிவசங்கரி கருத்துரை நிகழ்த்துவார். ' ஆடை வடிவமைப்புத் துறையில் பெண்கள் எதிர்கொள்ளும் சவால்கள்' குறித்து சிறந்த ஆடை வடிவமைப்பிற்காக விருது பெற்ற திருமதி பூர்ணிமா ராமசாமி உரையாற்றுவார்..
மூன்று நாள் மாநாட்டின் ஒரு பகுதியாக கல்லூரி மாணவர்களுக்கு பேச்சுப் போட்டி, குறும்படங்கள், ரீல்கள், விளம்பரப் பலகை வடிவமைப்பு போட்டிகள் நடைபெற உள்ளன. போட்டிகளில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு ரொக்கத் தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும்.
***
AP/CJL/DL
(Release ID: 1904382)