ரசாயனம் மற்றும் உரங்கள் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

ரசாயன உரங்களைச் சார்ந்திருப்பதைக் குறைத்து நிலத்திற்கான மாற்று ஊட்டச்சத்து முறைகளை மேம்படுத்துவது தொடர்பான பயிலரங்கம் மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சர் திரு மன்சுக் மாண்டவியா தலைமையில் நடைபெற்றது


ரசாயன உரங்கள் ஏற்படுத்தும் எதிர்மறையான தாக்கத்தைக் குறைக்க அனைவரும் ஒருங்கிணைந்து செயல்படுவது அவசியம்: மத்திய அமைச்சர் திரு மன்சுக் மாண்டவியா

Posted On: 08 JUL 2023 2:22PM by PIB Chennai

விவசாயத்தில் ஊட்டச்சத்து உரங்களை சமநிலையற்ற முறையில் மிக அதிகமாகப் பயன்படுத்துவதால் மண் வளம் மற்றும் உயிர்சக்தி குறைகிறது என்றும் ரசாயன உரங்களின் எதிர்மறையான தாக்கத்தைக் குறைக்க சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரும், அரசும் ஒருங்கிணைந்து செயல்படுவது அவசியம் எனவும் மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா கூறியுள்ளார்.

ரசாயன உரங்களைச் சார்ந்திருப்பதைக் குறைத்து மாற்று ஊட்டச்சத்து முறைகளை ஊக்குவிப்பதற்கான உத்திகள் குறித்த பயிலரங்கம் புதுதில்லியில் இன்று (08-07-2023) நடைபெற்றது. 

 

இதில் பங்கேற்றுப் பேசிய அமைச்சர், அதிக அளவில் ரசாயன உரங்கள் பயன்படுத்தப்படுவதால் எதிர்மறையான கடும் விளைவுகள் ஏற்படுவதாக எடுத்துரைத்தார். விவசாய உற்பத்தியை அதிகரிப்பது நமது பொறுப்பு என்று கூறிய அவர், அதே நேரத்தில் மண்ணின் வளத்தையும், மக்களின் ஆரோக்கியத்தையும் சமரசம் செய்து கொள்ளாத வகையில் செயல்பாடுகள் அமைய வேண்டும் என்று கூறினார்.

 

விஞ்ஞானிகளையும் தேசத்திற்கு அவர்கள் ஆற்றும் பங்களிப்பையும் அரசு பாராட்டுவதாக அவர் குறிப்பிட்டார். வேளாண் சாகுபடி மற்றும் மண்ணின் உற்பத்தித்திறன் இரண்டையும் அதிகரிக்கும் தீர்வுகளை ஒருங்கிணைந்து உருவாக்கும் பொறுப்பு வேளாண் விஞ்ஞானிகளுக்கு உள்ளது என்று அவர் கூறினார். அரசாங்கத்திற்கும் விவசாயத்துடன் தொடர்புடைய அனைத்துத் தரப்பினருக்கும் இடையிலான தொடர்பின் முக்கியத்துவத்தை அமைச்சர் வலியுறுத்தினார்.

 

இந்த நிகழ்ச்சியில் நித்தி ஆயோக் உறுப்பினர் பேராசிரியர் திரு ரமேஷ் சந்த் பேசுகையில், ரசாயன உரங்கள் பயன்படுத்த எளிதானவை என்று கூறினார். ஆனால் அவை எதிர்மறையான தாக்கத்தைக் கொண்டவை என்றும் அவர் தெரிவித்தார்.  விவசாயிகளின் நலனை உறுதி செய்யும் வகையிலும், சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் வகையிலும், விவசாயத் துறையை வலுப்படுத்தும் வகையிலும் வேளாண் உற்பத்திக்கான தீர்வுகள் உருவாக்கப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

 

மத்திய உரத்துறை செயலாளர் திரு ரஜத் குமார் மிஸ்ரா பேசுகையில், விவசாய உற்பத்தியை அதிகரிக்கவும், மண் வளத்தை மேம்படுத்தவும் அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து எடுத்துரைத்தார். வேளாண்துறைச் செயலாளர் திரு மனோஜ் அஹுஜா பேசுகையில், நிலையான விவசாய நடைமுறைகளின் தேவை தற்போது அதிகரித்துள்ளது என்று குறிப்பிட்டார்.

 

ரசாயனம் மற்றும் உரங்கள் அமைச்சகத்தின் கூடுதல் செயலாளர் திருமதி நீரஜா அடிதம், வேளாண் அமைச்சக உயர் அதிகாரிகள், உரத்துறை அமைச்சக உயர் அதிகாரிகள், வேளாண் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள், மாநில வேளாண்துறை அதிகாரிகள், விவசாய குழுக்களின் பிரதிநிதிகள், தன்னார்வத் தொண்டு நிறுவனத்தினர், நித்தி ஆயோக் மூத்த அதிகாரிகள் உள்ளிட்டோர் இந்தப் பயிலரங்கில் கலந்து கொண்டனர்.

***

AD/PLM/DL


(Release ID: 1938183)