பழங்குடியினர் நலத்துறை அமைச்சகம்
அரிவாள் செல் ரத்த சோகையை ஒழிப்பதற்கான விழிப்புணர்வு இயக்கம் மற்றும் பயிற்சியாளர்களுக்கான பயிற்சித் திட்டத்தை மத்திய அமைச்சர் திரு அர்ஜுன் முண்டா தொடங்கி வைத்தார்
Posted On:
29 AUG 2023 7:32PM by PIB Chennai
மத்திய பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் திரு அர்ஜூன் முண்டா , அரிவாள் செல் ரத்த சோகையை ஒழிப்பதற்கான இயக்கத்தின் ஒரு பகுதியாக 'விழிப்புணர்வு பிரச்சார இயக்கம் மற்றும் பயிற்சியாளர்களுக்கான பயிற்சித் திட்டத்தை புதுதில்லியில் இன்று (29-08-2023) தொடங்கி வைத்தார்.
இத்திட்டம் மக்களிடையே, குறிப்பாக பழங்குடியினர் அதிகம் வசிக்கும் பகுதிகளில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பணியாளர்களுக்குப் பயிற்சி அளிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
2023-24 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டில் 2047 ஆம் ஆண்டிற்குள் அரிவாள் செல் ரத்த சோகையை ஒழிப்பதற்கான இயக்கத்தை மத்திய அரசு அறிவித்தது. இந்த இயக்கம் விழிப்புணர்வை ஏற்படுத்துதல், பாதிக்கப்பட்ட பழங்குடியினப் பகுதிகளில் உள்ள 40 வயதிற்குட்பட்ட 7 கோடி மக்களை பரிசோதனைக்கு உட்படுத்துதல் மற்றும் கூட்டு முயற்சிகள் மூலம் ஆலோசனை வழங்குதல் ஆகியவற்றை உள்ளடக்கியதாகும். 2023 ஜூலை 1அன்று மத்தியப் பிரதேசத்தின் ஷாதோல் மாவட்டத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடியால் இந்த இயக்கம் முறையாகத் தொடங்கி வைக்கப்பட்டது.
இந்த இயக்கத்தின் ஒரு பகுதியாக இந்த விழிப்புணர்வுப் பிரசார இயக்கம் மற்றும் பயிற்சித் திட்டத்தை இன்று புதுதில்லியில் இதனைத் துவக்கி வைத்தப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் திரு அர்ஜுன் முண்டா, சமூகப் பங்களிப்பின் மூலம் அரிவாள் செல் ரத்த சோகை நோய் இல்லாத இந்தியாவை உருவாக்குவோம் என்ற பிரதமர் திரு. நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வையை இந்த முன்முயற்சி முன்னெடுத்துச் செல்லும் என்றார். பிரதமரின் உத்வேகமூட்டும் தலைமையின் கீழ், சுகாதாரத் துறை மற்றும் பழங்குடியினர் விவகாரத்துறை அமைச்சகங்கள் இணைந்து அரிவாள் செல் நோய் ஒழிப்பு இயக்கத்தில் ஒத்துழைத்து செயல்பட்டு வருகின்றன என்று திரு அர்ஜுன் முண்டா மேலும் கூறினார்.
மக்கள் மத்தியில் நிலவும் தவறான எண்ணங்களை முறியடித்து, நோயை ஒழிப்பதற்கான உண்மையான பங்கேற்பு சூழலை உருவாக்க மக்களை ஒருங்கிணைக்க வேண்டும் என்று அவர் தெரிவித்தார். பாதிக்கப்பட்ட மக்கள் தொடர்பான புள்ளி விவரங்களை உருவாக்குவதன் முக்கியத்துவத்தை அமைச்சர் சுட்டிக்காட்டினார், இது நீடித்த தீர்வைக் கண்டறிய உதவும் எனவும் அப்போதுதான் இந்த நோய்ப் பரவலைத் தடுத்து, வரும்காலத் தலைமுறையினரைக் காப்பாற்ற முடியும் என்றும் அமைச்சர் கூறினார்.
விழிப்புணர்வை ஏற்படுத்தும் மகத்தான முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், பல்வேறு நிலைகளில் பயிற்சித் திட்டங்கள் வகுக்கப்பட்டு கடைசி நிலை\ வரை சென்றடைய திட்டமிடப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் விளக்கினார். முன்னெப்போதும் இல்லாத வகையில், விழிப்புணர்வு இயக்கங்கள் பழங்குடியின மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு தகவல்கள் கொண்டு சேர்க்கப்படுவதாக திரு அர்ஜுன் முண்டா தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் பழங்குடியினர் விவகாரங்களுக்கான செயலாளர் திரு அனில் குமார் ஜா, கூடுதல் செயலாளர் ஆர்.ஜெயா மற்றும் பழங்குடியினர் விவகார அமைச்சகத்தின் பிற அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
Release ID=1953322
AP/PLM/KRS
(Release ID: 1953391)