சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
azadi ka amrit mahotsav

வேலை நியமன ஆணைகள் மூலம் வேலைவாய்ப்பு அதிகரிக்கப்பட்டு, வேலையின்மை படிப்படியாக குறைந்து வருகிறது: சென்னை வேலை வாய்ப்பு விழாவில் மத்திய இணையமைச்சர் ராமேஷ்வர் தெலி பேச்சு

இடுகை இடப்பட்ட நாள்: 30 NOV 2023 8:28PM by PIB Chennai

நாடு முழுவதும் 51,157 பேருக்கு மத்திய அரசின் வேலை நியமன ஆணைகள் வழங்கும் விழாவின் ஒரு பகுதியாக சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய பெட்ரோலியம், இயற்கை எரிவாயு, தொழிலாளர் நலன் மற்றும் வேலைவாய்ப்புத்துறை இணையமைச்சர்  ராமேஷ்வர் தெலி 136 பேருக்கு நியமன ஆணைகளை வழங்கினார்.  இவர்களில் 87 பேர் வருமான வரித்துறையின் பணிநியமன ஆணைகளைப் பெற்றனர். மற்றவர்கள் கல்வி, அஞ்சல் துறையில் பணிவாய்ப்புகளை பெற்றுள்ளனர்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் திரு ராமேஷ்வர் தெலி தற்போது பணியில் சேர்பவர்கள் அரசின் மக்கள்நலப்பணிகளை வலுப்படுத்த  அர்ப்பணிப்புடன் செயல்பட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். வேலைவாய்ப்பு விழா மூலம் தொடர்ந்து பிரதமர் திரு நரேந்திர மோடி வேலை நியமன ஆணைகளை வழங்கி வருவதால் வேலைவாய்ப்பு அதிகரிக்கப்பட்டு, வேலையின்மை படிப்படியாக குறைந்து வருகிறது என்று  அவர் குறிப்பிட்டார். அனைவரையும் உட்படுத்திய வெற்றிப்பயணத்தில் இது ஒரு முக்கிய நடவடிக்கையாகும் என்று அவர் கூறினார்.  இந்தியாவில் உற்பத்தி, திறன் இந்தியா, ஸ்டார்ட்-அப் இந்தியா போன்ற அரசின் முன்னோடித் திட்டங்கள் காரணமாக இளைஞர்கள் புதிய வேலைவாய்ப்புகளை பெறுவதாகவும், இது தற்சார்பு இந்தியா நோக்கத்தை நிறைவேற்ற உதவும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.  

இ-ஷ்ரம் போர்ட்டலில் 29 கோடி பேர் பதிவு செய்திருப்பதாகவும், இவர்களில் சென்னையில் ஒரு லட்சம் பேர் உள்பட தமிழகத்தில் 85 லட்சம் பேர் பதிவு செய்திருப்பதாகவும், திரு ராமேஷ்வர் தெலி கூறினார்.  அமைப்பு சார்ந்த மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்கள் இ-ஷ்ரம் போர்ட்டலில் பதிவு செய்துகொள்ள வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.  தொழிலாளர் அரசு காப்பீட்டுத் திட்டத்தை நவீனப்படுத்தி உள்கட்டமைப்பு வசதிகளை வலுப்படுத்தி அமைப்பு சார்ந்த மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு சிறந்த மருத்துவ வசதி அளிக்க அரசு முனைப்புடன் செயல்பட்டு வருகிறது என்று அவர் கூறினார். இத்தகைய தொழிலாளர்களை சமூகப் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் கொண்டுவர அரசு முயற்சி மேற்கொண்டுள்ளது என்று திரு ராமேஷ்வர் தெலி கூறினார்.

சென்னையில் நடைபெற்ற மற்றொரு வேலைவாய்ப்பு விழா நிகழ்வில் மத்திய ஜிஎஸ்டியின் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மண்டல ஆணையர் டாக்டர் ராம் நிவாஸ், 81 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

***

SG/SMB/AG/KPG


(வெளியீட்டு அடையாள எண்: 1981321) வருகையாளர் எண்ணிக்கை : 114
இந்த வெளியீட்டை படிக்க: English