மனித வள மேம்பாட்டு அமைச்சகம்
தரமான கல்வி
Posted On:
07 AUG 2024 4:45PM by PIB Chennai
கல்வித்துறை அரசியலமைப்பின் ஒருங்கிணைந்த பட்டியலில் உள்ள நிலையில், பெரும்பாலான பள்ளிகள் உயர் கல்வி நிறுவனங்கள் அந்தந்த மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் கட்டுப்பாட்டில் உள்ளன. மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் மற்றும் மத்திய அரசு கிராமப்புற மற்றும் பின்தங்கிய மாணவர்கள் உட்பட நாட்டிலுள்ள மாணவர்களின் கல்வி நிலையை மேம்படுத்த முயற்சிக்கின்றன.
அமைச்சகத்தால் செயல்படுத்தப்படும் பல்வேறு திட்டங்கள், தேசிய கல்விக் கொள்கை (NEP) 2020 உடன் இணைக்கப்பட்டுள்ளன. பிறப்பு அல்லது பின்னணியின் சூழ்நிலைகள் காரணமாக, எந்தவொரு மாணவரும் கல்வி பெறுவதற்கும் சிறந்து விளங்குவதற்குமான வாய்ப்பை இழந்துவிடக்கூடாது என்பதை உறுதி செய்வதே, தேசிய கல்விக் கொள்கை 2020 இன் நோக்கமாகும். கிராமங்கள், சிறு நகரங்கள் மற்றும் முன்னேற விரும்பும் மாவட்டங்கள் மற்றும் பிற பிரிவுகளைச் சேர்ந்த மாணவர்கள் போன்ற, புவியியல் அடையாளங்களை உள்ளடக்கிய சமூக-பொருளாதார பின்தங்கிய குழுக்களின் (SEDGs) கவலைகளை இது கணக்கில் எடுத்துக் கொண்டுள்ளது. அணுகல், பங்கேற்பு மற்றும் கற்றல் வெளிப்பாடுகளில் உள்ள சமூக இடைவெளிகளை இணைப்பதை, இந்த கொள்கை நோக்கமாகக் கொண்டுள்ளது.
பள்ளிக் கல்வி மற்றும் எழுத்தறிவுத் துறை, 2018-19 ஆம் ஆண்டு முதல் பள்ளிக் கல்விக்கான ஒருங்கிணைந்த மத்திய நிதியுதவித் திட்டமான அனைவருக்கும் கல்வி என்ற திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. முன்பள்ளி முதல் 12 ஆம் வகுப்பு வரை அனைத்து குழந்தைகளுக்கும், சமமான மற்றும் உள்ளடக்கிய வகுப்பறை சூழலுடன், தரமான கல்வி கிடைப்பதை உறுதி செய்வதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது, இது அவர்களின் மாறுபட்ட பின்னணி, பன்மொழி தேவைகள், வெவ்வேறு கல்வி திறன்களை கவனித்துக் கொள்வதோடு, கற்றல் செயல்பாட்டில் அவர்களை செயல்பாட்டு பங்கேற்பாளர்களாக மாற்ற வேண்டும். கற்றலுக்கான சூழலை உருவாக்க, ஒவ்வொரு பள்ளிக்கும், ஒருங்கிணைந்த பள்ளி மானியம், நூலகம், விளையாட்டு மற்றும் உடற்பயிற்சி செயல்பாடுகளுக்கு மானியம், தகுதியான மாணவர்களுக்கு இலவச சீருடை மற்றும் பாடப்புத்தகங்கள், தேசிய கண்டுபிடிப்புத் திட்டம், தகவல் தொடர்பு தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் முன்முயற்சிகளுக்கு ஆதரவு, பள்ளி தலைமைத்துவ மேம்பாட்டுத் திட்டம், கல்வியில் நலிவடைந்த மாணவர்களுக்கு தீர்வு கற்பித்தல் போன்ற பல்வேறு செயல்பாடுகளுக்கு அனைவருக்கும் கல்வி ஆதரவளிக்கிறது. கஸ்தூரிபா காந்தி பாலிகா வித்யாலயா பள்ளிகளை அமைத்தல், மேம்படுத்துதல் மற்றும் நடத்துதல், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் உறைவிடப் பள்ளிகளை அமைத்தல் மற்றும் நடத்துதல், பிரதமரின் - ஜன்மான் திட்டத்தின் கீழ் விடுதிகளை நிறுவுதல் போன்ற பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம் தரமான கல்வியை விரிவுபடுத்துவதற்காக மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு அனைவருக்கும் கல்வித் திட்டத்தின் கீழ் நிதியுதவி வழங்கப்படுகிறது. மேலும், சிறப்புக் கவனம் தேவைப்படும் குழந்தைகளுக்கான மாணவர் சார்ந்த பிரிவின் கீழ், சிறப்புக் கவனம் தேவைப்படும் குழந்தைகளைக் கண்டறிந்து மதிப்பிடுவதற்கும், உதவி உபகரணங்கள், பிரெய்லி சாதனங்கள் மற்றும் புத்தகங்கள், பொருத்தமான கற்றல் கற்பித்தல் உபகரணங்கள் மற்றும் மாற்றுத் திறனாளி மாணவிகளுக்கான உதவித் தொகை போன்றவற்றிற்கு நிதியுதவி வழங்கப்படுகிறது.
புதிய கற்பித்தல் மற்றும் பாடத்திட்ட கட்டமைப்பை அறிமுகப்படுத்துதல், ஆரம்பகால குழந்தைப் பருவ பராமரிப்பு மற்றும் கல்வி, அடிப்படை கல்வியறிவு மற்றும் எண்ணறிவு மற்றும் மாணவர் மேம்பாட்டிற்கான மாற்றும் மதிப்பீடு, அனுபவம் மற்றும் திறன் அடிப்படையிலான கற்றல் போன்ற பல்வேறு நடவடிக்கைகள் மூலம், கல்வியின் தரத்தை மேம்படுத்துவதில் கவனம் செலுத்துவதற்காக, ஒருங்கிணைந்த அனைவருக்கும் கல்வித் திட்டமும், தேசிய கல்விக் கொள்கை 2020-உடன் இணைக்கப்பட்டுள்ளது.
தரமான கல்வியை விரிவுபடுத்துவதற்காக உயர்கல்வித் துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது, அதாவது இயன்ற அளவு நெகிழ்வுத் தன்மையை வழங்குதல், பாடங்களின் ஆக்கப்பூர்வமான கலவையை அனுமதித்தல், பல பாதைகளை வழங்குதல், தேசிய கடன் கட்டமைப்பு (என்.சி.ஆர்.எஃப்), தேசிய உயர் கல்வி தகுதி கட்டமைப்பு, கல்வி வங்கி கடன் வங்கி (ஏபிசி), பல நுழைவு / வெளியேறுதல், இந்திய மொழிகளில் படிப்புகள் மற்றும் புத்தகங்கள், பாடநெறி பொருட்களை வழங்குதல்; பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர் கல்வி நிறுவனங்களின் நிர்வாகம், ஆளுகை மற்றும் கல்விக்கான அணுகலை மேம்படுத்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துதல், கற்பவர்களுக்கு ஸ்வயம் தளத்திலிருந்து 40% வரை கடனுதவிகளை அனுமதித்தல்; தொழில் பழகுநர்களுக்கான தொழில்துறை கல்வி ஒத்துழைப்பு, தொழில்துறை, சமூகத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கான படிப்புகள் மற்றும் பாடத்திட்டங்களை உருவாக்குதல், தொழில்துறையுடன் இணைந்த படிப்புகளை வழங்குதல்; கல்வி முதலியவற்றில் இந்திய அறிவு முறையை புகுத்தும் பணிகள் அடங்கும்.
உயர்கல்வித் துறை தேசிய உயர்கல்வி திட்டத்தின் மூன்றாம் கட்டத்தை ஜூன் 2023 இல் பிரதமரின் உயர்கல்வி திட்டம் (PM-USHA) ரூ.12926.10 கோடி செலவில் தொடங்கியது. இது, கல்வி ரீதியாக சேவை பெறாத பின்தங்கிய பகுதிகளின் தேவைகளைப் பூர்த்தி செய்யத் தொடங்கியுள்ளது. இத்திட்டம் மத்திய அரசு நிதியுதவித் திட்டமாகும். ஊரகப் பகுதிகள் உட்பட சம்பந்தப்பட்ட மாநில அரசின் பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளின் தரத்தினை உயர்த்தி, வரையறுக்கப்பட்ட நெறிமுறைகள் மற்றும் தரநிலைகளுக்கு இணங்குவதை உறுதி செய்வதன் மூலம் அவற்றின் தரத்தை மேம்படுத்துகிறது.
பிரதமரின் உயர் கல்வித் திட்டத்தின் மீது, கவனம் செலுத்தும் மாவட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. குறைந்த மொத்த சேர்க்கை விகிதம், பாலின சமத்துவம், மக்கள்தொகை விகிதாச்சாரம் மற்றும் பெண்கள், திருநங்கைகள், தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், முன்னேற விரும்பும் எல்லைப் பகுதி இடதுசாரி தீவிரவாதத்திற்கு ஆளாகும் மாவட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு அளவுகோல்களின் அடிப்படையில் கவனம் செலுத்தும் மாவட்டங்கள், சம்பந்தப்பட்ட மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களால் அடையாளம் காணப்படுகின்றன.
மக்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் கல்வித்துறை இணையமைச்சர் திரு. ஜெயந்த் சவுத்ரி இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளார்.
---
MM/KPG/DL
(Release ID: 2042885)