வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்பு அமைச்சகம்
பொன்னப்பள்ளி சத்யநாராயணம்மாவின் துப்புரவுப் பணிக்கு வெற்றி
Posted On:
25 SEP 2024 11:46AM by PIB Chennai
ஆந்திர மாநிலம் நர்சப்பூர் நகரில் மையப்பகுதியில்பொன்னப்பள்ளி வார்டு அமைந்துள்ளது. ஒடுக்கப்பட்ட சமுதாயத்தினர் அதிகம் வசிக்கும் இப்பகுதி, திறந்தவெளிக் கழிப்பிடமாகவும் இருந்தது. பெரும்பாலும் குடிசைவாழ் மக்கள் நிறைந்த இப்பகுதியில், அடிப்படை துப்புரவு சேவைகள் குறைவாகவே இருந்ததால், இப்பகுதி வாசிகள் திறந்தவெளியில் மலம் கழிப்பதை சகித்துக் கொண்டிருந்தனர். ஆனால் இரண்டு குழந்தைகளுக்கு தாயான மீனவப் பெண்மணியான சத்தியநாராயணம்மா, இதனை ஏற்க மறுத்துவிட்டார். போலியோ பாதிப்பு காரணமாக மாற்றுத்திறனாளியாக உள்ள அவர், தனது சமுதாயத்தில் மாற்றத்தை ஏற்படுத்தும் சக்தியாக மாறத்தொடங்கினார். அவரது உடல் குறைபாடும் சொந்த அனுபவமும், அவருக்கு துப்புரவின் முக்கியத்துவத்தை உணர்த்தியதால், தனது குடும்பத்திற்கு மட்டுமின்றி தான் வசிக்கும் ஒட்டுமொத்த வார்டு பகுதியிலும் மாற்றத்தை ஏற்படுத்த அவர் முயற்சி மேற்கொண்டார்.
இதற்காக தன்னார்வ தொண்டு நிறுவனம் ஒன்றில் இணைந்த சத்தியநாராயணம்மா, பெண்களின் துப்புரவு மற்றும் ஆரோக்கியத்திற்காக பாடுபடும் அந்த அமைப்பினருடன் இணைந்து, மாதவிடாய் காலத்தில் பின்பற்ற வேண்டிய ஆரோக்கிய நடைமுறைகள், கழிவறை பயன்பாடு, அடிக்கடி கைகழுவுதல் போன்ற பழக்க வழக்கங்கள் குறித்த விவாதங்களுக்கு தலைமையேற்று நடத்திய அவர், தனது சுற்றுப்புறத்தில் வசிப்பவர்களையும் இணைத்துக் கொண்டு அந்தப் பகுதியை தூய்மையான, ஆரோக்கியமான சுற்றுச்சூழல் கொண்டதாக மாற்ற போராடினார். தொடக்கத்தில் அப்பகுதி மக்கள் ஆரோக்கியமான துப்புரவு நடைமுறைகளை பின்பற்ற வைப்பது சற்று கடினமாக இருந்தாலும், சத்தியநாராயணம்மா போன்ற பெண்களின் விடா முயற்சியால், சிறிது சிறிதாக பலன் அளிக்கத் தொடங்கியது. மனிதக் கழிவு மேலாண்மை மற்றும் பாலினத்திற்கு ஏற்ற சேவைகள் இந்தப் பிரச்சனைகளைத் தீர்க்க உதவியதுடன், பொன்னப்பள்ளி வார்டு, திறந்தவெளிக் கழிப்பிடமில்லாத பகுதி என்ற நிலையை எட்டியது. சத்தியநாராயணம்மாவின் முயற்சியால், மக்கள் அடிமட்ட அளவில் ஒன்று சேர்வதன் வலிமை எத்தகையது என்பதை எடுத்துரைத்து, அந்த நகருக்கே ஒரு சிறப்பு சேர்த்தது.
இந்த மாற்றம், தூய்மைஇந்தியா இயக்கத்தின் பத்தாம் ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் தொடங்கப்பட்ட, தேசிய அளவிலான பழக்கவழக்கத் தூய்மை- கலாச்சாரத் தூய்மை இயக்கத்துடன் ஒத்துப்போவதாக உள்ளது. இந்த இயக்கம் செப்டம்பர் 17 முதல் அக்டோபர் 2, 2024 வரை, கடைபிடிக்கப்படுகிறது. இது போன்ற திட்டங்களால் இந்தியாவின் கிராமப்ப்புறங்களில் குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்பட்டுள்ளது. நாட்டில் உள்ள 5,54,150 கிராமங்கள் திறந்தவெளிக் கழிப்பிடம் இல்லாதவையாக அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2058490
-----
MM/KPG/KR
(Release ID: 2058525)