ஜல்சக்தி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

8வது இந்திய நீர் வாரம் 2024 - தண்ணீர் தீர்வுகளுக்கான உலகளாவிய மாநாடு: ஒரு கண்ணோட்டம்

Posted On: 21 SEP 2024 3:14PM by PIB Chennai

 

8வது இந்திய நீர் வாரம் 2024 செப்டம்பர் 17 முதல் 20 வரை புது தில்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் நடைபெற்றது. ஜல் சக்தி அமைச்சகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த சர்வதேச நிகழ்வு நீர்வள மேலாண்மையில் ஒத்துழைப்பதற்கான ஒரு முக்கிய தளமாக தன்னை நிலைநிறுத்தியது. இந்நிகழ்ச்சியைக்  குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு தொடங்கிவைத்தார். மத்திய ஜல் சக்தித்துறை  அமைச்சர் திரு  சி.ஆர்.பாட்டீல் இணையமைச்சர் திரு  ராஜ் பூஷன் சௌத்ரி ஆகியோர் உடனிருந்தனர்.

உலகளாவிய நீர் வல்லுநர்கள், அரசுத் தலைவர்கள் மற்றும் தனியார் துறைப் பிரதிநிதிகளின் பங்கேற்புடன் நடைபெற்ற இந்நிகழ்வு, நீர் மேலாண்மையின் முக்கிய சவால்களை எதிர்கொள்வது, புதிய கண்டுபிடிப்புகளை அதிகரிப்பது, நிலையான நீர் நடைமுறைகளை ஊக்குவிப்பது ஆகியவற்றை  நோக்கமாகக் கொண்டிருந்தது.

"அனைவரையும் உள்ளடக்கிய நீர் மேம்பாடு மற்றும் மேலாண்மைக்கான கூட்டாண்மையும்  ஒத்துழைப்பும்" என்பது இந்திய நீர் வாரம் 2024-ன் கருப்பொருளாகும்.  21 ஆம் நூற்றாண்டின் வளர்ந்து வரும் நீர் சவால்களை எதிர்கொள்ள துறைகளுக்கு இடையேயான மற்றும் சர்வதேச ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தையும், நீர் பாதுகாப்பு, மேலாண்மை மற்றும் நீர் ஆதாரங்களுக்கான சமமான அணுகல் ஆகியவற்றில் ஒருங்கிணைந்த முயற்சிகளின் அவசியத்தையும் இந்தக் கருப்பொருள் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

2012-ல் தொடங்கப்பட்டதில் இருந்து, இந்திய நீர் வாரம், உலகளாவிய நீர் சார்ந்த அரசு உறவில் ஒரு முக்கிய நிகழ்வாக வளர்ந்துள்ளது. இது உரையாடல், புதுமை மற்றும் அறிவுப் பகிர்வுக்கான தளத்தை வழங்குகிறது. ஒவ்வொரு பதிப்பும்  நீர் தொடர்பான குறிப்பிட்ட பிரச்சினையில் கவனம் செலுத்துகிறது, கொள்கை வகுப்பாளர்கள், வல்லுநர்கள் மற்றும் தொழில்துறை தலைவர்கள் தீர்வுகளை முன்வைப்பதற்கும் கூட்டுறவு உத்திகளை ஆராய்வதற்கும் வாய்ப்பளிக்கிறது.

தொடக்க விழாவில் பேசிய குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு பூமியில் கிடைக்கும் மொத்த நீரில் 2.5 வீதமே நன்னீர் என்றும் அதிலும் ஒரு சதவீதம் மட்டுமே மனிதப்  பயன்பாட்டிற்குக்  கிடைக்கிறது என்றும் கூறினார். உலகின் நீர் வளத்தில் இந்தியாவின் பங்கு நான்கு சதவீதம். நம் நாட்டில் கிடைக்கும் தண்ணீரில் 80 சதவீதம் விவசாயத் துறையில் பயன்படுத்தப்படுகிறது என்று குறிப்பிட்ட அவர், நாடு முழுவதும் நீர் பாதுகாப்பை ஊக்குவிக்கும் நோக்கில், மழைநீர் சேகரிப்புப்  பிரச்சாரம் (2021) போன்ற வெற்றிகரமான முயற்சிகளை சுட்டிக்காட்டினார். அதிகரித்து வரும் தண்ணீர் பற்றாக்குறை நெருக்கடியை சரி செய்ய குடிமக்கள் "நீர்ப் போராளிகளாக" மாற வேண்டும் என்று வலியுறுத்தி, நீர் பாதுகாப்பிற்கான மக்கள்  இயக்கத்திற்குக்  குடியரசுத்தலைவர் அழைப்பு விடுத்தார்.

ஜல் சக்தி அமைச்சகத்தின் குடிநீர் மற்றும் துப்புரவுத் துறை  ஏற்பாடு செய்த சர்வதேச வாஷ் (நீர் மாற்றும் மனவள) மாநாடு இந்திய நீர் வாரம் 2024-ன் சிறப்பம்சமாகும். இந்த மாநாடு 2024 செப்டம்பர் 17 முதல் 19 வரை புது தில்லியில் நடைபெற்றது.

 இந்திய நீர் வாரம் 2024 கண்காட்சி,  4,800 சதுர மீட்டர் பரப்பளவில், உலகம் முழுவதிலுமிருந்து 143 கண்காட்சியாளர்கள் பங்கேற்புடன் நடைபெற்றது. கண்காட்சியாளர்கள் அதிநவீன நீர் மேலாண்மை தொழில்நுட்பங்களையும்  தீர்வுகளையும்  காட்சிப்படுத்தினர். இத்துறையில் நீடித்த நடைமுறைகளிலும்   புதுமைகளிலும்  கவனம் செலுத்தினர்.

8வது இந்திய நீர் வாரம் 2024-ன் நிறைவு நிகழ்வு  2024, செப்டம்பர்  19 அன்று புது தில்லியில் நடைபெற்றது. இதில் மத்திய ஜல் சக்தித்துறை  அமைச்சர் திரு  சி.ஆர்.பாட்டீல் தலைமை தாங்கினார்  ஜல் சக்தித்துறை இணையமைச்சர் டாக்டர் ராஜ் பூஷன் சவுத்ரி கலந்து கொண்டார். இந்த அமர்வில் நிலத்தடி நீர் ஒழுங்குமுறைக்கான பூ-நீர் போர்டல் தொடங்கப்பட்டது. நீர் ஆதாரங்கள் மற்றும் நீர்ப்பாசன திட்டங்கள் குறித்த முக்கிய வெளியீடுகள் வெளியிடப்பட்டன.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2057304

*****

SMB / KV

 

 


(Release ID: 2060078) Visitor Counter : 79
Read this release in: English , Urdu , Hindi