பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு
5 ஆண்டுகளில் இணைப்பை மேம்படுத்தி, பயணத்தை எளிதாக்கவும், சரக்கு போக்குவரத்து செலவு, எண்ணெய் இறக்குமதி மற்றும் கரியமில வாயு வெளியேற்றத்தைக் குறைக்கவும் ரூ. 6,798 கோடி மதிப்பீட்டிலான இரண்டு திட்டங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது
प्रविष्टि तिथि:
24 OCT 2024 3:12PM by PIB Chennai
பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழுக் கூட்டத்தில், 6,798 கோடி ரூபாய் மொத்த மதிப்பீட்டிலான ரயில்வே அமைச்சகத்தின் இரண்டு திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
நர்கட்டியாகஞ்ச் – ரக்சவுல் – சீதாமர்ஹி – தர்பங்கா மற்றும் சீதாமர்ஹி – முசாபர்பூர் பிரிவை இரட்டை ரயில் பாதைகளாக மாற்றுவதும் நேபாளம், வடகிழக்கு இந்தியா மற்றும் எல்லைப் பகுதிகளுக்கான இணைப்பை வலுப்படுத்துவதுடன்சரக்கு ரயில்களுடன் பயணிகள் ரயில்களின் இயக்கத்தையும் எளிதாக்குவது என்பது இப்பகுதியின் சமூகப் பொருளாதார வளர்ச்சிக்கு வழிவகுக்கும்.
எருபாலம்-அமராவதி-நம்பூரு என்ற புதிய ரயில் பாதை திட்டம் ஆந்திராவின் என்.டி.ஆர் விஜயவாடா மற்றும் குண்டூர் மாவட்டங்கள் மற்றும் தெலுங்கானாவின் கம்மம் மாவட்டம் வழியாக செல்கிறது.
ஆந்திரப்பிரதேசம், தெலங்கானா, பீகார் ஆகிய 3 மாநிலங்களில் உள்ள 8 மாவட்டங்களை உள்ளடக்கிய இந்த இரண்டு திட்டங்கள், தற்போதுள்ள இந்திய ரயில்வேயின் கட்டமைப்பை சுமார் 313 கிலோ மீட்டர் அளவுக்கு அதிகரிக்கும்.
புதிய வழித்தடத் திட்டம், 9 புதிய நிலையங்களுடன் சுமார் 168 கிராமங்களுக்கும் சுமார் 12 லட்சம் மக்களுக்கும் இணைப்பை வழங்கும். சுமார் 388 கிராமங்கள் மற்றும் சுமார் 9 லட்சம் மக்கள் தொகைக்கு சேவை அளிக்கும் வகையில், முன்னேறத் துடிக்கும் இரண்டு மாவட்டங்களுக்கு (சீதாமர்ஹி மற்றும் முசாபர்பூர்) பல்வழித்தடத் திட்டம் இணைப்பை மேம்படுத்தும்.
இவை, வேளாண் பொருட்கள், உரம், நிலக்கரி, இரும்புத் தாது, எஃகு, சிமெண்ட் போன்ற பொருட்களை கொண்டு செல்வதற்கான முக்கிய வழித்தடங்களாகும். திறன் விரிவாக்கப் பணிகளின் மூலம் ஆண்டுக்கு 31 மில்லியன் டன்கள் அளவுக்கு கூடுதல் சரக்கு போக்குவரத்து ஏற்படும். ரயில்வே, சுற்றுச்சூழலுக்கு உகந்ததாகவும், எரிசக்தித் திறன்மிக்க போக்குவரத்து முறையாகவும் இருப்பதால், பருவநிலை இலக்குகளை அடைவதற்கும், கரியமில வாயு வெளியேற்றத்தைக் குறைப்பதற்கும் (168 கோடி கிலோ) இது வழிவகுக்கும். இது 7 கோடி மரங்களை நடுவதற்கு சமமான நடவடிக்கையாகும்.
புதிய வழித்தடம், ஆந்திராவின் முன்மொழியப்பட்டுள்ள தலைநகரான "அமராவதிக்கு" நேரடி இணைப்பை வழங்குவதுடன், தொழில்கள் மற்றும் மக்களுக்கான இயக்கத்தை மேம்படுத்தி, இந்திய ரயில்வேக்கு மேம்பட்ட செயல்திறன் மற்றும் சேவை நம்பகத்தன்மையை வழங்கும். பல்வழித்தட திட்டமானது செயல்பாடுகளை எளிதாக்குவதுடன் நெரிசலைக் குறைக்கும். இது இந்திய ரயில்வேயின் பரபரப்பாக இயங்கும் வழித்தடங்களில் மிகவும் தேவையான உள்கட்டமைப்பு வளர்ச்சியை வழங்கும்.
புதிய இந்தியா என்ற பிரதமரின் தொலைநோக்குப் பார்வைக்கு ஏற்ப இந்தத் திட்டங்கள் அமைந்துள்ளன. இந்தப் பகுதியில் உள்ள மக்களை விரிவான வளர்ச்சியின் மூலம் "தற்சார்பு நிலை"-க்கு உயர்த்தி, அவர்களின் வேலைவாய்ப்பு / சுய வேலைவாய்ப்புகளை மேம்படுத்தும்.
இந்தத் திட்டங்கள் பிரதமரின் விரைவு சக்தி தேசிய பெருந்திட்டத்தின் விளைவாக உருவானவை. இவை ஒருங்கிணைந்த திட்டமிடல் மூலம் சாத்தியமாகியுள்ளன. மக்கள், சரக்குகள் மற்றும் சேவைகளின் இயக்கத்திற்கு தடையற்ற இணைப்பை வழங்கும்.
***
(Release ID: 2067658)
TS/PKV/RR/KR
(रिलीज़ आईडी: 2067731)
आगंतुक पटल : 127
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
Odia
,
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Bengali
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Telugu
,
Kannada
,
Malayalam