ஜல்சக்தி அமைச்சகம்
                
                
                
                
                
                    
                    
                        உலக கழிப்பறை தினம் 2024-ன் ஒரு பகுதியாக 3 வார கால இயக்கத்தை ஜல் சக்தி அமைச்சகம் தொடங்கியது
                    
                    
                        
                    
                
                
                    Posted On:
                19 NOV 2024 12:08PM by PIB Chennai
                
                
                
                
                
                
                குடிநீர் மற்றும் சுகாதாரத் துறை "நமது கழிப்பறை நமது கெளரவம்"  என்ற நாடு தழுவிய இயக்கத்தை உலகக் கழிப்பறை தினமான இன்று(நவம்பர் 19)தொடங்கியுள்ளது.இது மனித உரிமைகள் தினமான டிசம்பர் 10, 2024 அன்று முடிவடையும். இது சுகாதாரம், மனித உரிமைகள், கண்ணியம் ஆகியவற்றுக்கு இடையிலான முக்கியத் தொடர்பை வலியுறுத்துகிறது.
தூய்மையான, ஆரோக்கியமான சமூகத்திற்கான நடத்தை மாற்றத்தை ஊக்குவிக்கும் அதே வேளையில், திறந்தவெளி கழிப்பிடம் இல்லாத நிலையை பராமரிப்பதற்கு இந்தியாவின் கடப்பாட்டை இந்த இயக்கம்   உறுதிப்படுத்துகிறது. 2019 ஆம் ஆண்டில் இந்தியா திறந்தவெளி கழிப்பிடம் இல்லாத தகுதி நிலையை அடைந்த தருணத்தில்  ஊரக தூய்மை இந்தியா இயக்கத்தின் இரண்டாம் கட்டம் திறந்தவெளி கழிப்பிடம் இல்லாத  மாதிரி கிராமங்களை உருவாக்குவதில் கவனம் செலுத்துவதற்காக தொடங்கப்பட்டது. இதன் முதல் இலக்கு  திறந்தவெளி கழிப்பிடம் இல்லாத சாதனைகளை தொடர்ந்து நிலைநிறுத்துவதாகும். இது உலக கழிப்பறை தினத்தின் உணர்வுடன் ஒத்துப்போகிறது. 
எளிதில் பாதிக்கக்கூடிய குழுக்கள், குறிப்பாக பெண்கள் மற்றும் சிறுமிகள் மீது தீவிர  கவனம் செலுத்துவதன் மூலம், இந்த முயற்சி கழிப்பறை என்பது வெறும் உள்கட்டமைப்பு வசதி என்பதைவிட  மேலானவை என்பதை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.  கண்ணியம், சமத்துவம் மற்றும் பொது சுகாதாரத்திற்கு அடித்தளமாக கழிப்பறைகள் உள்ளன.
 இந்த இயக்கம்  பற்றி பேசிய, குடிநீர் மற்றும் துப்புரவுத்துறை  செயலாளர் அசோக் கே.கே.மீனா, நீடித்த நடத்தை மாற்றத்தை உறுதி செய்வதில் அடித்தள அணுகுமுறையின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். "சுகாதாரம் என்பது கண்ணியம் மற்றும் வளர்ச்சியின் ஒரு முக்கியப் பகுதியாகும். 'நமது கழிப்பறை நமது கெளரவம்' இயக்கம் சமூகங்களுக்கு அதிகாரம் அளிக்க வடிவமைக்கப்பட்டுள்ளது. கிராம பஞ்சாயத்துகள், தொகுதிகள், மாவட்டங்கள், மாநிலங்கள் என ஒவ்வொரு மட்டத்திலும் பொறுப்புகள் ஒதுக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு பங்குதாரரும் துப்புரவு நடைமுறைகளை நிலைநிறுத்துவதற்கும், பெருமையை உருவாக்குவதற்கும், நீண்டகால தாக்கத்தை ஏற்படுத்துவதற்கும் பங்களிப்பு செய்வதை இது உறுதி செய்கிறது. உலக கழிப்பறை தினத்தை முன்னிட்டு, நீடித்த வளர்ச்சிக்கான ஆறாவது இலக்கை அடைவதற்கான உலகளாவிய முயற்சிகளுடன் நாம் இணைந்துள்ள நிலையில், சுகாதாரத்திற்கு சமமான அணுகலை உருவாக்குவதற்கும், யாரும் பின்தங்கி விடக்கூடாது என்பதை உறுதி செய்வதற்கும் இந்தியா தனது உறுதிப்பாட்டை புதுப்பிக்கிறது என்று அசோக் கே.கே.மீனா தெரிவித்தார்.
பிரச்சார இயக்கத்தின் முக்கியமான நடவடிக்கைகள்:
ஒவ்வொரு நிர்வாக மட்டத்திலும் சிறப்பாக பராமரிக்கப்படும் வீட்டு கழிப்பறைகள்  மற்றும் சமூக சுகாதார வளாகங்களை அடையாளம் கண்டு வெகுமதி அளிக்க போட்டிகள் நடத்தப்படும். 
 இரவு நேர சந்திப்பு கூட்டங்கள், வாஷ் கிளப்புகள் போன்றவை மக்களைச் சந்தித்து மாற்றம் ஏற்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. இவை மக்களை ஒருங்கிணைக்க உதவுகின்றன.
கண்ணியமான சிறப்பு முகாம்கள் மூலம் துப்புரவுப் பணியாளர்கள் கொண்டாடப்படுவார்கள். நலத்திட்டங்களில் அவர்கள் சேர்க்கப்படுவது உறுதி செய்யப்படும். மேலும் தூய்மையைப் பராமரிப்பதில் அவர்களின் பங்களிப்புக்காக கௌரவிக்கப்படுவார்கள்.
#ToiletsForDignity மற்றும் #MyToiletMyPride என்ற ஹேஷ்டேக்குகளைப் பயன்படுத்தி மைகவ்  உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் மூலம் துப்புரவு வெற்றிக் கதைகளைப் பகிர குடிமக்கள் ஊக்குவிக்கப்படுவார்கள்.
நிர்வாகத்தின் அனைத்து மட்டங்களிலிருந்தும் பங்கேற்பை உறுதி செய்ய  மாநில முதலமைச்சர்கள்,  அமைச்சர்கள் மாநில அளவிலான நிகழ்வுகளை வழிநடத்துவார்கள். 
திறந்த வெளியில் மலம் கழித்தல் இல்லாத நிலையை ஊக்குவிப்பதன் மூலம், துப்புரவு என்பது ஒருமுறை சாதனை அல்ல, மாறாக அது ஆரோக்கியமான, கண்ணியமான இந்தியாவை உருவாக்குவதற்கான தொடர்ச்சியான பயணம் என்பதை இந்த இயக்கம்  வலியுறுத்துகிறது.
தூய்மை இந்தியா இயக்கத்தின் பாரம்பரியத்தை தேசம் முன்னெடுத்துச் செல்லும் அதே வேளையில், நிலையான துப்புரவு தீர்வுகளை உருவாக்க குடிமக்கள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று ஜல் சக்தி அமைச்சகத்தின் கீழ் உள்ள குடிநீர் மற்றும் துப்புரவு துறை கேட்டுக்கொண்டுள்ளது.
-------------
(Release ID: 2074530)
TS/SMB/RS/KR
                
                
                
                
                
                (Release ID: 2074567)
                Visitor Counter : 131