விவசாயத்துறை அமைச்சகம்
உலக மண் மாநாட்டில் மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் பங்கேற்பு
Posted On:
19 NOV 2024 3:02PM by PIB Chennai
மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலன் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் திரு சிவ்ராஜ் சிங் சவுகான் புதுதில்லியில் இன்று நடைபெற்ற உலகளாவிய மண் மாநாடு 2024-ல் காணொலி மூலம் உரையாற்றினார். இந்திய கலாச்சாரத்தின் அடிப்படை மந்திரம் அனைத்து உயிரினங்களுக்கிடையேயும் பகிர்ந்து கொள்ளப்பட்ட உணர்வு குறித்த நம்பிக்கை என்று மத்திய வேளாண் அமைச்சர் கூறினார். ஒவ்வொருவருக்குள்ளும் ஒரே ஒரு பிரபஞ்ச உணர்வு மட்டுமே உள்ளது என்று நமது ஞானிகள் கற்பித்துள்ளனர்; எனவே, முழு உலகமும் ஒரே குடும்பம், நாம் அனைவரையும் நம் சொந்தமாக நடத்த வேண்டும். இந்த உணர்வு மனிதர்களுக்கு மட்டுமானதல்ல, விலங்குகளுக்கும் பொருந்தும். இது மண்ணிற்கும் பொருந்தும் என்று கூறிய அவர், மண் உயிரற்றது அல்ல, உயிருள்ளது என்பதை வலியுறுத்தினார்.
நமது உடல் பல்வேறு தனிமங்களால் ஆனது. அவற்றில் மண் ஒரு முக்கிய அங்கமாகும். மண் இருந்தால் மட்டுமே வாழ்க்கை உள்ளது என்று திரு சவுகான் கூறினார். மண் ஆரோக்கியமற்றதாக மாறினால், உயிரினங்களும் ஆரோக்கியமாக இருக்க முடியாது. நாம் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து முழுமையை அடைகிறோம். எனவே மண் ஆரோக்கியமாக இருப்பதை உறுதி செய்வது இதற்கு அவசியம். இன்று, ஒட்டுமொத்த உலகமும் மண்ணின் ஆரோக்கியம் குறித்து கவலைப்படுகிறது. இந்தப் பூமி நமக்கு மட்டும் சொந்தமானதல்ல; விலங்குகள் மற்றும் தாவரங்களுக்கும் இதில் உரிமை உண்டு என்று திரு சவுகான் மேலும் கூறினார். மண்ணின் ஆரோக்கியம் இன்று மிகவும் கவலைக்குரியதாக உள்ளது என்றும் அவர் கூறினார். இந்தியா சுதந்திரம் அடைந்ததிலிருந்து விவசாயத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்துள்ளது. ஒரு காலத்தில், நாட்டில் உணவு தானியங்களுக்குப் பற்றாக்குறை ஏற்பட்டது, மேலும் பிற நாடுகளிலிருந்து உணவுப் பொருட்களை இறக்குமதி செய்ய வேண்டியிருந்தது. இருப்பினும், பசுமைப் புரட்சி இந்தியாவில் குறிப்பிடத்தக்க மாற்றத்தைக் கொண்டு வந்தது என்று மத்திய அமைச்சர் மேலும் கூறினார். அதிக மகசூல் தரும் பயிர்கள் மற்றும் அவற்றின் வகைகள், சிறந்த நீர்ப்பாசன நுட்பங்கள் மற்றும் நவீன விவசாய முறைகள் ஆகியவை கோடிக்கணக்கான இந்தியர்களுக்கு உணவுப் பாதுகாப்பை உறுதி செய்துள்ளன. இதைத் தொடர்ந்து, வானவில் புரட்சியானது தோட்டக்கலை, பால், மீன்வளர்ப்பு, கோழி வளர்ப்பு மற்றும் பிற துறைகள் மூலம் விவசாயத்தை மேலும் பன்முகப்படுத்தி, விவசாயத்தை இந்தியப் பொருளாதாரத்தின் முக்கிய தூணாக மாற்றியது. "இந்தியா இப்போது ஆண்டுக்கு 330 மில்லியன் டன் உணவு தானியங்களை உற்பத்தி செய்கிறது, உலகளாவிய உணவு வர்த்தகத்தில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை அளிப்பதுடன் ஏற்றுமதி வருவாயில் 50 பில்லியன் டாலர் ஈட்டுகிறது என்பதை பகிர்ந்து கொள்வதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்" என்று மத்திய வேளாண் அமைச்சர் கூறினார்.
ரசாயன உரங்களின் பயன்பாடு மற்றும் சார்புநிலை அதிகரிப்பு, இயற்கை வளங்களின் கண்மூடித்தனமான சுரண்டல் மற்றும் நிலையற்ற வானிலை ஆகியவை மண்ணில் அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளன என்றும் திரு சவுகான் கூறினார். இன்று இந்திய மண் ஒரு பெரிய சுகாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. பல ஆய்வுகளின்படி, நமது மண் 30 சதவீதம் கெட்டுவிட்டது. மண் அரிப்பு, உப்புத்தன்மை, மாசுபாடு ஆகியவை மண்ணில் உள்ள அத்தியாவசிய நைட்ரஜன் மற்றும் நுண்ணூட்டச்சத்துக்களின் அளவைக் குறைக்கின்றன. மண்ணில் கரிம கார்பன் இல்லாதது அதன் வளத்தையும் பின்னடைவையும் பலவீனப்படுத்தியுள்ளது. இந்தச் சவால்கள் உற்பத்தியை பாதிப்பது மட்டுமல்லாமல், வரும் காலங்களில் விவசாயிகளுக்கு வாழ்வாதாரம் மற்றும் உணவு நெருக்கடியையும் உருவாக்கும் என்று மத்திய அமைச்சர் கூறினார். மண் பாதுகாப்புக்காக எங்கள் அரசு பல முயற்சிகளை எடுத்துள்ளது, இது அதிக மண் வளத்திற்கு வழிவகுக்கிறது. மண் வள அட்டை வழங்கும் திட்டம் 2015 ஆம் ஆண்டில் பிரதமர் திரு நரேந்திர மோடியின் தலைமையில் தொடங்கப்பட்டது. 22 கோடிக்கும் அதிகமான அட்டைகள் தயாரிக்கப்பட்டு விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன. எந்த உரத்தை எந்த அளவில் பயன்படுத்த வேண்டும் என்பதை மண்வள அட்டை மூலம் விவசாயிகள் இப்போது தெரிந்து கொள்கிறார்கள். பிரதமரின் விவசாய நீர்ப்பாசனத் திட்டம் – ஒரு துளி நீரில் அதிகப் பயிர் என்ற திட்டத்தின் கீழ், தண்ணீரை விவேகமாகப் பயன்படுத்துதல், வீணாவதைக் குறைத்தல் மற்றும் நிலத்தில் ஊட்டச்சத்து மிக்க பயிர் எச்சங்களை அப்படியே விட்டு விடுவதைக் குறைத்தல் ஆகியவற்றில் நாங்கள் கவனம் செலுத்தி வருகிறோம். வடகிழக்குப் பகுதிக்கான இயற்கை அடிப்படை மேம்பாட்டுத் தொகுப்பு உருவாக்கப்பட்டு, இந்த 8 மாநிலங்களில் உள்ள விவசாயிகள், சுற்றுச்சூழல் முக்கியத்துவம் வாய்ந்த பகுதியின் பல்லுயிர் பெருக்கத்தைப் பாதுகாக்கும் அதே வேளையில், இயற்கை விவசாய முறைகளைப் பின்பற்ற ஊக்குவிக்கப்படுகிறார்கள். இயற்கை விவசாயத்தை ஒரு இயக்கமாக மாற்றும் பணியும் இந்தியாவில் நடந்து வருகிறது. ரசாயன உரங்கள் மண்ணின் ஆரோக்கியத்தை மட்டுமல்லாமல், மனிதர்கள் மற்றும் விலங்குகளின் ஆரோக்கியத்தையும் மோசமாக்குகின்றன என்றும் அவர் கூறினார். மண்ணின் வளத்தைப் பராமரிக்க, ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மற்றும் நீர் மேலாண்மை முறைகளைப் பின்பற்ற வேண்டும். நுண் நீர்ப்பாசனம், மாற்றுப்பயிர்கள், வேளாண் காடுகள் போன்ற பல்வேறு முறைகள் மூலம் மண் வளத்தை மேம்படுத்தவும், மண் அரிப்பைக் குறைக்கவும் நாம் அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.
போர்க்கால அடிப்படையில் அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கான தீர்வு மற்றும் விரிவாக்க முறைகளின் பங்கு முக்கியமானது என்று அவர் கூறினார். இந்தியாவின் வேளாண் அறிவியல் மையங்கள், வேளாண் தொழில்நுட்ப மேலாண்மை முகமைகளுடன் இணைந்து, விவசாயிகளுக்கு அறிவு மற்றும் திறன்களை வழங்குவதற்காக செயல்பட்டு வருகின்றன. அறிவியலுக்கும் விவசாயிகளுக்கும் இடையிலான தூரத்தை குறைக்க வேண்டும். விஞ்ஞானிகளிடமிருந்து விவசாயிகளுக்கு சரியான தகவல்கள் சரியான நேரத்தில் சென்றடைவதை உறுதி செய்ய நாங்கள் தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம். வேளாண் அறிவியல் மையமும் இந்தத் திசையில் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. நவீன வேளாண் சந்திப்பு திட்டத்தையும் நாங்கள் விரைவில் தொடங்க உள்ளோம், இதில் விஞ்ஞானிகள் விவசாயிகளுடன் தொடர்ந்து விவாதித்து தகவல்களை வழங்குவார்கள் மற்றும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பார்கள் என்று திரு சவுகான் மேலும் கூறினார். இது தவிர, தனியார் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் தலைமையிலான விரிவாக்க சேவைகள் மேம்பட்ட தொழில்நுட்பத்தை விவசாயிகளுக்கு கொண்டு வந்துள்ளன, மேலும் விவசாயிகள் இப்போது அதைப் பயன்படுத்திக் கொள்கின்றனர் என அவர் தெரிவித்தார்.
விவசாயிகள் மண்ணின் மிகப்பெரிய பாதுகாவலர்கள் என்றும், கல்வி, ஊக்குவிப்பு மற்றும் நவீன அறிவியல் தகவல்கள் மூலம் அவர்களுக்கு அதிகாரம் அளிக்க வேண்டும் என்றும் மத்திய வேளாண் அமைச்சர் கூறினார். இதில் இளைஞர்களையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். விவசாயம் ஒரு லாபகரமான மற்றும் மரியாதைக்குரிய தொழில்; இதில் பங்கேற்க இளைஞர்களை ஊக்குவிக்க வேண்டிய அவசியம் உள்ளது. உள்ளூர் மற்றும் உலகளாவிய மண் சவால்களை எதிர்கொள்ளும் கண்டுபிடிப்புகளை உருவாக்குவதில் பெண் மாணவர்களும், ஆராய்ச்சியாளர்களும் முக்கிய பங்கு வகிக்க வேண்டும். மண் அரிப்பு என்பது ஒரு தேசிய பிரச்சனை மட்டுமல்ல, உலகளாவிய கவலைக்குரிய விஷயம் என்றும், இது ஐக்கிய நாடுகள் சபையின் நிலையான வளர்ச்சி இலக்குகளின் ஒரு பகுதியாகும் என்றும் அவர் கூறினார். நிலையான வளர்ச்சி இலக்குகளை அடைவதற்கு இது அவசியம். நாடுகள் ஒத்துழைக்கவும், தொழில்நுட்பங்களைப் பகிர்ந்து கொள்ளவும், நிலையான நில மேலாண்மையை நோக்கி பணியாற்றவும் இந்த மாநாடு ஒரு வாய்ப்பாகும். விவசாயிகளுக்கு மட்டுமின்றி, ஒட்டுமொத்த மனிதகுலத்திற்கும், ஒட்டுமொத்த விலங்கினங்கள் மற்றும் மரங்களுக்கும் பயனளிக்கும் வகையில் பெரிய அளவில் செயல்படுத்தக்கூடிய தீர்வுகளை பரிசீலிக்குமாறு பங்கேற்பாளர்கள் அனைவரையும் நான் கேட்டுக் கொள்கிறேன். விஞ்ஞானிகள், பங்குதாரர்கள், கொள்கை வகுப்பாளர்கள், தொழில்துறை பிரதிநிதிகள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், மாணவர்கள் ஆகியோர் மண்வளத்தை மீட்டெடுக்கும் இயக்கத்தில் கைகோர்க்க வேண்டும் என்று நான் அழைப்பு விடுக்கிறேன். நீடித்த மற்றும் லாபகரமான விவசாயம், நெகிழக்கூடிய சுற்றுச்சூழல் அமைப்புகள் மற்றும் அனைவருக்கும் உணவுப் பாதுகாப்பு ஆகியவற்றை உறுதி செய்யும் முன்முயற்சிகளுக்கு ஆதரவளிக்க இந்திய அரசு உறுதிபூண்டுள்ளது. அனைத்து உயிரினங்களுக்கும், எதிர்கால சந்ததியினருக்கும் நிலையான எதிர்காலத்தை உறுதி செய்ய நாம் அனைவரும் ஒன்றிணைந்து உறுதி ஏற்போம்" என்று திரு சவுகான் தமது உரையை நிறைவு செய்தார்.
நிதி ஆயோக் உறுப்பினர் பேராசிரியர் ரமேஷ் சந்த், தாவர வகைகள் பாதுகாப்பு மற்றும் விவசாயிகள் உரிமைகள் ஆணையத்தின் தலைவர் டாக்டர் திரிலோச்சன் மொஹாபத்ரா, இந்திய வேளாண் ஆராய்ச்சி மையத்தின் முன்னாள் செயலாளர் மற்றும் இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில் இயக்குநர் டாக்டர் ஹிமான்ஷு பதக் உள்ளிட்டோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
***
(Release ID: 2074585)
TS/PKV/RR/KR
(Release ID: 2074638)