அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், சண்டிகர், ராஜஸ்தான் மற்றும் குஜராத்தின் வடமேற்கு பகுதிகளில் அமைந்துள்ள தொழில்நுட்ப மற்றும் அறிவியல் நிறுவல்களில் பாதுகாப்பு மேம்படுத்தப்பட உள்ளது: டாக்டர் ஜிதேந்திர சிங்
Posted On:
10 MAY 2025 7:10PM by PIB Chennai
ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், சண்டிகர், ராஜஸ்தான் மற்றும் குஜராத்தின் வடமேற்குப் பகுதிகளில் அமைந்துள்ள தொழில்நுட்ப மற்றும் அறிவியல் நிறுவல்களில் பாதுகாப்பு மேம்படுத்தப்பட உள்ளது. கூடுதலாக, ஸ்ரீநகர் மற்றும் லேவில் உள்ள முக்கியமான இந்திய வானிலை ஆய்வு மைய நிறுவல்களுக்கு பலத்த பாதுகாப்பு அளிக்கப்பட உள்ளது.
மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை, புவி அறிவியல் துறை இணையமைச்சரும் (தனிப்பொறுப்பு), பிரதமர் அலுவலகம், அணுசக்தித் துறை, விண்வெளித் துறை மற்றும் பணியாளர் நலன், பொதுமக்கள் குறைகள் மற்றும் ஓய்வூதியத் துறைகளின் இணையமைச்சருமான டாக்டர் ஜிதேந்திர சிங் இந்த அறிவிப்பை வெளியிட்டார். அவர் இன்று மூத்த அதிகாரிகள் மற்றும் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறைகளின் தலைவர்களுடன் உயர்மட்ட கூட்டுக் கூட்டத்தைக் கூட்டினார். நிலவும் பாதுகாப்பு சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, நாடு முழுவதும் உள்ள தொழில்நுட்ப மற்றும் அறிவியல் நிறுவல்களின் பாதுகாப்பு தயார்நிலையை மறுஆய்வு செய்வதற்காக இந்த கூட்டம் நடத்தப்பட்டது.
குறிப்பாக ஜம்மு & காஷ்மீர், பஞ்சாப், லடாக் மற்றும் இந்தியாவின் வடமேற்குப் பகுதியின் எல்லை மண்டலங்களில் ஆராய்ச்சி மற்றும் அறிவியல் அமைப்புகளின் பாதுகாப்பு தயார்நிலையை மதிப்பாய்வு செய்வதில் இந்த கூட்டம் கவனம் செலுத்தியது.
ஜம்முவில் உள்ள சிஎஸ்ஐஆர்-இந்திய ஒருங்கிணைந்த மருத்துவ நிறுவனம்; சிஎஸ்ஐஆர்-மத்திய அறிவியல் கருவிகள் அமைப்பு, சண்டிகர்; சிஎஸ்ஐஆர்-மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம், ஜலந்தர்; சிஎஸ்ஐஆர்-நுண்ணுயிர் தொழில்நுட்ப நிறுவனம், சண்டிகர்; ஸ்ரீநகர் மற்றும் பிற முக்கிய பகுதிகளில் உள்ள இந்திய வானிலை ஆய்வு மைய நிறுவல்கள்; லடாக் மற்றும் சுற்றியுள்ள மண்டலங்களில் உள்ள புவி அறிவியல் ஆராய்ச்சி நிலையங்கள் ஆகியவற்றின் தயார்நிலை மற்றும் பாதுகாப்பு வழிமுறைகளை டாக்டர் ஜிதேந்திர சிங் குறிப்பாக ஆய்வு செய்தார்.
தற்போதைய சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, அனைத்து அறிவியல் நிறுவனங்களும் அவற்றின் தற்போதைய பாதுகாப்பு நெறிமுறைகளை மதிப்பாய்வு செய்து மேம்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளன.கூடுதலாக, ஒவ்வொரு நிறுவனமும் அவசரகால நடவடிக்கைக்கான நிலையான செயல்பாட்டு நடைமுறைகளை உருவாக்க வேண்டும், ஊழியர்களும் உள்ளூர் அதிகாரிகளும் நன்கு தயாராக இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
ஸ்ரீநகர், லே மற்றும் பிற முக்கிய இடங்களில் உள்ள அதன் முக்கிய நிறுவல்கள் மற்றும் தரவு மையங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகளை உடனடியாக வலுப்படுத்துமாறு இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தலைமை இயக்குநருக்கு டாக்டர் ஜிதேந்திர சிங் உத்தரவிட்டார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2128101
***
RB/RJ
(Release ID: 2128131)
Visitor Counter : 2