பாதுகாப்பு அமைச்சகம்
ஆபரேஷன் சிந்தூர் வெறும் ராணுவ நடவடிக்கை மட்டுமல்ல - இந்தியாவின் அரசியல், சமூக, உத்திசார் மன உறுதியின் அடையாளமாகும்: பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங்
லக்னோவில் பிரமோஸ் ஒருங்கிணைப்பு மற்றும் சோதனை மையத்தை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் காணொலி மூலம் திறந்து வைத்தார்
प्रविष्टि तिथि:
11 MAY 2025 2:36PM by PIB Chennai
ஆபரேஷன் சிந்தூர் வெறும் ராணுவ நடவடிக்கை மட்டுமல்ல எனவும், இந்தியாவின் அரசியல், சமூக, உத்திசார் மன உறுதியின் அடையாளம் என்றும் பாதுகாப்புத் துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் கூறியுள்ளார். இன்று (மே 11, 2025) உத்தரபிரதேசத்தின் லக்னோவில் பிரம்மோஸ் ஒருங்கிணைப்பு மற்றும் சோதனை மையத்தின் தொடக்க விழாவில் காணொலி மூலம் அவர் உரையாற்றினார். பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் வலுவான நடவடிக்கைதான் ஆபரேஷன் சிந்தூர் என அவர் குறிப்பிட்டார்.
உரி சம்பவத்திற்குப் பிறகு நடத்தப்பட்ட துல்லியத் தாக்குதல்கள், புல்வாமா தாக்குதலுக்குப் பிறகு வான்வழித் தாக்குதல்கள், பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு இப்போதைய தாக்குதல்கள் போன்றவற்றை அவர் சுட்டிக் காட்டினார். பயங்கரவாதத் தாக்குதல்கள் இந்திய மண்ணில் நடத்தப்பட்டால் இந்தியா என்ன செய்யும் என்பதை உலகம் இவற்றின் மூலம் கண்டிருக்கிறது என்று அவர் கூறினார். பயங்கரவாதத்திற்கு எதிராக சமரசமற்ற கொள்கையைப் பின்பற்றி, இந்தியா உரிய நடவடிக்கை எடுக்கும் என்பதைப் பிரதமர் திரு நரேந்திர மோடி தெளிவுபடுத்தியுள்ளார் என்று அமைச்சர் கூறினார்.
பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்புக் காஷ்மீரில் உள்ள பயங்கரவாத உள்கட்டமைப்புகளை அழிக்க இந்த நடவடிக்கை தொடங்கப்பட்டது என்றும், அப்பாவி பொதுமக்கள் குறிவைக்கப்படவில்லை என்றும் திரு ராஜ்நாத் சிங் மீண்டும் தெளிவுபடுத்தினார். ஆனால், பாகிஸ்தான் இந்தியாவில் பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளை குறிவைத்து கோயில்கள், குருத்வாராக்கள், தேவாலயங்களைத் தாக்க முயன்றதாக அவர் கூறினார். நமது ஆயுதப்படைகள் வீரத்தையும் நிதானத்தையும் வெளிப்படுத்தியதாகவும் அவர் குறிப்பிட்டார்.
பிரமோஸ் ஒருங்கிணைப்பு மற்றும் சோதனை மையம் குறித்து, அமைச்சர் கூறுகையில், இது இந்தியாவின் பாதுகாப்பில் தற்சார்பை நோக்கிய முயற்சிகளை வலுப்படுத்தும் என்றார். குறிப்பிடத்தக்க அளவில் நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்பை உருவாக்குவதன் மூலம் இந்தப் பிராந்தியத்தின் சமூக-பொருளாதார வளர்ச்சிக்கு இது பங்களிக்கும் என்றும் அவர் கூறினார். தேசிய தொழில்நுட்ப தினத்தில் நடைபெற்ற இந்த திறப்பு விழாவை ஒரு மைல்கல் தருணம் என்று அவர் விவரித்தார். இது இந்தியாவின் வளர்ந்து வரும் புதுமையான ஆற்றலைப் பிரதிபலிக்கிறது எனவும் அவர் கூறினார்.
உத்தரபிரதேச பாதுகாப்பு தொழில் வழித்தடத்திற்கு பெருமை சேர்க்கும் விஷயமாக இந்த மையத்தைக் குறிப்பிட்ட திரு ராஜ்நாத் சிங், இது ஏற்கனவே சுமார் 500 நேரடி மற்றும் 1,000 மறைமுக வேலைகளை உருவாக்கியுள்ளது என்றார்.
இந்தத் தொழில் வழித்தடத்தில் இதுவரை ₹ 34,000 கோடி முதலீட்டில் மொத்தம் 180 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன என்றும் அதில் சுமார் ரூபாய் 4,000 கோடி ஏற்கனவே முதலீடு செய்யப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார். இது பாதுகாப்புத் துறையில் இந்தியாவின் தன்னம்பிக்கையை அதிகரிக்கும் என்று அவர் மேலும் கூறினார்.
40 மாதங்களுக்குள் திட்டத்தை முடித்ததற்காக முதலமைச்சர் திரு யோகி ஆதித்யநாத் தலைமையிலான உத்தரபிரதேச அரசு, பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் (டிஆர்டிஓ) விஞ்ஞானிகள், பொறியாளர்கள் மற்றும் பிற தரப்பினரின் முயற்சிகளை பாதுகாப்புத் துறை அமைச்சர் பாராட்டினார்.
தொடக்க விழாவில் பேசிய உத்தரப் பிரதேச முதலமைச்சர் திரு யோகி ஆதித்யநாத், லக்னோவை பாதுகாப்பு உற்பத்தி மையமாக மாற்றும் நடவடிக்கைகளுக்காகப் பிரதமர் திரு நரேந்திர மோடிக்கும் பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங்கிற்கும் நன்றி தெரிவித்தார்.
உத்தரப் பிரதேச துணை முதலமைச்சர்கள் திரு கேசவ் பிரசாத் மௌரியா, திரு பிரிஜேஷ் பதக், தலைமைச் செயலாளர் திரு மனோஜ் குமார் சிங், பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் துறை செயலாளரும் டிஆர்டிஓ தலைவர் டாக்டர் சமீர் வி. காமத், மத்திய, மாநில அரசுகளின் மூத்த அதிகாரிகள் உள்ளிட்டோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
****
(Release ID: 2128133)
TS/PLM/RJ
(रिलीज़ आईडी: 2128139)
आगंतुक पटल : 29
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
Odia
,
English
,
Urdu
,
Nepali
,
हिन्दी
,
Marathi
,
Bengali
,
Bengali-TR
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Malayalam