ஆயுஷ்
azadi ka amrit mahotsav

பாரம்பரிய மருத்துவ நண்பர்கள் குழுவின் ஆறாவது கூட்டம் ஜெனீவாவில் நடைபெற்றது - உலகளாவிய சுகாதாரத்தில் பாரம்பரிய மருத்துவத்தின் பங்கை மத்திய ஆயுஷ் துறைச் செயலாளர் எடுத்துரைத்தார்

Posted On: 11 MAY 2025 4:18PM by PIB Chennai

பாரம்பரிய மருத்துவ நண்பர்கள் குழுவின் (GFTM - ஜிஎஃப்டிஎம்) ஆறாவது கூட்டம் 2025 மே 9 அன்று ஜெனீவாவில் உள்ள இந்திய மையத்தில் நடைபெற்றது.  பாரம்பரிய மருத்துவத்தின் பங்கை வலுப்படுத்த உறுதிபூண்டுள்ள பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றனர். 2025 டிசம்பர் 2 முதல் 4 வரை இந்தியாவில் நடைபெறவிருக்கும் இரண்டாவது உலக சுகாதார அமைப்பின் உலகளாவிய பாரம்பரிய மருத்துவ உச்சி மாநாடு உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து இந்தக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

மத்திய ஆயுஷ் அமைச்சகத்தின் செயலாளர் திரு வைத்திய ராஜேஷ் கோடேச்சா இதில் காணொலிக் காட்சி மூலம் பேசுகையில், உலகம் முழுவதும் ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்ட பாரம்பரிய மருத்துவத்தை ஊக்குவிப்பதில் இந்தியாவின் தலைமைத்துவத்தையும் அர்ப்பணிப்பையும் எடுத்துரைத்தார். உலகளாவிய சுகாதார இலக்குகளை அடைவதில் பாரம்பரிய மருத்துவத்தின் பங்கை அவர் குறிப்பிட்டார்.

இந்தியாவில் தேசிய ஆயுஷ் இயக்கம், ஆயுஷ் ஆரோக்கிய மையங்கள், முதன்மையான நிறுவனங்களுடன் சேர்ந்து கூட்டு ஆராய்ச்சி போன்ற ஆயுஷ் அமைச்சகத்தின் முன்முயற்சிகளை அவர் விளக்கினார்.

பாரம்பரிய மருத்துவ நண்பர்கள் குழு 2023-ம் ஆண்டில் இந்தியாவால் உருவாக்கப்பட்டது.  2025 மே 23 அன்று ஜெனீவாவில் நடைபெறவுள்ள 78-வது உலக சுகாதார சபையின் (WHA78) கூட்டத்தின்போது ஒரு உயர் மட்ட துணை நிகழ்வாக பாரம்பரிய மருத்துவ நண்பர்கள் குழுவின் கூட்டமும் நடைபெறவுள்ளது.

****

(Release ID: 2128142)

TS/PLM/RJ


(Release ID: 2128144) Visitor Counter : 3