சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
சென்னை பரங்கிமலையில் அமிர்த பாரத ரயில் நிலையத்தை மத்திய இணையமைச்சர் டாக்டர் எல் முருகன் இன்று தொடங்கி வைத்தார்
Posted On:
22 MAY 2025 5:45PM by PIB Chennai
நாடு முழுவதும் நவீன வசதிகளுடன் மேம்படுத்தப்பட்டுள்ள 103 அமிர்த பாரத ரயில் நிலையங்களை பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். இதன் ஒரு பகுதியாக சென்னை பரங்கிமலையில் அமைக்கப்பட்டுள்ள அமிர்த பாரத ரயில் நிலையத்தை மத்திய தகவல் ஒலிபரப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரத்துறை இணையமைச்சர் டாக்டர் எல் முருகன் தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், தெற்கு ரயில்வேயில் 13 அமிர்த பாரத ரயில் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன என்றும், இவற்றில் தமிழ்நாட்டின் 8 நிலையங்களும், புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் ஒரு ரயில் நிலையமும் அடங்கும் என்றும் கூறினார். இத்தகைய நவீன ரயில் நிலையங்கள் அமைக்கப்பட்டிருப்பது ரயில்வே துறையில் குறிப்பிடத்தக்க மைல்கல் என்று அவர் தெரிவித்தார்.
ரயில்வே துறையில் தமிழ்நாட்டின் திட்டங்களுக்காக இந்த நிதியாண்டில் 6,000 கோடி ரூபாய்க்கு மேல் ஒதுக்கப்பட்டிருப்பதாக கூறிய அவர், 9 புதிய ரயில் பாதைகள் அமைக்கப்படுவதாக தெரிவித்தார். மதுரை, கன்னியாகுமரி, ராமேஸ்வரம், சேலம், காட்பாடி ரயில் நிலையங்களில் மேம்பாட்டுப் பணிகள் நடைபெற்று வருவதாக அவர் கூறினார். 800 கோடி ரூபாய் செலவில் எழும்பூர் ரயில் நிலையம் புதுப்பொலிவு பெறவிருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
வந்தே பாரத் ரயில் பெட்டிகள் சென்னையில் உள்ள இணைப்பு ரயில் பெட்டி தொழிற்சாலையில் தயாரிக்கப்படுவது அந்த நிறுவனத்தின் சிறப்புக்கு மேலும் ஒரு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது என்று டாக்டர் எல் முருகன் கூறினார். நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய புதிய சகாப்தத்தில் இந்தியாவின் தற்சார்பு அத்தியாயத்தில் இதுவொரு சாதனையாகும் என்றும் அவர் கூறினார். தமிழ்நாட்டில் உள்ள ரயில் பாதைகளை மின்மயமாக்கும் திட்டம் முழுமையாக நிறைவேற்றப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார். மும்பை, அகமதாபாத் புல்லட் ரயில் திட்டம் 6 மாதங்களில் முடிவடையும் என்று அமைச்சர் தெரிவித்தார்.
புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஏவுகணைகள் ஆபரேஷன் சிந்தூரில் பயன்படுத்தப்பட்டு எதிரிகளின் பயங்கரவாத முகாம்கள் தகர்க்கப்பட்டதை அவர் சுட்டிக்காட்டினார். இந்தியாவிலிருந்து 50,000 கோடி ரூபாய் மதிப்பிலான பாதுகாப்பு சாதனங்கள் ஏற்றுமதி செய்யப்பட்டிருப்பதாகவும் அமைச்சர் டாக்டர் எல் முருகன் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் மாநில சிறு குறு மற்றும் நடுத்தர தொழில்கள் துறை அமைச்சர் திரு தா. மோ. அன்பரசன் மற்றும் தெற்கு ரயில்வே அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
***
SG/AD/SM/SMB/RR/KR
(Release ID: 2130556)