உள்துறை அமைச்சகம்
கொல்கத்தாவில் உள்ள மத்திய தடய அறிவியல் ஆய்வகத்தின் புதிய கட்டடத்தை மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா திறந்து வைத்தார்
தெளிவான தொலைநோக்குப் பார்வையுடன் பாதுகாப்பான, வெளிப்படையான, ஆதார அடிப்படையிலான குற்றவியல் நீதி அமைப்பை மத்திய அரசு உருவாக்கி வருகிறது- திரு அமித் ஷா
प्रविष्टि तिथि:
01 JUN 2025 4:17PM by PIB Chennai
மேற்கு வங்கத்தின் கொல்கத்தாவில் உள்ள மத்திய தடய அறிவியல் ஆய்வகத்தின் புதிய கட்டடத்தை மத்திய உள்துறை அமைச்சர் திரு. அமித் ஷா இன்று (01.06.2025) திறந்து வைத்தார். இந்த நிகழ்வில், மத்திய உள்துறை செயலாளர் உட்பட பல பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
பிரதமர் திரு நரேந்திர மோடியின் தலைமையில், மத்திய அரசு பாதுகாப்பான, வெளிப்படையான, ஆதார அடிப்படையிலான குற்றவியல் நீதி அமைப்பை உருவாக்குவதற்கான தொலைநோக்குப் பார்வையுடன் செயல்பட்டு வருவதாக மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித்ஷா தமது உரையில் தெரிவித்தார். 88 கோடி ரூபாய் செலவில் கொல்கத்தாவில் கட்டப்பட்ட தடய அறிவியல் ஆய்வகம் மேற்கு வங்கம், ஜார்கண்ட், பீகார், ஒடிசா, அசாம், சிக்கிம், வடகிழக்கின் அனைத்து மாநிலங்களுக்கும் ஆதார அடிப்படையிலான குற்றவியல் நீதி அமைப்பை உருவாக்குவதற்கும், முழுமையான அணுகுமுறையுடன் அந்தப் பங்கை நிறைவேற்றுவதற்கும் உதவும் என்று அவர் கூறினார்.
21-ம் நூற்றாண்டில், நமது பரிவர்த்தனைகள், தகவல் தொடர்பு, அடிப்படை விவரங்கள் அனைத்தும் ஒரே இடத்தில் சேமிக்கப்படும் போது, குற்றத்தின் தன்மையும் வேகமாக மாறி வருவதாக திரு அமித் ஷா கூறினார். குற்றத்தைத் தடுப்பவர்கள் குற்றவாளிகளை விடச் சிறப்பான புத்திசாலித்தனத்துடன் செயல்படுவது மிகவும் முக்கியம் என்றும், இந்த முயற்சியில் நாம் அறிவியலையும் தெளிவான சட்டங்களையும் பயன்படுத்த வேண்டும் எனவும் அவர் கூறினார். தடயவியல் ஆய்வுகள் மூலம் பெரிய நிதி மோசடிகள் இப்போது அம்பலப்படுத்தப்பட்டு வருவதாகவும், நமது குற்றவியல் நீதி அமைப்பு ஒரு புதிய சகாப்தத்தில் நுழைந்துள்ளது என்றும் அவர் கூறினார்.
மூன்று புதிய குற்றவியல் சட்டங்கள் மக்களின் அரசியலமைப்பு உரிமைகளைப் பாதுகாப்பதற்காக இயற்றப்பட்ட சட்டங்கள் என்று அவர் கூறினார். பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான, அரசு ஆங்கிலேயர்களால் இயற்றப்பட்ட 160 ஆண்டுகால பழமையான சட்டங்களை ஒழித்து, புதிய இந்தியாவிற்கான புதிய சட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது என்று அவர் கூறினார். மக்களுக்கு நீதி வழங்குவதில் இது ஒரு புரட்சிகரமான மாற்றம் என்றும், குற்றவாளிகள் இப்போது தப்பிக்க முடியாது என்றும் அவர் கூறினார். அடுத்த 100 ஆண்டுகளில் ஏற்படக்கூடிய அனைத்து தொழில்நுட்ப மாற்றங்களையும் இந்தச் சட்டங்கள் ஏற்கனவே இணைத்து வரையறுத்துள்ளன என்றும் அவர் கூறினார்.
புதிய குற்றவியல் சட்டங்கள் குற்றச் சம்பவ விசாரணை, விசாரணையில் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது ஆகியவற்றுக்கான சட்ட அடிப்படையை வழங்கியுள்ளன என்று திரு அமித் ஷா கூறினார். இந்த சட்டங்கள் சரியான நேரத்தில் நீதியை உறுதி செய்கின்றன என்றும், 60 நாட்களுக்குள் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்வதற்கான ஏற்பாடு இருப்பதாகவும் அவர் கூறினார். தற்போது, கிட்டத்தட்ட 60 சதவீத வழக்குகளில், குற்றப்பத்திரிகைகள் 60 நாட்களுக்குள் தாக்கல் செய்யப்படுகின்றன எனவும் இது ஒரு பெரிய சாதனை என்றும் அவர் கூறினார்.
ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு தடயவியல் நடமாடும் வேன் அமைக்க மத்திய அரசு ஆதரவு அளித்துள்ளதாகவும் உள்துறை அமைச்சர் தெரிவித்தார். தேசிய தடயவியல் அறிவியல் பல்கலைக்கழகத்தின் கல்லூரி ஒவ்வொரு பெரிய மாநிலத்திலும் அமைக்கப்படும் என்றும் அவர் கூறினார். உத்தரபிரதேசம், சத்தீஸ்கர், ஒடிசா, ராஜஸ்தான், தமிழ்நாடு, கேரளா, பீகார் ஆகிய மாநிலங்களில் 1,300 கோடி ரூபாய் செலவில் மேலும் 9 தேசிய தடயவியல் அறிவியல் பல்கலைக்கழகத்தின் வளாகங்கள் கட்டப்படும் என்றும், 860 கோடி ரூபாய் செலவில் 7 புதிய மத்திய தடய அறிவியல் ஆய்வகங்கள் நிறுவப்படும் என்றும் திரு அமித் ஷா மேலும் கூறினார்.
சட்ட செயல்முறைகள் மூலம் மிகக் குறுகிய காலத்தில் நீதியைப் பெறுவதை உறுதி செய்வது அரசின் பொறுப்பு என்று திரு அமித் ஷா கூறினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2133128
*****
AD/TS/PLM/RJ
(रिलीज़ आईडी: 2133157)
आगंतुक पटल : 28