ஊரக வளர்ச்சி அமைச்சகம்
நக்ஷா திறன் மேம்பாட்டுத் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தில் இரண்டாவது தொகுதிக்கான பயிற்சி, ஜூன் 16 முதல் நான்கு தேசிய உயர் சிறப்பு மையங்களில் தொடங்குகிறது
Posted On:
15 JUN 2025 12:20PM by PIB Chennai
மத்திய அரசின் கிராமப்புற மேம்பாட்டு அமைச்சகத்தின் நில வளத் துறை, நக்ஷா எனப்படும் தேசிய நகர்ப்புற வாழ்விடங்களின் புவிவெளிசார் அறிவு அடிப்படையில் நில சர்வே திட்டத்தில் திறன் மேம்பாட்டு இரண்டாம் கட்டத்தின் இரண்டாம் தொகுதிக்கான பயிற்சியை நாளைமுதல் (ஜூன் 16, 2025) நாட்டில் உள்ள நான்கு சிறப்பு மையங்களில் தொடங்க உள்ளது. நக்ஷா திறன் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் முதல் கட்டத்திலும் இரண்டாம் கட்டத்தின் முதல் தொகுதியிலும் ஹைதராபாத்தில் 160 முதன்மை பயிற்சியாளர்களுக்கு அளிக்கப்பட்ட பயிற்சி மே மாதம் நிறைவுற்றது. இரண்டாம் கட்டத்தின் முதல் தொகுதியில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் 151 அதிகாரிகளுக்கு 2025 ஜூன் 2 முதல் 7 வரை ஐந்து மையங்களில் வெற்றிகரமாக பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.
இந்த இரண்டாம் கட்ட பயிற்சித் திட்டத்தின் இரண்டாம் தொகுதியை நிலவளத் துறையின் செயலாளர் திரு மனோஜ் ஜோஷி, நாளை (ஜூன் 16, 2025) காலை 10:00 மணிக்கு காணொலி மூலம் தொடங்கி வைக்கிறார். இந்தப் பயிற்சித் திட்டத்தின் கீழ், சுமார் 74 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் இருந்து 128 அதிகாரிகள் பயிற்சி பெறவுள்ளனர். இந்த அதிகாரிகள் பின்வரும் நான்கு உயர் திறன் சிறப்பு மையங்களில், நகர்ப்புற சொத்து ஆய்வுகளுக்காக நவீன புவியியல் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவது குறித்து ஒரு வார நடைமுறைப் பயிற்சியைப் பெறுவார்கள்.
1.யஷ்வந்த்ராவ் சவான் மேம்பாட்டு நிர்வாக அகாடமி (யஷாடா), புனே, மகாராஷ்டிரா
2. வடகிழக்கு பிராந்திய சிறப்பு மையம், குவஹாத்தி, அசாம்
3. மகாத்மா காந்தி மாநில பொது நிர்வாக நிறுவனம் (MGSIPA), சண்டிகர், பஞ்சாப்
4. நிர்வாகப் பயிற்சி நிறுவனம் (ATI), மைசூரு, கர்நாடகா
நக்ஷா திட்டத்தின் கீழ் உயர் துல்லிய நகர்ப்புற நில அளவீடுகளை மேற்பார்வையிட தேவையான தொழில்நுட்ப திறன்களுடன் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பின் அதிகாரிகளையும் ஊழியர்களையும் தயார்படுத்துவதே இந்தப் பயிற்சியின் நோக்கமாகும்.
நக்ஷா திட்டம் (NAKSHA) பற்றி:
இந்தியாவின் நகர்ப்புற மக்கள் தொகை 2031-ம் ஆண்டுக்குள் 600 மில்லியனைத் தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுவதால், நவீன நிலப் பதிவுகளுக்கான தேவை அதிகரித்துள்ளது. நக்ஷா திட்டம் இந்த சவாலை தொழில்நுட்பம் சார்ந்த சிறந்த அணுகுமுறையுடன் எதிர்கொள்கிறது. நக்ஷா திட்டமானது மத்திய அரசின் நில வளத் துறை, இந்திய நில அளவைத்துறை, தேசிய தகவல் சேவை மையம் மற்றும் ஐந்து உயர் திறன் சிறப்பு மையங்களுடன் இணைந்து ஒரு முன்னோடித் திட்டமாக செயல்படுத்தப்படுகிறது. நக்ஷா திட்டம் 27 மாநிலங்கள், 3 யூனியன் பிரதேசங்களில் உள்ள 157 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் தொடங்கப்பட்டுள்ளது.
****
(Release ID: 2136444)
AD/TS/PLM/RJ
(Release ID: 2136455)
Visitor Counter : 2