உள்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

தெலுங்கானாவின் நிஜாமாபாத்தில் தேசிய மஞ்சள் வாரியத்தின் தலைமையகத்தை மத்திய அமைச்சர் திரு அமித் ஷா திறந்து வைத்தார்

Posted On: 29 JUN 2025 7:09PM by PIB Chennai

மத்திய உள்துறை அமைச்சரும் கூட்டுறவு அமைச்சருமான திரு அமித் ஷா இன்று (29.06.2025) தெலுங்கானாவின் நிஜாமாபாத்தில் தேசிய மஞ்சள் வாரியத்தின் தலைமையகத்தை திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில், மத்திய நிலக்கரி மற்றும் சுரங்க அமைச்சர் திரு ஜி. கிஷன் ரெட்டி, மத்திய உள்துறை இணையமைச்சர் திரு பண்டி சஞ்சய் குமார் மற்றும் பல பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் பேசிய, மத்திய அமைச்சர் திரு அமித் ஷா, நாடு முழுவதும், குறிப்பாக தெலுங்கானாவில், பல லட்சக் கணக்கான மஞ்சள் விவசாயிகளின் 40 ஆண்டுகால கோரிக்கையான தேசிய மஞ்சள் வாரியம் அமைக்க வேண்டும் என்பதை பிரதமர் திரு நரேந்திர மோடி நிறைவேற்றியுள்ளார் என்று கூறினார். மஞ்சள் விவசாயிகளுக்கு பிரதமர் அளித்த வாக்குறுதி நிறைவேற்றப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்தார். நிஜாமாபாத் பல ஆண்டுகளாக மஞ்சள் தலைநகராக அறியப்படுகிறது என்றும், இங்குள்ள விவசாயிகள் பல நூற்றாண்டுகளாக மஞ்சள் பயிரிட்டு வருகின்றனர் எனவும் அவர் கூறினார். ஆனால் அது உலக சந்தைகளை சென்றடையவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார். தேசிய மஞ்சள் வாரியம் உருவாக்கப்பட்டதன் மூலம், நிஜாமாபாத்தின் மஞ்சள் அடுத்த 3 முதல் 4 ஆண்டுகளுக்குள் உலகின் பல நாடுகளை சென்றடையும் என்று திரு அமித் ஷா கூறினார்.

தேசிய மஞ்சள் வாரியம் முறையாக செயல்படத் தொடங்கியதும், மஞ்சள் விவசாயிகள் இடைத்தரகர்களின் செல்வாக்கிலிருந்து விடுபடுவார்கள் என்று திரு அமித் ஷா கூறினார். மஞ்சள் பேக்கேஜிங், பிராண்டிங், சந்தைப்படுத்தல் மற்றும் ஏற்றுமதிக்கான முழுமையான சங்கிலியை தேசிய மஞ்சள் வாரியம் நிறுவும் என்று அவர் குறிப்பிட்டார். 2030-ம் ஆண்டுக்குள் மஞ்சள் ஏற்றுமதியில் ஒரு பில்லியன் டாலர்களை ஈட்டுவதை மத்திய அரசு இலக்காகக் கொண்டுள்ளது என்றும், தேவையான அனைத்து ஏற்பாடுகளும் ஏற்கனவே செய்யப்பட்டுள்ளன என்றும் திரு அமித் ஷா கூறினார்.

*****

(Release ID: 2140623)

AD/TS/PLM/RJ


(Release ID: 2140646) Visitor Counter : 30