சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
தில்லியில் செவிலியர் அதிகாரிகள் மற்றும் துணை மருத்துவ ஊழியர்களுக்கு மத்திய சுகாதார அமைச்சர் திரு ஜே.பி. நட்டா, பணி நியமனக் கடிதங்களை வழங்கினார்
நாட்டில் பிரசவத்தின் போது தாய் சேய் இறப்பு விகிதம் பெருமளவு குறைந்துள்ளது - திரு ஜே.பி. நட்டா
நாட்டில் 2014-ம் ஆண்டுக்குப் பின் மருத்துவக் கல்லூரிகளும் எய்ம்ஸ் மருத்துவமனைகளும் இரு மடங்குக்கு மேல் அதிகரிக்கப்பட்டுள்ளன - திரு ஜே.பி. நட்டா
Posted On:
06 JUL 2025 3:35PM by PIB Chennai
மத்திய சுகாதார அமைச்சர் திரு ஜகத் பிரகாஷ் நட்டா, தில்லி நர்சிங் அதிகாரிகள் மற்றும் துணை மருத்துவ ஊழியர்களுக்கு பணி நியமனக் கடிதங்களை இன்று (06.07.2025) வழங்கினார். அத்துடன் ஆயுஷ்மான் பாரத் பதிவு வாகனங்களையும் கொடியசைத்து தொடங்கி வைத்தார், தில்லி தேசிய தலைநகர் பகுதி அரசின் முதலமைச்சர் திருமதி ரேகா குப்தா முன்னிலையில் இன்று விக்யான் பவனில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது. தில்லி அரசின் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோரும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் உரையாற்றிய திரு நட்டா, "15 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது, தில்லியில் செவிலியர் அதிகாரிகள் மற்றும் துணை மருத்துவ ஊழியர்கள் நியமனக் கடிதங்களைப் பெறுவதால் இது ஒரு முக்கியமான நிகழ்ச்சி என்று கூறினார். சிறப்புப் பணியாளர்களை நியமிப்பதன் மூலம் சுகாதார அமைப்பை வலுப்படுத்தும் நோக்கில் தில்லி அரசு செயல்பட்டு வருகிறது என்று அவர் கூறினார்.
நாடு முழுவதும் மக்கள் சிகிச்சைக்காக தில்லிக்கு வருவதால் தில்லியில் அதிக சுகாதாரப் பணிச்சுமை நிலவுகிறது என்றும், முன்பு இது அலட்சியப்படுத்தப்பட்டது என்றும் திரு நட்டா கூறினார். தற்போதைய தில்லி அரசு சுகாதார உள்கட்டமைப்பை வலுப்படுத்தி, ஆயுஷ்மான் பாரத்- பிரதமரின் மக்கள் ஆரோக்கிய திட்டம், பிரதமரின் ஆயுஷ்மான் பாரத் சுகாதார உள்கட்டமைப்பு இயக்கம் ஆகியவற்றை செயல்படுத்தி வருவதை அவர் பாராட்டினார்.
அனைவருக்கும் சமமான, தரமான சுகாதாரப் பராமரிப்பை வழங்குவதில் ஆயுஷ்மான் ஆரோக்கிய மையங்களின் முக்கிய பங்கை திரு நட்டா எடுத்துரைத்தார். நோய்த் தடுப்பு சுகாதாரப் பராமரிப்புக்கு சிறப்பு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது எனவும் இதன் கீழ் பல்வேறு நோய்களுக்கான ஆரம்பகால நோயறிதலுக்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றும் அவர் கூறினார்.
இதுவரை, உயர் ரத்த அழுத்தத்திற்கு 18 கோடி பரிசோதனைகள், நீரிழிவு நோய்க்கு 17 கோடி பரிசோதனைகள், வாய்வழி புற்றுநோய்க்கு 15 கோடி பரிசோதனைகள், மார்பக புற்றுநோய்க்கு 7.5 கோடி பரிசோதனைகள் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய்க்கு 4.5 கோடி பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளன என அவர் குறிப்பிட்டார். தாய் மற்றும் குழந்தை பராமரிப்புத் துறையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களை எடுத்துரைத்த திரு நட்டா, ஆயுஷ்மான் ஆரோக்கிய மையங்கள் மூலம் கருத்தரித்தல் முதல் குழந்தை பிறப்பு, குழந்தைப் பருவ பராமரிப்பு வரை சேவை வழங்கப்படுகிறது என்று கூறினார்.
பிரசவத்தின்போது தாய் இறப்பு விகிதம் ஒரு லட்சம் பிறப்புகளுக்கு 130-லிருந்து 88 ஆகக் குறைந்துள்ளது எனவும் அதே நேரத்தில் குழந்தை இறப்பு விகிதம் 39-லிருந்து 26 ஆகக் குறைந்துள்ளது எனவும் அவர் தெரிவித்தார். மருத்துவக் கல்வி மற்றும் உள்கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள கணிசமான வளர்ச்சியை எடுத்துரைத்த திரு நட்டா, இந்தியாவில் 2014-ம் ஆண்டு வரை 7 எய்ம்ஸ் (AIIMS) மட்டுமே இருந்தன எனவும் ஆனால் இப்போது 20 எய்ம்ஸ் மட்டுமே செயல்பாட்டில் உள்ளன என்றும் கூறினார். 2014-ல் 387 ஆக இருந்த மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கை தற்போது 780 ஆக அதிகரித்துள்ளது என்று திரு ஜே.பி. நட்டா குறிப்பிட்டார்.
நிகழ்ச்சியில் பேசிய தில்லி முதலமைச்சர் திருமதி ரேகா குப்தா, தில்லியில் இதுவரை, ஆயுஷ்மான் திட்டத்தின் கீழ் 4 லட்சம் ஆயுஷ்மான் அட்டைகள் விநியோகிக்கப்பட்டுள்ளன என்றார். தில்லிக்கு ஒதுக்கப்பட்ட 1700 கோடி ரூபாயைப் பயன்படுத்தி மொத்தம் 1100 ஆயுஷ்மான் ஆரோக்கிய மையங்கள் 2026 மார்ச் 31-க்குள் தில்லியில் நிறுவப்படும் என்றும் தில்லி முதலமைச்சர் திருமதி ரேகா குப்தா தெரிவித்தார்.
****
(Release ID: 2142692)
AD/PLM/RJ
(Release ID: 2142700)