அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
சிஎஸ்ஐஆர்-ஐஜிஐபி-யில் தேசிய உயிரி வங்கியை மத்திய இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் தொடங்கி வைத்தார்
Posted On:
06 JUL 2025 5:58PM by PIB Chennai
மத்திய அறிவியல், தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் சிஎஸ்ஐஆர்-இன்ஸ்டிடியூட் ஆஃப் ஜெனோமிக்ஸ் அண்ட் இன்டெக்ரேட்டிவ் பயாலஜி (IGIB) நிறுவனத்தில் இன்று (06.07.2025) அதிநவீன தேசிய உயிரி வங்கியைத் திறந்து வைத்தார்.
புதிதாகத் தொடங்கப்பட்ட இந்த வசதி, இந்தியாவின் சார்பில் சொந்த சுகாதார தரவுத்தளத்தை உருவாக்குவதற்கும் எதிர்காலத்தில் தனிப்பயனாக்கப்பட்ட சிகிச்சை முறைகளை செயல்படுத்துவதற்கும் ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றமாக அமையும்.
இந்தியா முழுவதும் 10,000 நபர்களிடமிருந்து விரிவான மரபணு விவரங்கள், வாழ்க்கை முறை விவரங்கள், மருத்துவத் தரவு ஆகியவற்றிச் சேகரித்து, நாடு தழுவிய கூட்டு ஆய்வின் முதுகெலும்பாக இந்த பயோ பாங்க் எனப்படும் உயிரி வங்கி செயல்படும். இங்கிலாந்து உயிரி வங்கி மாதிரியிலிருந்து உத்வேகம் பெற்று, இது இந்தியாவில் அமைக்கப்பட்டுள்ளது. எனினும் சமூக-பொருளாதார பின்னணிகளில் நாட்டின் தனித்துவமான பன்முகத்தன்மைக்கு ஏற்ப இது யந அமைக்கப்பட்டுள்ளது. இந்த முயற்சி ஆரம்பகால நோயறிதலுக்கு உதவி சிகிச்சை இலக்கை மேம்படுத்தும். நீரிழிவு, புற்றுநோய், இருதய நோய்கள், அரிய மரபணு கோளாறுகள் போன்ற சிக்கலான நோய்களுக்கு எதிரான போராட்டத்தை இது வலுப்படுத்தும் என்று ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர்.
நிகழ்ச்சியில் பேசிய மத்திய இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங், இப்போது ஒவ்வொரு இந்தியரும் தங்கள் மரபணு அமைப்பு, வாழ்க்கை முறைகள் போன்ற சூழலுக்கு ஏற்ப தனிப்பயனாக்கப்பட்ட சிகிச்சையைப் பெறக்கூடிய ஒரு எதிர்கால நம்பிக்கை உள்ளதாக கூறினார்.
இந்தியர்கள் எதிர்கொள்ளும் தனித்துவமான சுகாதார சவால்களை அவர் எடுத்துரைத்தார். இந்தியாவில் மத்திய உடல் பருமன் அதிகமாக இருப்பதை அமைச்சர் குறிப்பிட்டார். இது பெரும்பாலும் குறைத்து மதிப்பிடப்படும் ஒரு ஆபத்து காரணியாக உள்ளது என அவர் குறிப்பிட்டார். மக்கள்தொகை சார்ந்த சுகாதார உத்திகளின் அவசியத்தை அவர் சுட்டிக் காட்டினார். நமது சூழல்கள் சிக்கலானவை எனவும் ஆழமாக பன்முகத்தன்மை கொண்டவை என்றும் இதனால்தான் பயோபேங்க் எனப்படும் உயிரி வங்கி இன்றியமையாததாகிறது என்றும் மத்திய இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் குறிப்பிட்டார்.
***
(Release ID: 2142726)
AD/PLM/RJ
(Release ID: 2142755)