சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
உலகத்தரத்திலான கயிறு பரிசோதனை ஆய்வகம் மற்றும் பயிற்சி மையம் பொள்ளாச்சியில் அமைக்கப்படும் – மத்திய இணையமைச்சர் செல்வி ஷோபா கரந்த்லஜே
கயிறு தொழில்துறை மேம்பாட்டுக்கு மத்திய அரசு முழு ஆதரவு அளிக்கும் – செல்வி ஷோபா கரந்த்லாஜே
Posted On:
11 JUL 2025 4:08PM by PIB Chennai
உலகத்தரத்திலான கயிறு பரிசோதனை ஆய்வகம் மற்றும் பயிற்சி மையம் பொள்ளாச்சியில் அமைக்கப்படும் என்றும் கயிறு தொழில்துறை மேம்பாட்டுக்கு மத்திய அரசு முழு ஆதரவு அளிக்கும் என்றும் மத்திய குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை இணையமைச்சர் செல்வி ஷோபா கரந்த்லஜே கூறியுள்ளார். கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சியில் கயிறு தொழில்துறையினர் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.

கயிறு தொழில்துறையில் சவால்களும், வாய்ப்புகளும் என்ற தலைப்பில் நடைபெற்ற இக்கூட்டத்தில், தொழில்துறை மேம்பாட்டுக்கான ஆலோசனைகளை சம்பந்தப்பட்ட தரப்பினர் வழங்கினர். கூட்டத்தில் பேசிய மத்திய இணையமைச்சர் செல்வி ஷோபா கரந்த்லஜே, கயிறு தொழில்துறையின் எதிர்காலத் திட்டங்களை வடிவமைக்க இக்கூட்டம் சிறந்த தளமாக அமைந்துள்ளது என்றார். குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் நாட்டின் பொருளாதார வளர்ச்சியிலும், சுயவேலைவாய்ப்புக்கும் முக்கியப் பங்காற்றுவதாக அவர் குறிப்பிட்டார். குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் பிரிவில் கயிறு தொழில்துறைக்கு முக்கிய இடம் உள்ளது என்று அவர் கூறினார்.

இந்தத் தொழில்துறை சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு உதவுவதுடன், கிராமப்புற கைவினைஞர்களுக்கும், பெண்களுக்கும் நிலையான வாழ்வாதாரத்தை உருவாக்கித் தருவதாக கூறினார். இந்தியாவை கயிறு தொழில்துறையின் மையமாக மாற்றும் தொலைநோக்குப் பார்வையுடன் மத்திய அரசு செயல்பட்டு வருவதாக அவர் கூறினார். இத்துறைக்குத் தேவையான திறன் மேம்பாடு, சந்தை அணுகல், ஏற்றுமதிக் கட்டமைப்பு ஆகியவற்றை ஏற்படுத்தித் தர மத்திய அரசு உறுதி பூண்டுள்ளதாக அவர் தெரிவித்தார். பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கத் திட்டத்தின் கீழ், கயிறு தொழிற்சாலைகளுக்கு 35 சதவீதம் வரை மானியம் வழங்கப்படுவதை அவர் சுட்டிக்காட்டினார். அரசின் திட்டங்களை இத்தொழில்துறையினர் பயன்படுத்திக் கொண்டு உலகத்தரத்தில் போட்டித் தன்மை கொண்ட கயிறு பொருட்களை உற்பத்தி செய்ய வேண்டும் என செல்வி ஷோபா கரந்த்லஜே கேட்டுக் கொண்டார்.

இந்தக் கூட்டத்தில் குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் அமைச்சகத்தின் இணைச் செயலாளரும், கயிறு வாரியத்தின் தலைவருமான திரு விபுல் கோயல், கயிறு வாரியத்தின் செயலாளரும், மத்திய குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் துறை இயக்குநருமான திரு ஜி அருண் இத்துறையைச் சேர்ந்த தொழில்துறை பிரதிநிதிகள், மாநில அரசின் பிரதிநிதிகள், கயிறு உற்பத்தியாளர்கள், ஏற்றுமதியாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
-----
AD/PLM/SG
(Release ID: 2144018)