சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
azadi ka amrit mahotsav

கோவை கரும்பு இனப்பெருக்க நிறுவன விஞ்ஞானிகளுக்கு தேசிய வேளாண் அறிவியல் விருது – மத்திய அமைச்சர் திரு சிவ்ராஜ் சிங் சௌகான் வழங்கினார்

Posted On: 17 JUL 2025 4:03PM by PIB Chennai

கோயம்புத்தூரில்  இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தின் கீழ் செயல்படும் கரும்பு இனப்பெருக்க நிறுவனத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள்  திரு கே ஹரி, திரு புத்ரபிரதாப், திரு பி முரளி, திரு ரமேஷ் சுந்தர், திரு வி சிங்காரவேலு ஆகிய 5 பேருக்கு தேசிய வேளாண் அறிவியல் விருது வழங்கப்பட்டுள்ளது. புதுதில்லியில், நேற்று (16.07.2025) நடைபெற்ற இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கவுன்சிலின் 97-வது நிறுவன தின விழாவின் போது இந்த விருதுகளை அவர்களுக்கு மத்திய வேளாண் துறை அமைச்சர் திரு சிவ்ராஜ் சிங் சௌகான் வழங்கினார். “வேளாண்மையிலும் அதனுடன் தொடர்புடைய துறைகளிலும் புதுமை கண்டுபிடிப்புகளும் தொழில்நுட்பமும்” என்ற பிரிவின் கீழ் அவர்களுக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு முதல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த விருது. விவசாயத்தில் நவீன ஆராய்ச்சியையும், புதுமை கண்டுபிடிப்புகளையம் அங்கீகரித்து அதற்கென வழங்கப்படுகிறது.  மண்ணின் ஈரப்பதத்தை அளவிட்டுக் காட்டும் கருவியை இந்த விஞ்ஞானிகள் குழு உருவாக்கியதற்காக இந்த விருது அவர்களுக்கு வழங்கப்பட்டது.   இந்தக் கருவியின் மூலம், ஈரப்பத அளவைக் கண்காணித்து பயிர் சாகுபடியில் இழப்பு ஏற்படாமல் தடுக்க முடியும் என இதனைக் கண்டுபிடித்த விஞ்ஞானிகள் தெரிவித்தனர். தமிழ்நாட்டின் 5 மாவட்டங்களில் நடைபெற்ற கள சோதனைகளின் மூலம் இது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அவர்கள் கூறினர்.

இந்தக் கருவியைக் கண்டுபிடித்து விருது பெற்ற விஞ்ஞானிகளுக்கு கரும்பு இனப்பெருக்க நிறுவனத்தின் இயக்குநர் திரு பி. கோவிந்தராஜ், பாராட்டுத் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு, மகாராஷ்டிரா, உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் நீர்ப்பாதுகாப்புத் திட்டங்களில் இக்கருவி பயன்படுத்தப்படுவதாக அவர் கூறினார். மத்திய அரசு மானியத் திட்டங்களுக்கு இக்கருவி பரிந்துரைக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.  தற்போது இந்தக் கருவி 2,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.

 

----- 

AD/PLM/KPG/AG


(Release ID: 2145490)
Read this release in: English