பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

பிரதமர் திரு நரேந்திர மோடி பீகார், மேற்கு வங்க மாநிலங்களுக்கு நாளை (ஜூலை 18-ம் தேதி) பயணம்

பீகாரின் மோதிஹரியில் ரூ.7,200 கோடிக்கும் கூடுதல் மதிப்பிலான பல்வேறு மேம்பாட்டுத் திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டுவதுடன், முடிவுற்றத் திட்டங்களைத் தொடங்கி வைக்கிறார்

தர்பங்காவில் புதிய மென்பொருள் தொழில்நுட்ப பூங்காவையும், பாட்னாவில் மென்பொருள் தொழில்நுட்ப பூங்கா வளாகத்தில் உள்ள அதிநவீன மென்பொருள் மேம்பாட்டிற்கான தொடக்கநிலை ஆலையையும் பிரதமர் தொடங்கி வைக்கிறார்.

பீகாரில் ரயில் போக்குவரத்து இணைப்புக்கு பெரும் உத்வேகம் அளிக்கும் வகையில், நான்கு புதிய அம்ரித் பாரத் ரயில் சேவைகளை பிரதமர் கொடியசைத்து தொடங்கி வைக்கிறார்

மேற்கு வங்க மாநிலம் துர்காபூரில் ரூ.5000 கோடிக்கும் கூடுதல் மதிப்பிலான பல்வேறு மேம்பாட்டுத் திட்டப் பணிகளுக்குப் பிரதமர் அடிக்கல் நாட்டுவதுடன், முடிவுற்ற திட்டங்களை நாட்டிற்கு அர்ப்பணித்து வைக்கிறார்.

பல்வேறு துறை சார்ந்த திட்டங்கள்: எண்ணெய் மற்றும் எரிவாயு, மின்சாரம், சாலை மற்றும் ரயில் போக்குவரத்து

Posted On: 17 JUL 2025 11:04AM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடி நாளை (ஜூலை 18 - ம் தேதி) பீகார், மேற்கு வங்க மாநிலங்களுக்குப்  பயணம் மேற்கொள்கிறார். காலை 11:30 மணியளவில், பீகாரில் உள்ள மோதிஹரியில் ரூ.7,200 கோடிக்கும் கூடுதல் மதிப்பிலான பல்வேறு மேம்பாட்டுத் திட்டப் பணிகளுக்கு அவர்   அடிக்கல் நாட்டுவதுடன், முடிவுற்றத் திட்டங்களைத் தொடங்கி வைக்கிறார், பின்னர் நடைபெறும் பொது நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அவர் உரையாற்றுகிறார்.

இதனையடுத்து, மேற்கு வங்க மாநிலத்திற்குச் செல்லும் பிரதமர், பிற்பகல் 3 மணியளவில் துர்காபூரில் ரூ.5000 கோடிக்கும் கூடுதல் மதிப்பிலான பல்வேறு மேம்பாட்டுத் திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டுவதுடன், நிறைவடைந்த திட்டங்களை நாட்டிற்கு அர்ப்பணித்து வைத்து உரையாற்றுகிறார்.

பீகாரில் பிரதமர்

ரயில், சாலை, கிராமப்புற மேம்பாடு, மீன்வளம், மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறைகளுக்கான தேசிய மேம்பாட்டுத் திட்டங்களுக்கு  அடிக்கல் நாட்டுவதுடன், முடிவுற்றத் திட்டங்களை நாட்டிற்கு அர்ப்பணித்து வைக்கிறார்.

போக்குவரத்துக்கான இணைப்பு மற்றும் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் வகையில், பிரதமர் பல்வேறு ரயில் திட்டங்களை நாட்டிற்கு அர்ப்பணித்து வைக்கிறார். இதில் சமஸ்திபூர்-பச்வாரா இடையேயான ரயில் வழித்தடத்தில் தானியங்கி சமிக்ஞை கருவிகளை அமைக்கும் பணிகளும் அடங்கும். இது இந்த வழித்தடத்தில் ரயில் போக்குவரத்து சேவைகளை திறம்பட மேற்கொள்வதற்கு வகை செய்கிறது. தர்பங்கா-சமஸ்திபூர் இடையே இரட்டை வழித்தடம் அமைக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக ரூ.580 கோடிக்கு கூடுதல் செலவில், தர்பங்கா-தல்வாரா, சமஸ்திபூர்-ராம்பத்ரபூர் இடையே இரட்டை வழித்தடம் அமைப்பது என்பது, ரயில் போக்குவரத்து சேவையின் திறனை அதிகரிக்க உதவுவதுடன், கால தாமதங்களையும் வெகுவாக குறைக்கும்.

பாடலிபுத்ராவில் வந்தே பாரத் ரயில்களைப் பராமரிப்பதற்கான உள்கட்டமைப்பு வசதிகளின் மேம்பாட்டுத் திட்டங்களும் இதில் அடங்கும். பட்னி-சாப்ரா கிராமின் ரயில் வழித்தடத்தில் (114 கி.மீ) தானியங்கி சமிக்ஞை கருவிகளை பொருத்துவது சீரான ரயில் போக்குவரத்திற்கு உதவிடும். இந்த வழித்தடத்தில் இழுவை அமைப்பை மேம்படுத்தி, அதன் உள்கட்டமைப்பு வசதியை வலுப்படுத்துவதன் வாயிலாக எரிசக்தித்  திறன் மேம்பட வழி வகுக்கும். இது ரயிலின் செயல்திறனை அதிகரிக்கச் செய்வதுடன், அதன் வேகத்தையும் அதிகரிக்க உதவிடும். தர்பங்கா-நர்கதியாகஞ்ச் இடையேயான ரயில் பாதை இரட்டிப்பாக்கும் திட்டம் அதிக எண்ணிக்கையிலான பயணிகள் மற்றும் சரக்கு ரயில்களை இயக்கவும், வடக்கு பீகார் மற்றும் நாட்டின் பிற பகுதிகளுக்கு இடையே ரயில் போக்குவரத்துக்கான இணைப்பை வலுப்படுத்தவும் ரூ.4,080 கோடி மதிப்பிலான திட்டத்திற்கும் பிரதமர் அடிக்கல் நாட்டுகிறார்.

இம்மாநிலத்தில் சாலை உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் வகையில், பிரதமர் தேசிய நெடுஞ்சாலை எண் - 319 - ல் உள்ள ஆரா புறவழிச்சாலையில், ஆரா - மோஹானியா இடையே 4-வழிச் சாலை அமைக்கும் திட்டத்திற்கும், பாட்னா-பக்சர் இடையே நெடுஞ்சாலை எண் - 922 - ஐ இணைக்கும் திட்டத்திற்கும் பிரதமர் அடிக்கல் நாட்டுகிறார். இது இப்பகுதியில் தடையற்ற போக்குவரத்துக்கான இணைப்பை வழங்குவதுடன், பயண நேரத்தையும் கணிசமான அளவில் குறைக்கிறது.

தேசிய நெடுஞ்சாலை எண் - 319 - ல் பராரியா - மோஹானியா வரையிலான 4-வழிச் சாலையையும் பிரதமர் மக்கள் பயன்பாட்டிற்காகத் திறந்து வைக்கிறார். இது அரா நகரத்தை தேசிய நெடுஞ்சாலை எண் - 02 (தங்க நாற்கரம்) சாலையுடன் இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை எண் - 319 திட்டத்தின் ஒரு பகுதியாகும். இத்திட்டம், சரக்கு மற்றும் பயணிகள் போக்குவரத்தை மேம்படுத்துவதற்கு உதவிடும். இவைதவிர, தேசிய நெடுஞ்சாலை எண் - 333சி - ல், சர்வான் - சக்காய் இடையே நடைபாதையுடன் கூடிய 2-வழிப்பாதை அமைக்கப்பட உள்ளது. இது சரக்குகள் மற்றும் மக்களின் போக்குவரத்தை எளிதாக்குவதுடன், பீகார் மற்றும் ஜார்க்கண்ட் மாநிலங்களுக்கு இடையே ஒரு முக்கியதத்துவம் வாய்ந்த போக்குவரத்துக்கான இணைப்பாக செயல்படும்.

தர்பங்காவில் புதிய மென்பொருள் தொழில்நுட்ப பூங்காவையும், தகவல் தொழில்நுட்பம், அது சார்ந்த சேவைகள், மின்னணுவியல் அமைப்பு முறை, வடிவமைப்பு மற்றும் உற்பத்திக்கான தொழில் நிறுவனங்கள், புத்தொழில் நிறுவனங்களை ஊக்குவிக்கும் வகையில், பாட்னாவில் மென்பொருள் தொழில்நுட்ப பூங்கா அமைந்துள்ள வளாகத்தில் அதிநவீன தொடக்கநிலை மென்பொருள் மேம்பாட்டு ஆலையையும் பிரதமர் திறந்து வைக்கிறார். இந்த வசதிகள் தகவல் தொழில்நுட்ப  மென்பொருள், சேவை ஏற்றுமதிகளை அதிகரிக்க உதவிடும். இது வளர்ந்துவரும் தொழில்முனைவோருக்கு தொழில்நுட்ப நிறுவனங்களைத் தொடங்குவதற்கான சூழலை வளர்ப்பதுடன், புதுமை கண்டுபிடிப்புகள், அறிவுசார் சொத்துரிமை, உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் ஆகியவற்றை மேம்படுத்தும்.

பீகாரில் மீன்வளம் மற்றும் மீன்வளர்ப்புத் துறையை வலுப்படுத்துவதற்கான ஒரு முக்கிய நடவடிக்கையாக, பிரதமரின் மீன்வள மேம்பாட்டுத் திட்டத்த்தின் கீழ் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ள தொடர்ச்சியான மீன்வள மேம்பாட்டுத் திட்டங்களை பிரதமர் தொடங்கி வைக்கிறார். இத்திட்டம் அம்மாநிலத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் புதிய மீன் குஞ்சு பொரிப்பகங்கள், உயிரித் தொகுதிக்கான அலகுகள், அலங்கார மீன் வளர்ப்பு, ஒருங்கிணைந்த மீன்வளர்ப்பு அலகுகள், மீன்களுக்கான தீவன உற்பத்தி ஆலைகள் உள்ளிட்ட நவீன மீன்வள உள்கட்டமைப்பு வசதிகளைத் தொடங்க வகை செய்கிறது. மீன்வளர்ப்புத் திட்டங்கள் வேலை வாய்ப்புகளை உருவாக்கவும், மீன் உற்பத்தியை அதிகரிக்கவும், தொழில்முனைவோரை ஊக்குவிக்கவும், அம்மாநில கிராமப்புறங்களில் சமூக-பொருளாதார வளர்ச்சியை துரிதப்படுத்தவும் உதவிடும்.

எதிர்காலத்திற்குத் தேவைப்படும் ரயில் கட்டமைப்பிற்கான பிரதமரின் தொலைநோக்குப் பார்வைக்கு ஏற்ப, ராஜேந்திர நகர் முனையம் (பாட்னா) முதல் புது தில்லி வரையும், பாபுதம் மோதிஹரி முதல் தில்லி (ஆனந்த் விஹார் முனையம்) வரையும், தர்பங்கா முதல் லக்னோ (கோமதி நகர்) வரையும், மால்டா டவுன் முதல் லக்னோ (கோமதி நகர்) வரை பாகல்பூர் வழியாக நான்கு புதிய அம்ரித் பாரத் ரயில் சேவைகளை பிரதமர் கொடியசைத்து தொடங்கி வைக்கிறார்.

பீகார் மாநிலத்தில் 61,500 சுயஉதவிக் குழுக்களுக்கு, தீனதயாள் அந்த்யோதயா திட்டம் - தேசிய கிராமப்புற வாழ்வாதாரத் திட்டத்தின் கீழ், ரூ.400 கோடி நிதியுதவியை பிரதமர் விடுவிக்கறார். மகளிர் தலைமையிலான பொருளாதார மேம்பாட்டில் சிறப்பு கவனம் செலுத்தப்பட்டு, 10 கோடிக்கும் மேற்பட்ட பெண்கள் சுயஉதவிக் குழுக்களுடன் இணைக்கப்பட்டுள்ளனர்.

12,000 பயனாளிகளின் புதிதாகக் கட்டப்பட்டுள்ள வீட்டில் குடியேறும் நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, சில பயனாளிகளுக்கு வீட்டிற்கான சாவிகளை பிரதமர் வழங்குகிறார். மேலும் பிரதமரின் கிராமப்புற வீட்டுவசதித் திட்டத்தின் கீழ் 40,000 பயனாளிகளுக்கு ரூ.160 கோடிக்கும் அதிகமான நிதியுதவியை பிரதமர் வழங்குகிறார்.

மேற்கு வங்கத்தில் பிரதமர்

மேற்கு வங்க மாநிலத்திற்கு செல்லும் பிரதமர், எண்ணெய் மற்றும் எரிவாயு, மின்சாரம், சாலை மற்றும் ரயில் போன்ற பல்வேறு துறைகளுக்கான மேம்பாட்டுத் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுவதுடன் நிறைவடைந்துள்ள திட்டங்களை தொடங்கியும் வைக்கிறார்.

இந்தப் பகுதியில் எண்ணெய் மற்றும் எரிவாயு திட்டங்களுக்கான உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் வகையில், மேற்கு வங்க மாநிலம் பன்குரா மற்றும் புருலியா மாவட்ங்களில் ரூ.1,950 கோடி மதிப்பிலான பொதுத்துறை நிறுவனமான பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தின் (பிபிசிஎல்) நகரப்புற எரிவாயு விநியோக (சிஜிடி) திட்டத்திற்குப்  பிரதமர் அடிக்கல் நாட்டுகிறார். இத்திட்டத்தின் மூலம்  வீடுகள், வர்த்தக நிறுவனங்கள், தொழில்துறை நிறுவனங்களைச் சேர்ந்த வாடிக்கையாளர்களுக்கு குழாய்கள் மூலம் இயற்கை எரிவாயு  இணைப்புகளை வழங்குவதற்கு உதவுவதுடன், மேலும் சில்லறை விற்பனை நிலையங்களில் அழுத்தப்பட்ட இயற்கை எரிவாயு விநியோகம்  மற்றும் அப்பகுதிகளில் வேலை வாய்ப்புகளை உருவாக்குவதற்கும் வகை செய்கிறது.

துர்காபூர்-ஹால்டியா இடையே அமைக்கப்பட்டுள்ள இயற்கை எரிவாயு குழாய் பாதையின் (132 கி.மீ) ஒரு பகுதியையும் பிரதமர் நாட்டிற்கு அர்ப்பணித்து வைக்கிறார். இது ஜகதீஷ்பூர் - ஹால்டியாபொகாரோ-தாம்ரா குழாய் பாதை அமைக்கும் திட்டத்தின் கீழ், பிரதமரின்  உர்ஜா கங்கா திட்டத்தின் ஒரு பகுதியாக அமைக்கப்பட்டுள்ளது. ரூ.1,190 கோடிக்கும் கூடுதல் மதிப்பிலான துர்காபூர்-கொல்கத்தா பகுதியில் மேற்கு வங்க மாநிலத்தின் புர்பா பர்த்மான், ஹூக்ளி, நாடியா மாவட்டங்கள் வழியாக இந்த குழாய் அமைக்கப்படவுள்ளது. இந்த குழாய் பாதை அமைக்கும் பணிகளை செயல்படுத்தும் போது ஏராளமான நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்புக்களை வழங்கும். மேலும் தற்போது இந்த பிராந்தியத்தில் உள்ள லட்சக்கணக்கான வீடுகளுக்கு சீரான இயற்கை எரிவாயு விநியோகத்தையும் எளிதாக்கும்.

அனைவருக்கும் தூய்மையான காற்று, சுகாதாரப் பாதுகாப்பு என்ற தனது தொலைநோக்குப் பார்வைக்கு ஏற்ப, பிரதமர் ரூ.1,457 கோடிக்கும் கூடுதல் மதிப்பிலான மாசு கட்டுப்பாட்டு அமைப்பு -ஃப்ளூ எரிவாயுவில் உள்ள  கந்தகத்தை அகற்றும் பணிகள் ஆகியவற்றை அவர் நாட்டிற்கு அர்ப்பணித்து வைக்கிறார். இது தூய்மை எரிசக்தி உற்பத்தியை ஊக்குவிப்பதுடன், அப்பகுதியில் வேலை வாய்ப்புகளை உருவாக்குவதற்கும் உதவிடும்.

அம்மாநிலத்தில் ரயில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் வகையில், புருலியாவில் ரூ.390 கோடிக்கும் அதிக மதிப்பிலான  புருலியா - கோட்ஷிலா ரயில் பாதையை (36 கி.மீ) இரட்டிப்பாக்கும் திட்டத்தையும் பிரதமர் நாட்டிற்கு அர்ப்பணித்து வைக்கிறார். இது ஜாம்ஷெட்பூர், பொகாரோ, தன்பாத் ஆகிய பகுதிகளிலிருந்து ராஞ்சி, மற்றும் கொல்கத்தா நகரங்களுடன் தொழிற்சாலைகளுக்கு இடையேயான ரயில் இணைப்பை மேம்படுத்துவதுடன், சரக்கு ரயில்களின் செயல்பாட்டுத்  திறனையும் மேம்படுத்துவதுடன், பயண நேரத்தை வெகுவாகக் குறைத்து, தொழில் மற்றும் வணிக நிறுவனங்களுக்கான  சரக்குப் போக்குவரத்து சேவையையும் மேம்படுத்தும்.

சேது பாரதம் திட்டத்தின் கீழ் பஸ்சிம் பர்தாமானில் உள்ள டாப்சி மற்றும் பாண்டபேஷ்வரில் அமைக்கப்பட்டுள்ள ரூ.380 கோடிக்கும் கூடுதல் மதிப்பிலான இரண்டு சாலை மேம்பாலங்களை (ஆர்ஓபி) பிரதமர் திறந்து வைக்கிறார். இது போக்குவரத்து இணைப்பை மேம்படுத்துவதுடன், ரயில்வே லெவல் கிராசிங்கில் விபத்துகள் ஏற்படுவதைத் தடுக்கவும் உதவிடும்.

***

 

AD/TS/SV/AG


(Release ID: 2145543)