சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
azadi ka amrit mahotsav

இந்திய விருந்தோம்பலின் தூதர்களாக தங்கும் இல்லங்களின் உரிமையாளர்கள் திகழ்கின்றனர்- சுற்றுலாத்துறை தென்மண்டல இயக்குநர் திரு டி வெங்கடேசன்

Posted On: 08 SEP 2025 6:54PM by PIB Chennai

இந்திய சுற்றுலாத் துறையின் சென்னை பிரிவின் சார்பில் தங்கும் இல்லங்களின் உரிமையாளர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிலரங்கு 2025 செப்டம்பர் 8 (இன்று) கொடைக்கானலில் உள்ள  தமிழ்நாடு ஹோட்டலில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சி தமிழக அரசின் சுற்றுலாத்துறை, சென்னையில் உள்ள ஹோட்டல் மேலாண்மை நிறுவனம் ஆகியவற்றின் ஆதரவுடன் ஏற்பாடு செய்யப்பட்டது. சுற்றுலாத் துறையின் தென்மண்டல இயக்குநர்  திரு டி வெங்கடேசன் இப்பயிலரங்கை தொடங்கி வைத்தார்.

கொடைக்கானலை நீடித்த சுற்றுலா மையமாக நிலைபெறச் செய்வதில் தங்கும் இல்லங்களின் உரிமையாளர்கள்  சுற்றுலாப் பயணிகளுக்கு சிறந்த அனுபவங்களை அளிக்க வேண்டியதன் முக்கியத்துவம் குறித்து அவர் எடுத்துரைத்தார். இந்திய விருந்தோம்பலின் தூதர்களாக தங்கும் விடுதிகளின் உரிமையாளர்கள் திகழ்கின்றனர் என்று அவர் கூறினார்.

மத்திய அரசின் முத்ரா கடன் திட்டம் குறித்து எடுத்துரைத்த அவர், உள்கட்டமைப்பை புதுப்பிக்க மற்றும் சேவைகளை மேம்படுத்த இந்த வசதியை பயன்படுத்திக் கொள்ளுமாறு சேவைத் துறையைச் சேர்ந்த தொழில்முனைவோரையும் தங்கும் இல்லங்களின் உரிமையாளர்களையும் வலியுறுத்தினார்.

தங்கும் இல்லங்களின் பராமரிப்பு, சுகாதாரம், அழகுபடுத்துதல் மற்றும் தகவல் தொடர்பு திறன்கள் உள்ளிட்டவற்றில் காணப்படும் இடைவெளிகளை களைவதற்காக இந்த பயிலரங்கு நடைபெற்றது.

சென்னை ஹோட்டல் மேலாண்மை நிறுவனத்தைச் சேர்ந்த பிரதிநிதிகள் உரையாடல் நிகழ்வுகளையும் செயல் விளக்கங்களையும் நடத்தினார்கள்.

கொடைக்கானலைச் சேர்ந்த 106 தங்கும் இல்லங்களின் உரிமையாளர்கள், பராமரிப்பாளர்கள் இந்த அமர்வுகளில் பங்கேற்றனர். இப்பயிலரங்கில் கேள்வி பதில் அமர்வும் நடைபெற்றது.

 

***

SS/IR/LDN/KR


(Release ID: 2164759)