சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
ஜிப்மரில் சுனாமி பேரிடர் மீட்பு ஒத்திகை
Posted On:
11 SEP 2025 8:20PM by PIB Chennai
தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் பரிந்துரைகளின்படி, புதுச்சேரி அரசின் பேரிடர் தயார்நிலை முயற்சியின் ஒரு பகுதியாக, செப்டம்பர் 11, 2025 அன்று காலை 08:00 மணி முதல் 11:00 மணி வரை சுனாமி பேரிடர் மீட்பு ஒத்திகை பயிற்சியை புதுச்சேரி ஜிப்மர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை நடத்தியது. இயற்கை பேரிடரை எதிர்கொள்வதற்கான தயார்நிலை மீட்பு குழுக்களுடனான ஒருங்கிணைப்பு, அவசரகால நெறிமுறைகள் ஆகியவற்றை சோதிக்கும் வகையில் இந்த ஒத்திகை நடத்தப்பட்டது.
மருத்துவ கண்காணிப்பாளர் அலுவலகம், செவிலியர் பிரிவு, பாதுகாப்பு மற்றும் தீயணைப்பு பிரிவு, பிற துணை மருத்துவ பிரிவுகளுடன் இணைந்து இந்த ஒத்திகையை ஜிப்மர் அவசர கால சிகிச்சை துறை ஒருங்கிணைத்து நடத்தியது. இந்த ஒத்திகையில் சுனாமி எச்சரிக்கை ஒலியை தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்களை பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டுசென்று சிகிச்சை அளிக்கும் வகையில் ஒத்திகை நடத்தப்பட்டது. தீயணைப்பு மற்றும் பாதுகாப்பு ஊழியர்கள், பண்டக ஊழியர்கள், மருத்துவ பதிவேடு துறை, உடற்கல்வித் துறை மற்றும் ஜிப்மர் விளையாட்டு மைதான ஊழியர்களை தன்னார்வலர்களாக கொண்டு சுனாமியில் பாதிக்கப்பட்டவர்களை மருத்துவ சிகிச்சைக்கு கொண்டு சென்று உரிய சிகிச்சை அளிக்கும் வகையில் இந்த ஒத்திகை நடைபெற்றது. இதற்கென செவிலியர் மற்றும் மருத்துவ குழுக்கள் அடங்கிய முகாம்கள் அமைக்கப்பட்டன. இதில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களின் உறவினர்களாக 80 செவிலியர் பயிற்சி மாணவர்கள் பங்கேற்றனர்.
• பேரிடர் தொடர்பான அவசரநிலைகளைக் கையாளக் கூடிய வகையில் மருத்துவ வசதிகளைத் திரட்டுதல்
• மருத்துவப் பிரிவு, அவசரநிலை மற்றும் உள்நோயாளிப் பிரிவு அமைந்துள்ள பகுதிகளில் தேவையான சுகாதாரப் பணியாளர்களைப் பணி அமர்த்துதல்
• நோயாளிகளின் துரித போக்குவரத்திற்கான அவசரகால ஊர்தியின் சேவைகள்
• அவசரகால மருத்துவப் பிரிவு மற்றும் விபத்து மேலாண்மை நெறிமுறைகளை செயல்படுத்துதல்
• வளாகத்திற்குள்ளும் அதை சுற்றியுள்ள பகுதிகளிலும் மீட்பு பணிகளை மேற்கொள்ளுதல்
இயற்கை பேரிடர் போன்ற அவசரகால சூழலில் ஜிப்மரின் தயார்நிலை குறித்து ஜிப்மரின் இயக்குநர் டாக்டர் வீர் சிங் நேகி, விரிவாக எடுத்துரைத்தார். பாதுகாப்பான, வலிமையான மற்றும் மீள்தன்மை கொண்ட சமூகத்திற்கான பேரிடர் மீட்பு தயார்நிலையின் அவசியம் குறித்து அவர் வலியுறுத்தினார். இதுபோன்ற ஒத்திகைகள் பேரிடர் காலங்களில் உயிர்களை பாதுகாப்பதில் ஜிப்மரின் அர்ப்பணிப்பையும் அதற்காக தேவைப்படும் பயிற்சிகளை துரிதமாகவும் திறம்படவும் செயல்படுத்துவதை இந்த ஒத்திகை நிகழ்ச்சி பிரதிபலிப்பதாக உள்ளது என்று நேகி கூறினார்



***
AD/SV/AG/SH
(Release ID: 2165817)