சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
தேசிய கல்விக் கொள்கை 2020-ன் நடைமுறையில் புதுவைப் பல்கலைக்கழகம் முன்னிலை வகிக்கிறது: புதுவை பல்கலைக்கழக துணை வேந்தர்
Posted On:
12 SEP 2025 7:03PM by PIB Chennai
தேசிய கல்விக் கொள்கை 2020-ன் ஐந்து ஆண்டுகள் செயல்பாட்டை நினைவுகூரும் வகையில் புதுவைப் பல்கலைக்கழகம் உரைக்கோவை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது. இந்த நிகழ்ச்சியில் புதுவைப் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் பி. பிரகாஷ் பாபு, சென்னை ஐஐடி இயக்குநர் பேராசிரியர் வி. காமகோடி, புதுச்சேரி என்ஐடி இயக்குநர் பேராசிரியர் மகரந்த் கங்க்ரேகர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
2035-ம் ஆண்டுக்குள் உயர்கல்வி சேர்க்கையை 50% ஆக உயர்த்துவதற்கான தொலைநோக்குடன் சமமான, பன்முகக் கல்விக் கட்டமைப்பை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்ட தேசிய கல்விக் கொள்கை 2020-ன் இலக்குகளை பேராசிரியர் வி. காமகோடி எடுத்துரைத்தார்.
ஆசிரியர் கல்வி சீர்திருத்தங்கள், பாடத்திட்ட புதுப்பித்தல்கள், இடைநிலை சீர்திருத்தங்கள் போன்ற தேசிய கல்விக் கொள்கையின் முக்கிய கூறுகளை செயல்படுத்துவதில் புதுச்சேரி என்ஐடி மேற்கொண்டிருக்கும் முயற்சிகள் பற்றி எடுத்துரைத்ததோடு கல்விக்கு வங்கிக் கடன் போன்ற முக்கிய சீர்திருத்தங்களை செயல்படுத்துவதில் வெளிப்படைத்தன்மைக்கு அவசியம் இருப்பதை பேராசிரியர் மகரந்த் கங்க்ரேகர் வலியுறுத்தினார்.
புதுவைப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் பி. பிரகாஷ் பாபு பேசுகையில், தேசியக் கல்விக் கொள்கையின் சிறப்பம்சங்களை, குறிப்பாக நெகிழ்வான கற்றல் பாதைகளை நடைமுறைப்படுத்துவதில் புதுவை பல்கலைக்கழகம் முன்னணி வகிப்பதாக கூறினார்.
திறன் வளர்ச்சியின் முக்கியத்துவத்தை வலியுறுத்திய அவர், கர்மயோகி கட்டமைப்பிற்கான பன்னாட்டுப் பல்கலைக்கழக முன்முயற்சிகளை விவரித்தார்.
இந்தியாவின் பாரம்பரியம், கோயில் கட்டிடக்கலை, தமிழ் இலக்கியம் மற்றும் சுதந்திர போராட்ட வீரர்களின் தியாகங்களின் மதிப்பை உட்கொண்ட ஆழ்ந்த புரிதலின் அவசியத்தை திரு குந்தா லக்ஷ்மன் தனது முக்கிய உரையில் எடுத்துரைத்தார்.
மேலாண்மைப் பள்ளியின் டீன் பேராசிரியர் பி. நடராஜன், பேராசிரியர் வி வி சர்மா, பேராசிரியர் ஒய். வெங்கடராவ், டாக்டர் கிருஷ்ண குமார் ஜெய்ஸ்வால் ஆகியோரும் உரையாற்றினர். நிறைவாக கலாச்சார நிகழ்ச்சி நடைபெற்றது.


***
AD/SMB/KPG/KR/SH
(Release ID: 2166097)