சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
அரியலூரில் சென்னை பத்திரிகை தகவல் அலுவலகம் சார்பில் ஊடகவியலாளர்களுக்கான பயிலரங்கு நடைபெற்றது
Posted On:
12 SEP 2025 9:45PM by PIB Chennai

சென்னை பத்திரிகை தகவல் அலுவலகம் சார்பில் ஊடகவியலாளர்களுக்கான பயிலரங்கம் அரியலூரில் நடைபெற்றது. மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின் தென்மண்டலத் தலைமை இயக்குநர் திரு.வி.பழனிச்சாமி தலைமையில் இப்பயிலரங்கம் நடைபெற்றது
பயிலரங்கில் முதன்மை உரையாற்றிய தலைமை இயக்குநர் திரு.வி.பழனிச்சாமி , "அரசின் திட்டங்களை மக்களிடம் எடுத்துச் செல்லும் முக்கியப் பொறுப்பு செய்தியாளர்களுக்கு உள்ளது. சமூகத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்தி, அரசின் திட்டங்களை மக்கள் பயன்படுத்திக்கொள்ள வைப்பதில் செய்தியாளர்களின் பங்கு மிக முக்கியமானது. மக்களிடம் கொண்டு செல்லும் தகவல்கள் நம்பகத்தன்மையுடன் இருக்கும் வகையில் செய்தியாளர்கள் செய்திகளை வெளியிட வேண்டும். எந்தக் காரணத்தைக் கொண்டும் தவறான தகவல்கள் மக்களிடம் சென்றுவிடக் கூடாது என்பதில் கவனத்துடன் செயல்பட வேண்டும்" என்று வலியுறுத்தினார்.
வேளாண்மை, குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் சமூக நலத் திட்டங்கள் குறித்த அமர்வுகள்:
பயிலரங்கில் வேளாண்மை, சமூக நலன், குழந்தைகள் பாதுகாப்பு, வங்கித்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் கலந்துகொண்டு, மத்திய அரசால் செயல்படுத்தப்படும் திட்டங்கள் மற்றும் அவற்றில் பயனடையும் முறைகள் குறித்து விளக்கமளித்தனர்.
அரியலூர் மாவட்ட வேளாண் அறிவியல் மையத்தின் (KVK) தலைவர் மற்றும் முதுநிலை விஞ்ஞானி டாக்டர். அழகுக் கண்ணன் பேசுகையில், பருவநிலை மாற்றம் காரணமாக விவசாயிகள் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து விளக்கினார். விவசாயிகள் புதிய தொழில்நுட்பங்களை ஏற்றுக்கொண்டு, மண் வளத்தைப் பேணுவதன் அவசியம் குறித்து அவர் எடுத்துரைத்தார். மேலும், அரசு அறிமுகப்படுத்தியுள்ள பல்வேறு வேளாண் திட்டங்கள், மானியங்கள் மற்றும் உதவிகள் குறித்து செய்தியாளர்கள் விவசாயிகளிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் திரு. சரவணன் அவர்கள் பேசுகையில், சிறார்கள் செய்யும் குற்றங்கள் தொடர்பான செய்திகளை வெளியிடும்போது, ஊடகங்கள் அதிக பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்று வலியுறுத்தினார். குழந்தைகளின் எதிர்காலத்தைப் பாதுகாக்க, செய்தி வெளியிடும்போது அவர்களின் அடையாளம் வெளிப்படுத்தப்படாமல் இருப்பது மிகவும் அவசியம் என்றும் அவர் எடுத்துரைத்தார்.
மேலும், மாவட்ட சமூக நல அலுவலர் திருமதி. விக்னேஸ்வரி அவர்கள் பேசுகையில், மத்திய அரசின் 'பெண் குழந்தைகளைக் காப்போம், பெண் குழந்தைகளுக்குக் கற்பிப்போம்' திட்டத்தின் கீழ் அரியலூர் மாவட்டத்தில் பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்படுவதாகத் தெரிவித்தார். அரியலூரில் குழந்தை பாலின விகிதம் 1000 ஆண் குழந்தைகளுக்கு 897 பெண் குழந்தைகள் என்ற நிலையில் உள்ளதாகக் குறிப்பிட்ட அவர், குழந்தை திருமணங்களுக்கு எதிரான விழிப்புணர்வை செய்தியாளர்கள் தொடர்ந்து மக்களிடையே எடுத்துச் செல்ல வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
பயிலரங்கில் கலந்துகொண்ட அனைத்து செய்தியாளர்களுக்கும் நிகழ்ச்சியின் இறுதியில் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்ச்சியில், பத்திரிகை தகவல் அலுவலகத்தின் இயக்குநர் திரு.பி.அருண்குமார் மற்றும் துணை இயக்குநர் திருமதி.ஜெ.விஜயலட்சுமி ஆகியோர் கலந்துகொண்டனர்.



***
AD/EA/SH
(Release ID: 2166154)