சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
azadi ka amrit mahotsav

தூய்மையே சேவை 2025 சிறப்பு இயக்கம் மத்திய அஞ்சல் மண்டலத்தில் தொடக்கம்

Posted On: 17 SEP 2025 6:49PM by PIB Chennai

                                                                               

தூய்மையே சேவை 2025 சிறப்பு இயக்கம் மத்திய அஞ்சல் மண்டலத்தில் இன்று உறுதிமொழியேற்புடன் தொடங்கியது. இந்த ஆண்டின் கருப்பொருள் "தூய்மை  உற்சவம் – தூய்மையான மற்றும் பசுமையான நடவடிக்கைகள், கழிவில்லா சமூக விழாக்கள்" என்பதாகும். இந்த இயக்கம் காந்தி ஜெயந்தி தினமான  அக்டோபர் 2 அன்று நிறைவடைகிறது.

இந்த சிறப்பு இயக்கம் 17.09.2025 அன்று திருச்சிராப்பள்ளி தலைமை அஞ்சலக வளாகத்தில் தூய்மை உறுதிமொழியுடன் தொடங்கப்பட்டது. மத்திய அஞ்சல் மண்டல தலைவர் திருமதி தி நிர்மலா தேவி தலைமையில் 100-க்கும் மேற்பட்ட அஞ்சல் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். இந்நிகழ்வில் அஞ்சலக வாடிக்கையாளர்களும் கலந்து கொண்டனர். மத்திய அஞ்சல் மண்டல தலைவர் உரையாற்றிய போது அனைவரும் தூய்மை இயக்க நிகழ்வுகளை சமூக ஊடகங்களில் பதிவிடுவது மட்டுமின்றி நமது அன்றாட வாழ்விலும் கடைபிடிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

தூய்மை உறுதிமொழி, தூய்மை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கான அஞ்சல் ஊழியர்கள் கலந்து கொண்ட பேரணி, ஒருமுறை பயன்படுத்தும் நெகிழியைத்  தவிர்ப்பது குறித்த ஓவியப் போட்டி, மாணவர்களுக்கான படைப்பாற்றல் நிகழ்வு, தாயின் பெயரில் ஒரு மரக்கன்று இயக்கம், பொது இடங்களை அஞ்சல் ஊழியர்கள் தூய்மைப்படுத்தும் முயற்சி ஆகியவை மத்திய அஞ்சல் மண்டலத்தில் நடைபெறவுள்ளன.

தூய்மை பணியாளர்களுக்கு பாராட்டு மற்றும் தூய்மை காக்கும் பணியாளர்களுக்கு அஞ்சல்துறை மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி ஆகியவையும் நடைபெறவுள்ளது.

அஞ்சல் சேவைகள் மற்றும் உடல் பரிசோதனை முகாம், தூய்மை பணியாளர்கள் ஆதார், காப்பீடு, சிறு சேமிப்பு போன்ற அஞ்சல் சேவைகள் பெற சிறப்பு முகாம் மற்றும் அவர்களது உடல்நலனை உறுதிசெய்ய உடல் பரிசோதனை முகாம் ஆகியவற்றுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அரியலூர், கடலூர், கரூர், காரைக்கால், கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், பெரம்பலூர், புதுக்கோட்டை, திருவாரூர், தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி ஆகிய 12 மாவட்டங்களில் உள்ள அனைத்து தலைமை, துணை மற்றும் கிளை அஞ்சலங்கள் மற்றும் நிர்வாக அலுவலங்களில் தூய்மை இயக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

இந்த இயக்கம், தூய்மை என்பது ஒவ்வொருவரின் பொறுப்பும், பெருமையும் என்பதைக் கூறும் சமூக விழிப்புணர்வை உருவாக்கும் நோக்கத்துடன் முன்னெடுக்கப்படுகிறது. பொதுமக்கள் அனைவரும் பங்கேற்று தூய்மையான இந்தியாவை உருவாக்க ஒத்துழைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

  ***

SS/IR/KPG/SH


(Release ID: 2167719) Visitor Counter : 34