தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
                
                
                
                
                
                    
                    
                        வலிமையான தேசம் அதிகாரத்தில் மட்டுமே கட்டமைக்கப்படாமல் பண்பு, ஒருமைப்பாடு ஆகியவற்றின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்டுள்ளது: குடியரசுத் துணைத்தலைவர் திரு சி.பி. ராதாகிருஷ்ணன்
                    
                    
                        
                    
                
                
                    Posted On:
                22 SEP 2025 6:41PM by PIB Chennai
                
                
                
                
                
                
                குடியரசுத் துணைத்தலைவர் திரு சி.பி. ராதாகிருஷ்ணன் இன்று, பிரதமர் திரு நரேந்திர மோடி ஆற்றிய உரைகளின் தேர்ந்தெடுக்கப்பட்ட  4-வது மற்றும் 5-வது தொகுதிகளை (ஜூன் 2022–மே 2023 மற்றும் ஜூன் 2023–மே 2024 ஆண்டுகளுக்கு இடையே ஆற்றிய உரைகள்) வெளியிட்டார். ‘அனைவரும் இணைவோம், அனைவரும் உயர்வோம், அனைவரின் நம்பிக்கை, அனைவரின் முயற்சி’ என்ற தாரக மந்திரத்தின் தொகுப்புகள், மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தால் வெளியிடப்பட்டுள்ளன.
இந்த நிகழ்ச்சியில் பேசிய குடியரசுத் துணைத்தலைவர் பிரதமர் திரு மோடியின் தலைமையின் கீழ், தற்சார்பு இந்தியா என்ற தொலைநோக்குப் பார்வை, பாதுகாப்பு, விண்வெளி, மின்னணுவியல், சமூக வளர்ச்சி உள்ளிட்ட பல்வேறு முக்கிய துறைகளில் இந்தியாவை தன்னிறைவு பெற்ற நாடாக மாற்றியுள்ளது என்று கூறினார். ஒரு வலிமையான நாடு அதிகாரத்தின் அடிப்படையில் மட்டுமின்றி, பண்பு மற்றும் ஒற்றுமையின் அடிப்படையிலும் கட்டமைக்கப்படுகிறது என்பதை அவர் சுட்டிக் காட்டினார்.
தாய்மொழியில் தரமான கல்வி, சுத்தமான குடிநீர், சுகாதாரம், அனைவருக்கும் குறைந்த செலவில் சுகாதாரம், வறுமை ஒழிப்பு, தூய்மையான எரிசக்தி, பருவநிலை மாற்றத்தின் தாக்கத்தைக் குறைக்கும் நடவடிக்கை போன்ற நடவடிக்கைகள் 140 கோடி இந்தியர்களின் வாழ்க்கையில் நேர்மறையான மாற்றத்திற்கான சக்திவாய்ந்த கருவிகள் என்று குடியரசுத் துணைதலைவர் விரிவாக எடுத்துரைத்தார். கடந்த 11 ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட வளர்ச்சிக்கான சீர்திருத்த  நடவடிக்கைகள் 25 கோடிக்கும் மேற்பட்ட மக்களை வறுமையின் பிடியிலிருந்து விடுவித்து கண்ணியமான வாழ்க்கையை உறுதி செய்துள்ளன என்று அவர் குறிப்பிட்டார். "இல்லந்தோறும் கழிப்பறை கட்டப்படும்போது, அந்த வீட்டில் வசிப்பவர்களுக்கு கண்ணியத்தை அளிக்கிறது," என்று அவர் மேலும் கூறினார். பிரதமர் ஆற்றியுள்ள உரைகளின் சிறந்த தொகுதிகளை தேர்ந்தெடுத்து  வெளியிட்டதற்காக மத்திய தகவல், ஒலிபரப்பு அமைச்சகத்திற்கு குடியரசுத் துணைத்தலைவர் திரு சி பி ராதாகிருஷ்ணன் பாராட்டு தெரிவித்தார்.
அரசியலில் பிரதமர் மோடியின் தன்னலமற்ற சேவை மக்களின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது என்று மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சர் திரு அஸ்வினி வைஷ்ணவ் கூறினார். பிரதமர் அரசியலை மக்களுக்கு சேவை செய்வதற்கான ஒரு ஊடகமாக மாற்றியுள்ளார் என்றும், நிர்வாகத்தில் அவரது அணுகுமுறை மாற்றத்தை உருவாக்கியுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார். சமூகம், சேவை மற்றும் தேசத்தின் மீது தன்னலமின்றி உயர் மதிப்பு கொண்டிருப்பதால் பிரதமரின் தலைமைத்துவ பண்பு உத்வேகம் அளிப்பதாக உள்ளது என்றும் அவர் மேலும் கூறினார். பல வருடங்களாக மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான பிரதமரின் செயல்பாடுகள் குறித்து ஆய்வாளர்கள் புரிந்துகொள்ள இந்த புதிய தொகுப்பு விலைமதிப்பற்ற ஆதாரமாக திகழும் என்றும் திரு அஸ்வினி வைஷ்ணவ்  கூறினார்.
இந்நிகழ்ச்சியில் உரையாற்றிய மாநிலங்களவை துணைத் தலைவர் திரு ஹரிவன்ஷ், பிரதமர் திரு மோடி தொடர்புகளை வலுப்படுத்துவதில் உலகின் தலைசிறந்த தலைவர்களில் ஒருவராக திகழ்கிறார் என்று புகழாரம் சூட்டினார். ஒவ்வொரு திட்டத்தையும் மக்கள் இயக்கமாக உருவெடுக்கச் செய்யும் வகையில் அவற்றிற்கு பெயரிடுவதில் கூட அவர் மிகுந்த கவனம் செலுத்துகிறார் என்று குறிப்பிட்டார்.
 **
 
AD/SV/KPG
 
                
                
                
                
                
                (Release ID: 2169883)
                Visitor Counter : 15