சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
azadi ka amrit mahotsav

சென்னை, திருச்சி, மதுரை மற்றும் கோயம்புத்தூரில் வேலைவாய்ப்புத் திருவிழா- மத்திய அமைச்சர்கள் திரு பங்கஜ் சௌத்ரி, திரு ஸ்ரீபத் யசோ நாயக் பங்கேற்பு

Posted On: 24 OCT 2025 3:30PM by PIB Chennai

தேச கட்டுமானத்தில் இளைஞர்களின் பங்கேற்பை உறுதிசெய்யும் விதமாக வேலைவாய்ப்புத் திருவிழாக்கள் நடத்தப்படுகின்றன. இந்த வரிசையில் 17-வது வேலைவாய்ப்புத் திருவிழா இன்று நடைபெற்றது. நாடு முழுவதும் 51,000 இளைஞர்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி பணிநியமன ஆணைகளை வழங்கும் நிகழ்ச்சியில் காணொலி காட்சி மூலம் பங்கேற்றார்.

இதன் பகுதியாக தமிழ்நாட்டில் சென்னை, திருச்சி, மதுரை மற்றும் கோயம்புத்தூரில் வேலைவாய்ப்புத் திருவிழாக்கள் நடைபெற்றன. திருச்சியில் நடைபெற்ற திருவிழாவில் மத்திய நிதித்துறை இணையமைச்சர் திரு பங்கஜ் சௌத்ரி பங்கேற்று 112 இளைஞர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர் திரு துரை வைகோ, தேசிய தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தின் இயக்குநர் டாக்டர் ஜி அகிலா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

கோயம்புத்தூரில் நடைபெற்ற வேலைவாய்ப்பு திருவிழாவில் மத்திய மின்சாரம், புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித்துறை இணையமைச்சர்  திரு ஸ்ரீபத் யசோ நாயக் பங்கேற்று 51 இளைஞர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கினார். வேலைவாய்ப்பு திருவிழா என்பது இளைஞர்கள் நாட்டிற்கு சேவை செய்யவும், வளர்ச்சியடைந்த இந்தியா 2047-ன் கனவுகளை நனவாக்குவதற்கும் வாய்ப்புகளை வழங்குகிறது என்று இந்த நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் கூறினார். இப்போது பணியமர்த்தப்பட்டவர்கள் நேர்மையுடனும், உண்மையுடனும் பணியாற்ற வேண்டும் என்றும் எளிய மக்களுக்கு அர்ப்பணிப்புடன் சேவை செய்ய வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார். 3 ஆயிரத்திற்கும் அதிகமான சுயபயிற்சிக்கான வாய்ப்புகளை கொண்டுள்ள கர்மயோகி பிராரம்ப் என்ற இணையவழி சேவையை பணிநியமனம் பெற்றவர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும் அமைச்சர் கூறினார்.

வேலைவாய்ப்புத் திருவிழாவையொட்டி மரக்கன்று நடும் நிகழ்வும் நடைபெற்றது. இதில் அமைச்சர் திரு ஸ்ரீபத் யசோ நாயக், கோவை தெற்குத் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் திருமதி வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

சென்னையில் நடைபெற்ற வேலைவாய்ப்புத் திருவிழாவில் 116 இளைஞர்களுக்கு சென்னை மண்டல அஞ்சல்துறை தலைவர் திரு ஜி நடராஜன் பணிநியமன ஆணைகளை வழங்கினார்.

மதுரையில் நடைபெற்ற வேலைவாய்ப்புத் திருவிழாவில் 60  இளைஞர்களுக்கு தமிழ்நாடு வட்ட முதன்மை அஞ்சல்துறை தலைவர் திருமதி மரியம்மா தாமஸ்  பணிநியமன ஆணைகளை வழங்கினார்.

இன்று நடைபெற்ற வேலைவாய்ப்புத் திருவிழாக்களில் மத்திய அரசின் அஞ்சல்துறை, நிதி சேவைகள் துறை, ரயில்வே துறை, பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் போன்றவற்றில் பணிபுரிவதற்கான நியமனக் கடிதங்கள் வழங்கப்பட்டன.

***

SG/SS/SMB/AG/RJ


(Release ID: 2182128) Visitor Counter : 101