பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

20வது ஆசியான்-இந்தியா உச்சிமாநாட்டில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்

प्रविष्टि तिथि: 07 SEP 2023 10:19PM by PIB Chennai

மாண்புமிகு அதிபர் அவர்களே, மேதகு பெருமக்களே,

சந்திரயானின் வெற்றியைப் பாராட்டிய உங்கள் அனைவருக்கும் நான் மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். இருப்பினும், இந்த சாதனை, பாரதத்திற்கு மட்டும் சொந்தமானது அல்ல; இது முழு மனித இனத்தின் சாதனை. இது நமது இளைய தலைமுறையினரை அறிவியல் துறையில் மேலும் முன்னேற ஊக்குவிக்கும் மற்றும் மனிதகுலத்தின் நலனுக்கு பங்களிக்கும். உங்கள் மதிப்புமிக்க எண்ணங்கள் மற்றும் பரிந்துரைகளுக்கு நன்றி.

நமது கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்தவும், வளப்படுத்தவும், ஆறு முக்கிய துறைகளில் ஒத்துழைப்புக்கான திட்டங்களை உங்கள் முன் வைக்க விரும்புகிறேன். முதலாவது இணைப்பு. முத்தரப்பு நெடுஞ்சாலை மற்றும் அதன் விரிவாக்கத்தில் நாம் ஏற்கனவே பணியாற்றி வருகிறோம். கடல்சார் ஒத்துழைப்பு குறித்த நமது கூட்டு அறிக்கையை நான் வரவேற்கிறேன். தென்கிழக்கு ஆசியாவை பாரதம், மேற்கு ஆசியா மற்றும் ஐரோப்பாவுடன் இணைக்கும் பன்முக இணைப்பு மற்றும் பொருளாதார வழித்தடத்தை உருவாக்குவதே எனது தொலைநோக்குப் பார்வை.

இந்த வழித்தடம் தளவாடங்கள், விநியோகச் சங்கிலிகள், உள்கட்டமைப்பு, சுத்தமான எரிசக்தி மற்றும் சூரிய மின் கட்டமைப்புகள் போன்ற துறைகளில் கவனம் செலுத்தக் கூடும். இரண்டாவது பகுதி, டிஜிட்டல் மாற்றம். டிஜிட்டல் பொருளாதாரம் நமது எதிர்கால வளர்ச்சிக்கு ஒரு ஊக்கியாக உள்ளது. இந்தியாவில், சைபர் பாதுகாப்பு மற்றும் டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பிற்கு  நாங்கள் வலுவான முக்கியத்துவம் அளித்துள்ளோம். இந்தியாவில் உருவாக்கப்பட்ட "டிஜிட்டல் இந்தியா ஸ்டாக்" பற்றி உங்கள் அனைவருடனும் பகிர்ந்து கொள்வதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். இந்த சூழலில், "ஆசியான்-இந்தியா டிஜிட்டல் எதிர்காலத்திற்கான நிதி" நிறுவப்பட்டதை நான் அறிவிக்கிறேன்.

மூன்றாவது முக்கிய பகுதி, வர்த்தகம் மற்றும் பொருளாதார ஈடுபாடு. "ஆசியான்-இந்தியா சரக்கு வர்த்தக ஒப்பந்தம்" குறித்து கடந்த ஆண்டு ஏற்பட்ட முன்னேற்றத்தை நாங்கள் வரவேற்கிறோம். அதன் மதிப்பாய்வை நாம் காலக்கெடுவிற்குள் முடிக்க வேண்டும். அதே நேரத்தில், 'ஆசியான்-இந்தியா புத்தொழில் நிறுவன விழா' மற்றும் 'புதுமை உச்சிமாநாடு' போன்ற முயற்சிகள் முன்னோக்கி எடுத்துச் செல்லப்பட வேண்டும். இந்தச் சூழலில், "ஆசியான் மற்றும் கிழக்கு ஆசியாவிற்கான பொருளாதார ஆராய்ச்சி நிறுவனத்திற்கு" எங்கள் ஆதரவைப் புதுப்பிக்க முடிவு செய்துள்ளோம்.

மாண்புமிகு பெருமக்களே,

நான்காவது பகுதி, சமகால சவால்களை எதிர்கொள்வது. இன்று உணவு, உரம், எரிபொருள் மற்றும் காலநிலை மாற்றம் போன்ற பல சவால்களை  உலகளாவிய தெற்கு எதிர்கொள்கிறது. இந்த நாடுகளின் பகிரப்பட்ட கவலைகளை பலதரப்பு மன்றங்களில் நாம் கூட்டாக எழுப்ப வேண்டும். இந்தியாவில், உலக சுகாதார அமைப்பு "பாரம்பரிய மருத்துவத்திற்கான உலகளாவிய மையத்தை" நிறுவுகிறது. இந்த முயற்சியில் இணையுமாறு  உங்கள் அனைவரையும் நான் கேட்டுக் கொள்கிறேன். லைஃப் இயக்கம், அதாவது சுற்றுச்சூழலுக்கான வாழ்க்கை முறை போன்ற முயற்சிகளிலும் நாம் இணைந்து பணியாற்ற வேண்டும்.

இந்தியாவில் உள்ள மக்கள் மருந்தக மையங்கள் மூலம், மக்களுக்கு மலிவு விலையில் தரமான மருந்துகளை பரவலாகக் கிடைக்கச் செய்கிறோம். எங்கள் அனுபவங்களை உங்கள் அனைவருடனும் பகிர்ந்து கொள்வதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்.

ஐந்தாவது பகுதி, மக்களிடையேயான தொடர்புகள். இந்தச் சூழலில், கல்வி, அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், ஆராய்ச்சி, சுற்றுலா மற்றும் இளைஞர்களின் நலனில்  நாம் கவனம் செலுத்த வேண்டும். இன்று, பிரதமர் மேதகு சனானா குஸ்மாவோ நம்மிடையே இருப்பதால், இந்தியா திமோர்-லெஸ்டேயில் அதன் தூதரகத்தைத் திறக்க முடிவு செய்துள்ளது என்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

ஆறாவது பகுதி, நமது உத்திசார் ஈடுபாட்டை வலுப்படுத்துவதாகும். இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் அமைதி, பாதுகாப்பு, செழிப்பு மற்றும் முன்னேற்றத்தில் பொதுவான நலன்களைப் பகிர்ந்து கொள்கிறோம். இந்த ஆண்டு நாம் கடல்சார் பயிற்சிகளைத் தொடங்கியுள்ளோம். தென் சீனக் கடல் மற்றும் பிற உலகளாவிய கடல் பாதைகளில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மை, வழிசெலுத்தல் மற்றும் தடையில்லா  விமானப் பயணம் மற்றும் தடையற்ற சட்டப்பூர்வ வர்த்தகத்தை உறுதி செய்வது அவசியம். தென் சீனக் கடலுக்கான எந்தவொரு நடத்தை விதிகளும்  ஐக்கிய நாடுகள் சபையின் கடல் சட்ட சாசனம்  உட்பட சர்வதேச சட்டத்தின்படி இருக்க வேண்டும். இந்த விவாதங்களில் நேரடியாக ஈடுபடாத நாடுகளின் நலன்களையும் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும்.

மேதகு பெருமக்களே,

பயங்கரவாதம் பிராந்திய மற்றும் உலகளாவிய அமைதிக்கு ஒரு கடுமையான அச்சுறுத்தலாகும். பயங்கரவாதம், பயங்கரவாத நிதியுதவி மற்றும் சைபர் வழியிலான தவறான தகவல்களுக்கு எதிராக நாம் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் மற்றும் தீர்க்கமான முயற்சிகளை எடுக்க வேண்டும். பாரம்பரிய மற்றும் புதுவித அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதில் பரஸ்பர ஒத்துழைப்பை மேம்படுத்தவும் நான் முன்மொழிகிறேன். பேரிடர் மேலாண்மை மற்றும் கடல்சார் கள விழிப்புணர்வு துறைகளிலும் நாம் ஒத்துழைக்க வேண்டும். பேரிடர் மீள்தன்மை உள்கட்டமைப்புக்கான கூட்டணியில் சேர உங்கள் அனைவரையும் நான் அழைக்கிறேன்.

நன்றி.

********


(Release ID: 1955504)

SS/BR/EA


(रिलीज़ आईडी: 2206524) आगंतुक पटल : 12
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Marathi , हिन्दी , Punjabi , Gujarati , Malayalam , Manipuri , English , Urdu , Assamese , Bengali , Odia