பிரதமர் அலுவலகம்
உத்தராகண்ட் மாநில வெள்ளி விழாவில் பிரதமர் நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
प्रविष्टि तिथि:
09 NOV 2025 3:31PM by PIB Chennai
தேவபூமி உத்தராகண்டின் எனது சகோதர, சகோதரிகளுக்கும், நண்பர்களுக்கும், பெரியவர்களுக்கும் எனது வணக்கங்கள்.
உத்தராகண்ட் ஆளுநர் குர்மித் சிங் அவர்களே, முதலமைச்சர் புஷ்கர் சிங் அவர்களே, மத்திய அமைச்சர் அஜய் தம்டா அவர்களே, சட்டமன்ற சபாநாயகர் சகோதரி ரிது அவர்களே, உத்தராகண்ட் அரசு அமைச்சர்கள், மே முன்னாள் முதலமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், நம்மை வாழ்த்த பெருமளவில் வருகை தந்துள்ள வணக்கத்திற்குரிய துறவிகள், மற்றும் இங்கு வருகை தந்திருக்கும் அனைத்துச் சிறப்பு விருந்தினர்களே, என் உத்தராகண்ட் சகோதர சகோதரிகளே! அனைவருக்கும் வணக்கம்
நண்பர்களே,
இந்த நாள், அதாவது நவம்பர் 9, நீண்ட தவத்தின் விளைவாகும். இன்று இந்த நாள் நம் அனைவருக்கும் பெருமித உணர்வை அளிக்கிறது. உத்தராகண்டின் இறை பக்தி கொண்ட மக்கள் நீண்ட காலமாக இந்த நாளைக் கனவு கண்டனர், அந்த கனவு அடல் அவர்களின் அரசாங்கத்தின் போது 25 ஆண்டுகளுக்கு முன்பு நிறைவேற்றப்பட்டது. அந்த 25 ஆண்டுகாலப் பயணத்திற்குப் பிறகு, இன்று உத்தராகண்ட் அடைந்திருக்கும் முன்னேற்றங்களைப் பார்க்கும் போது, இந்த அழகான மாநிலத்தை உருவாக்கப் போராடிய ஒவ்வொருவருக்கும் மகிழ்ச்சியும் பெருமையும் ஏற்படுவது இயல்பு. மலைகளை நேசிப்பவர்கள், தேவபூமி உத்தராகண்டின் கலாச்சாரம், இயற்கை அழகு மற்றும் மக்கள் மீது பற்று கொண்டவர்களின் இதயங்கள் இன்று மகிழ்ச்சியால் நிறைந்துள்ளன.
நண்பர்களே,
உத்தராகண்டின் ஆற்றலை புதிய உச்சத்திற்கு கொண்டு செல்ல, இரட்டை எஞ்சின் கொண்ட பாஜக அரசு அயராது உழைத்து வருவதை கண்டு நான் மகிழ்ச்சி அடைகிறேன். உத்தராகண்டின் இந்த வெள்ளி விழா கொண்டாட்டத்திற்காக உங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தத் தருணத்தில், மாநிலம் உருவாகப் போராடியபோது தங்கள் உயிரைத் தியாகம் செய்த உத்தராகண்டின் தியாகிகளுக்கு நான் அஞ்சலி செலுத்துகிறேன். மேலும், அந்த இயக்கத்தில் பங்கேற்ற அனைவருக்கும் நான் தலை வணங்குகிறேன்.
நண்பர்களே,
உத்தரகாண்டுடன் எனக்கு எவ்வளவு ஆழமான தொடர்பு இருக்கிறது என்பதை நீங்கள் அனைவரும் அறிவீர்கள். நான் இங்கே ஆன்மீகப் பயணங்களுக்காக வந்தபோது, இந்த மலைகளில் வாழும் எனது சகோதர, சகோதரிகளின் போராட்டங்கள், அவர்களின் கடின உழைப்பு, விடாமுயற்சி மற்றும் ஒவ்வொரு சிரமத்தையும் சமாளிக்கும் அவர்களின் உறுதி ஆகியவற்றால் நான் எப்போதும் ஈர்க்கப்பட்டேன்.
நண்பர்களே,
நான் இங்கு செலவிட்ட நாட்கள், உத்தராகண்டின் எல்லையற்ற ஆற்றலை நேரடியாக அனுபவிக்க எனக்கு வாய்ப்பளித்தன. அதனால்தான், பாபா கேதாரின் தரிசனம் கிடைத்த பிறகு, 'இந்த தசாப்தம் உத்தராகண்டிற்கு உரியது' என்று நான் சொன்னபோது, அது வெறும் வார்த்தை அல்ல. உங்கள் அனைவர் மீதும் முழு நம்பிக்கை வைத்தே நான் அதைச் சொன்னேன். இன்று, உத்தராகண்ட் தனது உருவாக்கத்தின் 25 ஆண்டுகளை நிறைவு செய்கையில், இது உண்மையாகவே உத்தராகண்டின் எழுச்சி மற்றும் புகழின் சகாப்தம் என்ற எனது நம்பிக்கை மேலும் வலுவடைந்துள்ளது.
நண்பர்களே,
25 ஆண்டுகளுக்கு முன்பு உத்தராகண்ட் புதிதாக உருவாக்கப்பட்டபோது, சவால்கள் மிக அதிகமாக இருந்தன. வளங்கள் குறைவாக இருந்தன, மாநிலத்தின் வரவுசெலவுத் திட்டம் மிகக் குறைவாக இருந்தது, வருமான ஆதாரங்கள் மிகக் குறைவாகவே இருந்தன, பெரும்பாலான தேவைகள் மத்திய அரசின் உதவியின் மூலமே பூர்த்தி செய்யப்பட்டன.
ஆனால் இன்று, நிலைமை முற்றிலும் மாறிவிட்டது. இங்கு வருவதற்கு முன், வெள்ளி விழா கொண்டாட்டங்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பிரம்மாண்டமான கண்காட்சியை நான் பார்வையிட்டேன். உத்தராகண்டின் ஒவ்வொரு குடிமகனும் அந்தக் கண்காட்சியைப் பார்க்க வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன். கடந்த 25 ஆண்டுகளில் உத்தராகண்டின் பயணத்தின் காட்சிகள் அதில் இடம்பெற்றுள்ளன. உள்கட்டமைப்பு, கல்வி, தொழில், சுற்றுலா, சுகாதாரம், மின்சாரம் மற்றும் கிராமப்புற வளர்ச்சி ஆகியவற்றில் கிடைத்த ஊக்கமளிக்கும் வெற்றிப் பின்னணிகள் உண்மையிலேயே பாராட்டத்தக்கவை.
25 ஆண்டுகளுக்கு முன்பு, உத்தராகண்டின் வரவுசெலவுத் திட்டம் வெறும் 4,000 கோடி ரூபாயாக மட்டுமே இருந்தது. இன்று 25 வயதுடைய இளைஞர்களுக்கு, அந்தக் கால நிலை எப்படி இருந்தது என்று தெரிய வாய்ப்பில்லை. அப்போது மாநிலத்தின் ஆண்டு வரவுசெலவுத் திட்டம் 4,000 கோடி ரூபாய். ஆனால் இன்று, அது ஒரு லட்சம் கோடி ரூபாயைத் தாண்டியுள்ளது. இந்த 25 ஆண்டுகளில், உத்தராகண்டில் மின்சார உற்பத்தி நான்கு மடங்கு அதிகரித்துள்ளது. கடந்த 25 ஆண்டுகளில் சாலைகளின் மொத்த நீளம் இரட்டிப்பாகியுள்ளது. இதற்கு முன்பு, ஆறு மாதங்களில் வெறும் 4,000 விமானப் பயணிகளே இங்கு வருவது வழக்கம். ஆனால், இப்போது ஒரே நாளில் 4,000-க்கும் அதிகமானோர் விமானம் மூலம் வந்து சேர்கிறார்கள்.
நண்பர்களே,
இந்த 25 ஆண்டுகளில், பொறியியல் கல்லூரிகளின் எண்ணிக்கை பத்து மடங்கிற்கும் அதிகமாக அதிகரித்துள்ளது. இதற்கு முன்பு ஒரே ஒரு மருத்துவக் கல்லூரிதான் இருந்தது. ஆனால் இன்று பத்து மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. 25 ஆண்டுகளுக்கு முன்பு, தடுப்பூசி போடும் விகிதம் 25 சதவீதத்தைக் கூட எட்டவில்லை; 75 சதவீதத்திற்கும் அதிகமான மக்கள் எந்தத் தடுப்பூசியும் இல்லாமல் வாழ்க்கையைத் தொடங்கினர். ஆனால் இன்று, உத்தராகண்டின் ஒவ்வொரு கிராமமும் முழுமையான தடுப்பூசி செலுத்தும் நிலையை அடைந்துள்ளது.
இதன் பொருள் என்னவென்றால், உத்தராகண்ட் வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்திலும் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் அடைந்துள்ளது. இந்த வளர்ச்சியின் பயணம் அசாதாரணமானது. இது அனைவரையும் உள்ளடக்கிய கொள்கைகளின் விளைவு, மேலும் ஒவ்வொரு உத்தராகண்ட் மக்களுடைய உறுதியின் விளைவு. முன்னர், செங்குத்தான மலைச் சரிவுகள் வளர்ச்சியின் பாதையைத் தடுப்பதாகத் தோன்றியது; ஆனால் இப்போது, அதே பாதைகள் முன்னேறுவதற்கு புதிய வழிகளைத் திறந்துவிட்டுள்ளன.
நண்பர்களே,
சற்று நேரத்திற்கு முன்பு, உத்தராகண்டின் இளைஞர்கள் மற்றும் தொழில்முனைவோருடன் நான் பேசினேன். மாநிலத்தின் வளர்ச்சியைப் பற்றி அவர்கள் அனைவரும் மிகுந்த உற்சாகத்துடன் உள்ளனர். நான் சில தவறுகள் செய்யக்கூடும் என்றாலும், '2047-ல் பாரதம் வளர்ந்த நாடுகளின் வரிசையில் நிற்கும்போது, எனது உத்தராகண்ட், எனது தேவபூமி அதற்காக முழுமையாகத் தயாராக இருக்கும்' என்ற உத்தராகண்ட் மக்களின் உணர்வை கார்வாலி மொழியில் வெளிப்படுத்த விரும்புகிறேன்.
நண்பர்களே,
உத்தராகண்டின் வளர்ச்சிப் பயணத்தை மேலும் விரைவுபடுத்தும் வகையில், இன்று பல திட்டங்கள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளன, அவற்றிற்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளன. கல்வி, சுகாதாரம், சுற்றுலா மற்றும் விளையாட்டுத் துறைகள் தொடர்பான இந்தத் திட்டங்கள் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும். ஜம்ரானி மற்றும் சோங் அணைத் திட்டங்கள், டேராடூன் மற்றும் ஹல்த்வானி ஆகிய பகுதிகளின் குடிநீர்ப் பிரச்சினையைத் தீர்ப்பதில் முக்கியப் பங்கு வகிக்கும். இந்தத் திட்டங்களுக்காக 8,000 கோடி ரூபாய்க்கும் அதிகமான நிதி செலவிடப்படும். இந்த முக்கியமான திட்டங்களுக்காக உத்தராகண்ட் மக்களுக்கு நான் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
"உத்தராகண்ட் அரசு தற்போது ஆப்பிள் மற்றும் கிவி பழ விவசாயிகளுக்கு டிஜிட்டல் நாணயம் மூலம் மானியங்களை வழங்கத் தொடங்கியுள்ளது. நவீன தொழில்நுட்பத்தின் உதவியுடன், இந்த நிதி உதவியின் விநியோகத்தை வெளிப்படையாகக் கண்காணிக்க முடிகிறது. இந்த முன்னோடித் திட்டத்திற்காக மாநில அரசு, இந்திய ரிசர்வ் வங்கி மற்றும் இதில் ஈடுபட்டுள்ள அனைத்து பங்குதாரர்களுக்கும் எனது பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்"
"தேவபூமி உத்தராகண்ட் என்பது பாரதத்தின் ஆன்மீக வாழ்வின் இதயத் துடிப்பு. கங்கோத்ரி, யமுனோத்ரி, கேதார்நாத், பத்ரிநாத், ஆதி கைலாஷ் போன்ற எண்ணற்ற புனிதத் தலங்கள் நம் ஆழமான நம்பிக்கையின் சின்னங்களாகும். ஒவ்வொரு ஆண்டும், கோடிக்கணக்கான பக்தர்கள் இந்தத் தலங்களுக்கு வருகை தருகின்றனர். இந்த யாத்திரைகள் பக்தியைப் பரப்புவதுடன், உத்தராகண்டின் பொருளாதாரத்தில் புதிய சக்தியை நிரப்புகின்றன"
உத்தராகண்டின் வளர்ச்சிக்கும், சிறந்த போக்குவரத்து இணைப்புக்கும் இடையே ஆழமான தொடர்பு இருப்பதாகப் பிரதமர் தனது உரையில் வலியுறுத்தினார். இந்தப் பிணைப்பை வலுப்படுத்தும் வகையில், தற்போது மாநிலத்தில் 2 இலட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமான மதிப்புள்ள பல்வேறு உள்கட்டமைப்புத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதில், ரிஷிகேஷ்–கர்ணபிரயாக் இரயில் திட்டம் மிக வேகமாக முன்னேறி வருகிறது.
டெல்லி–டேராடூன் விரைவுச் சாலையின் கட்டுமானப் பணிகள் கிட்டத்தட்ட முடிவடையும் தருவாயில் உள்ளன. அத்துடன், பக்தர்கள் எளிதாகப் பயணம் செய்ய உதவும் வகையில், கௌரிகுண்ட்–கேதார்நாத் மற்றும் கோவிந்த்காட்–ஹேம்குண்ட் சாஹிப் ஆகியவற்றுக்கான கம்பிவடப் பாதைகளுக்கும் (Ropeways) அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. இத்தகைய பிரம்மாண்டமான திட்டங்கள் அனைத்தும் உத்தராகண்டின் வளர்ச்சிக்கு ஒரு புதிய உத்வேகத்தையும் வேகத்தையும் அளித்து வருவதாக பிரதமர் தெரிவித்தார்.
உத்தராகண்ட் கடந்த 25 ஆண்டுகளில் நீண்ட வளர்ச்சியை அடைந்துள்ளது என்று பிரதமர் குறிப்பிட்டார். "இப்போது நமக்கு முன்னால் உள்ள கேள்வி என்னவென்றால், அடுத்த 25 ஆண்டுகளில் உத்தராகண்ட் எந்த உயரத்தை அடைய வேண்டும்?" என்பதே ஆகும். "விருப்பம் இருந்தால் வழி பிறக்கும்" என்ற பழமொழியை நினைவுபடுத்திய பிரதமர், நமது இலக்கு தெளிவாக இருந்தால், அதை அடைவதற்கான திட்டமும் (Roadmap) விரைவில் உருவாகும் என்றார். மேலும், நவம்பர் 9-ஐ விட இந்த இலக்குகளைப் பற்றிச் சிந்திக்க சிறந்த நாள் வேறு என்ன இருக்க முடியும் என்றும் வினவினார்.
உத்தராகண்டின் உண்மையான அடையாளம் அதன் ஆன்மீக பலத்தில் அடங்கியுள்ளது என்று பிரதமர் வலியுறுத்தினார். உத்தராகண்ட் தீர்மானித்தால், ஒரு சில வருடங்களுக்குள்ளேயே தன்னை "உலகின் ஆன்மீகத் தலைநகராக" (Spiritual Capital of the World) நிலைநிறுத்திக் கொள்ள முடியும். இங்குள்ள கோயில்கள், ஆசிரமங்கள், தியானம் மற்றும் யோகா மையங்கள் ஆகியவற்றை உலகளாவிய வலையமைப்புடன் இணைக்க முடியும் என்று அவர் கருத்து தெரிவித்தார்.
நல்வாழ்வைத் தேடி நாடு முழுவதிலும் இருந்தும், உலகெங்கிலும் இருந்தும் மக்கள் இங்கு வருவதாகப் பிரதமர் குறிப்பிட்டார். உத்தராகண்டின் மூலிகைகள் மற்றும் ஆயுர்வேத மருந்துகளுக்கான தேவை வேகமாக அதிகரித்து வருகிறது. கடந்த 25 ஆண்டுகளில், நறுமணத் தாவரங்கள், ஆயுர்வேத மூலிகைகள், யோகா மற்றும் நல்வாழ்வு சுற்றுலாவில் உத்தராகண்ட் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் கண்டுள்ளது.
இப்போது, உத்தராகண்டில் உள்ள ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதியிலும் யோகா மையங்கள், ஆயுர்வேத மையங்கள், இயற்கை மருத்துவ நிறுவனங்கள் மற்றும் ஹோம்ஸ்டேக்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு முழுமையான நல்வாழ்வுப் தொகுப்பு திட்டத்தை உருவாக்க வேண்டிய நேரம் இது என்று பிரதமர் கூறினார். இது குறிப்பாக நமது சர்வதேச சுற்றுலாப் பயணிகளுக்கு மிகவும் கவர்ச்சிகரமானதாக இருக்கும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
நண்பர்களே,
இந்திய அரசு எல்லையோரப் பகுதிகளில் செயல்படுத்தும் எழுச்சிமிகு கிராமங்கள் திட்டத்திற்கு (Vibrant Villages Programme) எவ்வளவு முக்கியத்துவம் அளிக்கிறது என்பதை நீங்கள் அனைவரும் அறிவீர்கள். உத்தராகண்டில் உள்ள ஒவ்வொரு துடிப்பான கிராமமும் ஒரு சிறிய சுற்றுலா மையமாக வளர்ச்சியடைய வேண்டும் என்று நான் விரும்புகிறேன். அங்கு ஹோம்ஸ்டேக்கள் இருக்க வேண்டும், மேலும் உள்ளூர் உணவு வகைகளும், உள்ளூர் கலாச்சாரமும் ஊக்குவிக்கப்பட வேண்டும்.
இந்தியாவின் பிற பகுதிகளைச் சேர்ந்த அல்லது வெளிநாடுகளில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகள், இங்குள்ள சூடான, வீட்டுச் சூழலை அனுபவித்து, துப்கே, சுட்கனி, ரோட்-அர்சா, ரஸ்-பாட், ஜங்கோரே கி கீர் போன்ற பாரம்பரிய உணவுகளை ருசித்தால், அவர்கள் எவ்வளவு மகிழ்ச்சி அடைவார்கள் என்று கற்பனை செய்து பாருங்கள்! அந்தக் கொண்டாட்டம் அவர்களை ஒருமுறை மட்டுமல்ல, மீண்டும் மீண்டும் உத்தராகண்டுக்கு வரவழைக்கும்.
நண்பர்களே,
இப்போது நாம் உத்தராகண்டில் உள்ள மறைந்திருக்கும் ஆற்றலை வெளிக்கொணர்வதில் கவனம் செலுத்த வேண்டும். ஹரேலா, பூல்தேய், பிதௌலி போன்ற உள்ளூர் விழாக்களில் பங்கேற்கும் சுற்றுலாப் பயணிகள் அந்த அனுபவங்களை வாழ்நாள் முழுவதும் பொக்கிஷமாகப் பாதுகாப்பார்கள். இங்குள்ள திருவிழாக்களும் அதேபோல் துடிப்பானவை. நந்தா தேவி மேளா, ஜௌல்ஜீவி மேளா, பாகேஷ்வரின் உத்தராயணி மேளா, தேவிதுரா மேளா, ச்ரவாணி மேளா மற்றும் வெண்ணெய் திருவிழா ஆகியவை உத்தராகண்டின் ஆத்மாவாக விளங்குகின்றன.
இந்த உள்ளூர் கண்காட்சிகள் மற்றும் திருவிழாக்களை உலக வரைபடத்தில் கொண்டு செல்ல, நாம் "ஒரு மாவட்டம், ஒரு திருவிழா" போன்ற ஒரு பிரச்சாரத்தைத் தொடங்கலாம்.
நண்பர்களே,
உத்தராகண்டின் அனைத்து மலை மாவட்டங்களும் பழ சாகுபடிக்கு அபரிமிதமான ஆற்றலைக் கொண்டுள்ளன. இந்தப் பகுதிகளை தோட்டக்கலை மையங்களாக மாற்ற நாம் கவனம் செலுத்த வேண்டும். ப்ளூபெர்ரி, கிவி, மூலிகைகள் மற்றும் மருத்துவ தாவரங்கள் ஆகியவை எதிர்கால விவசாயத்தைக் குறிக்கின்றன. மேலும், உணவு பதப்படுத்துதல், கைவினைப்பொருட்கள் மற்றும் இயற்கை விளைபொருட்கள் போன்ற துறைகளை மேம்படுத்த, உத்தராகண்ட் தனது குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்களை புதிதாக வலுப்படுத்த வேண்டும்.
நண்பர்களே,
உத்தராகண்டில் எப்போதும் ஆண்டு முழுவதும் சுற்றுலாவிற்கு மகத்தான சாத்தியக்கூறுகள் உள்ளன. இப்போது இணைப்பு வசதி மேம்பட்டு வருவதால், நாம் எல்லா பருவ கால சுற்றுலா நோக்கி நகர வேண்டும் என்று நான் முன்னரே பரிந்துரைத்திருந்தேன். உத்தராகண்ட் குளிர்காலச் சுற்றுலாவுக்கு ஒரு புதிய பரிமாணத்தைக் கொடுத்து வருவதையிட்டு நான் மகிழ்ச்சியடைகிறேன்.
சமீபத்தில் நான் பெற்ற புள்ளிவிவரங்கள் மிகவும் ஊக்கமளிக்கின்றன: குளிர்காலச் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது. பித்தோராகரில் 14,000 அடிக்கு மேல் உயரத்தில் ஒரு உயரமான மாரத்தான் நடத்தப்பட்டது. ஆதி கைலாஷ் பிரதக்ஷிணா ஓட்டம் நாட்டிற்கே ஒரு உத்வேகமாக மாறியுள்ளது. மூன்று ஆண்டுகளுக்கு முன்பு 2,000-க்கும் குறைவான பக்தர்கள் மட்டுமே ஆதி கைலாஷ் யாத்திரையை மேற்கொண்ட நிலையில், இன்று அந்த எண்ணிக்கை 30,000-க்கும் அதிகமாக உயர்ந்துள்ளது.
சமீபத்தில் கேதார்நாத் கோயில் நடை சாத்தப்பட்டது. இந்த ஆண்டு மட்டும் சுமார் 17 லட்சம் பக்தர்கள் கேதார்நாத் தாம் தரிசனத்திற்காக வந்துள்ளனர். புனித யாத்திரை மற்றும் ஆண்டு முழுவதும் சுற்றுலா ஆகியவை உத்தராகண்டின் பலமாகும், இது தொடர்ந்து மாநிலத்தை புதிய வளர்ச்சி உயரங்களுக்கு இட்டுச் செல்லும். இங்கு சூழல் சுற்றுலா மற்றும் சாகசச் சுற்றுலாவுக்கும் பரந்த சாத்தியக்கூறுகள் உள்ளன. நாடு முழுவதிலும் உள்ள இளைஞர்களுக்கு உத்தராகண்ட் ஒரு முக்கிய ஈர்ப்பு மையமாக மாற முடியும்.
உத்தராகண்ட் இப்போது ஒரு திரைப்படப் படப்பிடிப்புத் தலமாக உருவெடுத்து வருவதாகப் பிரதமர் குறிப்பிட்டார். மாநிலத்தின் புதிய திரைப்படக் கொள்கை படப்பிடிப்பை மேலும் எளிதாக்கியுள்ளது. அத்துடன், உத்தராகண்ட் ஒரு திருமணத் தலமாகவும் பிரபலமடைந்து வருகிறது.
பிரதமர் வலியுறுத்தி வரும் “இந்தியாவில் திருமணம் செய்யுங்கள்” என்ற பிரச்சாரத்தை முன்னெடுத்துச் செல்ல, உத்தராகண்ட் உலகத் தரம் வாய்ந்த திருமண வசதிகளை உருவாக்க வேண்டும். இதற்காக, மாநிலத்தில் 5 முதல் 7 முக்கிய இடங்களைத் தேர்ந்தெடுத்து, அவற்றைச் சிறந்த திருமண இடங்களாக மேம்படுத்தலாம் என்று அவர் ஆலோசனை வழங்கினார்.
"நாடு தற்சார்பு இந்தியாவை உருவாக்குவதற்குத் தீர்மானித்துள்ளது. இந்த இலக்கை அடைவதற்கான வழி, 'உள்ளூர் உற்பத்திக்கான குரல்' என்ற உணர்வில்தான் உள்ளது. உத்தராகண்ட் எப்பொழுதும் இந்தக் கண்ணோட்டத்தோடு வாழ்ந்து வருகிறது" என்று பிரதமர் கூறினார்.
உத்தராகண்ட் அரசு இந்த உள்ளூர் தயாரிப்புகளுக்கான பிரச்சாரத்தை விரைவுபடுத்தியிருப்பதில் அவர் மகிழ்ச்சி தெரிவித்தார். இந்தப் பிரச்சாரத்தின் விளைவாக, உத்தராகண்டின் 15 விவசாயப் பொருட்களுக்கு புவிசார் குறியீடு அங்கீகாரம் கிடைத்துள்ளது.
குறிப்பாக, பேடு பழம் மற்றும் பத்ரி பசுவின் நெய் ஆகியவை சமீபத்தில் புவிசார் குறியீடு பெற்றிருப்பது பெருமைக்குரிய விஷயம். இந்த பத்ரி பசுவின் நெய் ஒவ்வொரு மலை வீட்டிற்கும் ஒரு பெருமை தரும் ஆதாரமாக உள்ளது. இப்போது பேடு பழம் கிராமங்களில் இருந்து மாநிலத்திற்கு வெளியே சந்தைகளுக்குச் செல்கிறது. இந்த புவிசார் குறியீடு பெற்ற பொருட்கள், உத்தராகண்டின் அடையாளத்தை அவை செல்லும் இடமெல்லாம் கொண்டு சேர்க்கும். இந்த புவிசார் குறியீடு பெற்ற உள்ளூர் பொருட்கள் நாடு முழுவதும் உள்ள ஒவ்வொரு வீட்டையும் சென்றடைவதை நாம் உறுதி செய்ய வேண்டும் என்று பிரதமர் கேட்டுக்கொண்டார்.
நண்பர்களே,
"ஹவுஸ் ஆஃப் ஹிமாலயாஸ்" என்பது உத்தராகண்டின் உள்ளூர் அடையாளங்களை ஒரே தளத்திற்குக் கொண்டு வரும் ஒரு வலிமையான பிராண்டாக உருவெடுத்துள்ளது என்று நான் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த பிராண்டின் கீழ், மாநிலத்தின் பல்வேறு தயாரிப்புகளுக்கு ஒரு பொதுவான அடையாளம் கொடுக்கப்பட்டுள்ளது, இதன் மூலம் அவை உலகச் சந்தையில் போட்டியிட முடியும். மாநிலத்தின் பல தயாரிப்புகள் இப்போது டிஜிட்டல் தளங்களில் கிடைக்கின்றன, இது வாடிக்கையாளர்களை நேரடியாக அணுகுவதற்கும், விவசாயிகள், கைவினைஞர்கள் மற்றும் சிறு தொழில்முனைவோருக்குப் புதிய சந்தைகளைத் திறப்பதற்கும் வழிவகுத்துள்ளது. இப்போது நாம் "ஹவுஸ் ஆஃப் ஹிமாலயாஸ்" பிராண்டிங்கில் புதிய ஆற்றலைக் கொண்டு வருவதுடன், அதன் விநியோக வழிமுறைகளைத் தொடர்ந்து மேம்படுத்த வேண்டும்.
நண்பர்களே,
உத்தராகண்டின் வளர்ச்சிப் பயணம் பல ஆண்டுகளாகப் பல சவால்களை எதிர்கொண்டது என்பதை நீங்கள் அறிவீர்கள். ஆனால் வலிமையான பாஜக அரசாங்கம் எப்போதும் இந்தத் தடைகளை முறியடித்து, முன்னேற்றத்தின் வேகம் ஒருபோதும் குறையாமல் இருப்பதை உறுதி செய்துள்ளது.
உத்தராகண்டின் தாமி அரசாங்கம் சீரான சிவில் சட்டத்தை மிகுந்த தீவிரத்துடன் செயல்படுத்தி, பிற மாநிலங்களுக்கு ஒரு முன்மாதிரியை அமைத்துள்ளது. மதமாற்றத் தடைச் சட்டம் மற்றும் கலவரக் கட்டுப்பாட்டுச் சட்டம் போன்ற தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினைகளிலும் மாநில அரசு துணிச்சலான நடவடிக்கைகளை எடுத்துள்ளது. சட்டவிரோத நில ஆக்கிரமிப்பு மற்றும் மக்கள் தொகை மாற்றங்கள் போன்ற உணர்வுபூர்வமான விஷயங்களில் பாஜக அரசு உறுதியான நடவடிக்கையை எடுத்துள்ளது. பேரிடர் மேலாண்மைத் துறையில், உத்தராகண்ட் அரசு விரைவாகவும், உணர்வுபூர்வமாகவும் செயல்பட்டு, மக்களுக்கு உதவ தன்னால் இயன்ற அனைத்தையும் செய்துள்ளது.
உத்தராகண்ட் மாநிலம் உருவான இந்த வெள்ளி விழா கொண்டாட்டத்தின்போது, வரவிருக்கும் ஆண்டுகளில் நமது உத்தராகண்ட் தனது வளமான கலாச்சாரம் மற்றும் தனித்துவமான அடையாளத்தை பெருமையுடன் முன்னோக்கி கொண்டு சென்று, வளர்ச்சியின் புதிய உயரங்களை அடையும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். இந்த வெள்ளி விழா கொண்டாட்டத்திற்காக உத்தராகண்ட் மக்கள் அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்" .
"நாம் 25 ஆண்டுகளுக்கு முன்னால் பார்க்கும்போது, நம் நாடு சுதந்திரத்தின் 100 ஆண்டுகளைக் கொண்டாடும் தருணத்திற்கு தகுந்த நமது இலக்குகளை நிர்ணயம் செய்ய வேண்டும். சரியான பாதையை இன்று தேர்ந்தெடுத்து, தாமதமின்றி முன்னேறிச் செல்ல வேண்டும்"
"உத்தராகண்ட் அரசுடன் மத்திய அரசு உறுதுணையாக நிற்கிறது., ஒவ்வொரு அடியிலும் உங்களுக்கு ஆதரவளிக்கத் தயாராக உள்ளது என்று நான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன். உத்தராகண்டின் ஒவ்வொரு குடும்பத்திற்கும், ஒவ்வொரு குடிமகனுக்கும் மகிழ்ச்சி, செழிப்பு மற்றும் ஒரு பிரகாசமான எதிர்காலம் அமைய நான் வாழ்த்துகிறேன். உங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றி," என்று கூறி பிரதமர் தனது உரையை முடித்தார்.
மேலும், "இந்த ஆண்டு 'வந்தே மாதரம்' பாடலின் 150வது ஆண்டு விழா என்பதால், நாம் அனைவரும் சேர்ந்து பலமுறை 'வந்தே மாதரம்' என்று கூறுவோம்" என்று கூறி உரையை நிறைவு செய்தார்.
***
(Release ID: 2188016)
AD/VK/EA
(रिलीज़ आईडी: 2206687)
आगंतुक पटल : 10
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Assamese
,
Bengali
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam