தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்
2025-ம் ஆண்டில் அஞ்சல் துறையின் முக்கிய செயல்பாடுகள், ஒரு பார்வை
प्रविष्टि तिथि:
19 DEC 2025 2:09PM by PIB Chennai
அஞ்சலக வலையமைப்பைப் பயன்படுத்திக் கொள்ளவும், மக்களுக்கு பாஸ்போர்ட் சேவைகளை வழங்கவும் வெளியுறவு அமைச்சகம், அஞ்சல் துறையுடன் இணைந்து, ஒவ்வொரு மக்களவை தொகுதியிலும் அஞ்சலக பாஸ்போர்ட் சேவை மையங்களை (POPSK) இயக்கி வருகிறது. 30.11.2025 நிலவரப்படி, 452 மையங்கள் செயல்பாட்டில் உள்ளன. ஜனவரி 2025 முதல் நவம்பர் 2025 வரையிலான காலகட்டத்தில் தமிழ்நாட்டின் திருப்பூர், பொள்ளாச்சி உட்பட 10 அஞ்சலக பாஸ்போர்ட் சேவை மையங்கள் செயல்பாட்டுக்கு வந்துள்ளன.
குடிமக்களை மையமாகக் கொண்ட சேவைகளை வழங்கும் நோக்கத்துடன், இந்த ஆண்டு இந்தியா முழுவதும் உள்ள தபால் நிலையங்களில் 13352 ஆதார் மையங்கள் அமைக்கப்பட்டன. அக்டோபரில் தேசிய அஞ்சல் வாரத்தின் போது 5 மற்றும் 15 வயதுடைய குழந்தைகளின் கட்டாய பயோமெட்ரிக் அடையாள புதுப்பிப்புகளுக்காக பள்ளிகளில் 1,552 ஆதார் முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டன. 4,335 ஆதார் சேர்க்கைகள் மற்றும் 35,606 புதுப்பிப்புகள் மேற்கொள்ளப்பட்டன. ஜனவரி 2025 முதல் நவம்பர் 2025 வரை, 2.35 கோடிக்கும் அதிகமான ஆதார் சேர்க்கை மற்றும் புதுப்பிப்புகள் மேற்கொள்ளப்பட்டு, ரூ. 129.13 கோடி வருவாய் ஈட்டப்பட்டது.
இல்லம் தோறும் மூவண்ணக் கோடி பிரச்சாரம் 4.0-ன் கீழ், 2025-ம் ஆண்டில், அஞ்சல் துறை 28,13,627 தேசியக் கொடிகளை விநியோகித்தது. நாடு முழுவதும் ஒவ்வொரு தபால் நிலையத்திலும் தேசியக் கொடிகள் விநியோகிக்கப்பட்டன.
பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கத் திட்டத்தின் அலகுகளின் நேரடி சரிபார்ப்புக்காக அஞ்சல் துறைக்கும் காதி மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையத்திற்கும் இடையே 20.08.2024 அன்று ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த சரிபார்ப்பு பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கத் திட்டத்தின் கீழ் பயனாளிகளின் கடன் கணக்கில் அரசு மானியத்தை சரிசெய்ய உதவும். ஜனவரி 2025 முதல் நவம்பர் 2025 வரை, 1,69,368 திட்ட அலகுகள் சரிபார்க்கப்பட்டுள்ளன.
நாடு முழுவதும் பிஎஸ்என்எல் சிம் கார்டுகள் மற்றும் செல்பேசி ரீசார்ஜ் சேவைகளை வழங்குவதற்காக, 1.64 லட்சத்திற்கும் அதிகமான தபால் நிலையங்களைக் கொண்ட அதன் இணையற்ற அஞ்சல் வலையமைப்பைப் பயன்படுத்த, பிஎஸ்என்எல் உடன் அஞ்சல் துறை புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.
இந்திய அஞ்சல் துறை மற்றும் ரஷ்ய அஞ்சல் துறை இடையேயான இருதரப்பு சர்வதேச கண்காணிப்பு பாக்கெட் சேவை (ITPS) ஒப்பந்தம் டிசம்பர் 4, 2025 அன்று முறையாக கையெழுத்தானது. இந்த ஒப்பந்தம், இரு நாடுகளின் அஞ்சல் நிர்வாகங்களுக்கிடையில் சரக்குகளின் பரிமாற்றம், கையாளுதல், கண்காணிப்பு மற்றும் விநியோகத்தை நிர்வகிக்கும் கட்டமைப்பை நிறுவுகிறது. இதன் செயல்படுத்தல் இருதரப்பு அஞ்சல் ஒத்துழைப்பை வலுப்படுத்தும், சேவை நம்பகத்தன்மையை மேம்படுத்தும் மற்றும் இந்தியாவிற்கும் ரஷ்ய கூட்டமைப்புக்கும் இடையில் கண்காணிக்கப்பட்ட அஞ்சல் பொருட்களின் மென்மையான எல்லை தாண்டிய இயக்கத்தை எளிதாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2206480®=3&lang=1
***
AD/BR/SE
(रिलीज़ आईडी: 2206818)
आगंतुक पटल : 11