தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்
இந்தியாவின் பொம்மலாட்டங்கள் குறித்து 8 வகையான தபால் தலைகள் கொண்ட தொகுப்பை இந்திய அஞ்சல்துறை வெளியிட்டது
இடுகை இடப்பட்ட நாள்:
14 FEB 2026 11:26AM by PIB Chennai
இந்திய அஞ்சல் துறை, “இந்தியாவின் பொம்மலாட்டங்கள்” என்ற தலைப்பில் 8 நினைவுத் தபால் தலைகள் கொண்ட தொகுப்பை பிப்ரவரி 13 அன்று புதுதில்லியில் உள்ள இந்தியன் ஹேபிடட் சென்டரில் வெளியிட்டது. இந்தத் தபால் தலைகளை அஞ்சல் துறை செயலாளர் திருமதி வந்திதா கௌல், சிறப்பு விருந்தினர்கள், கலைஞர்கள் மற்றும் கலாச்சார உலகின் பிரதிநிதிகள் முன்னிலையில் முறையாக வெளியிட்டார்.
இந்த நிகழ்வில் பேசிய அஞ்சல் துறை செயலாளர் கூறியதாவது:
“தபால் தலைகள் நம் நாட்டின் பாரம்பரியத்தின் சிறிய தூதுவர்கள். இந்தியாவின் செழுமையான மற்றும் பலதரப்பட்ட பொம்மலாட்ட மரபுகளை கொண்டாடும் இந்தச் சிறப்பு வெளியீட்டின் மூலம், தலைமுறை தலைமுறையாக நம் நாட்டின் நாட்டுப்புறக் கதைகள், மதிப்புகள் மற்றும் கூட்டு நினைவுகளை பாதுகாத்து வந்த காலத்தால் அழியாத கதைசொல்லிகளுக்கு நாம் மரியாதை செலுத்துகிறோம். இந்தத் தபால் தலைகள், இந்தியாவின் உயிர்ப்புமிக்க கலாச்சார மரபை மீண்டும் மதிக்கும் உணர்வை தூண்டி, எதிர்கால தலைமுறைகள் இந்த உயிருள்ள மரபுகளை போற்றவும் பேணவும் ஊக்குவிக்கட்டும்.”
இவ்வாறு அவர் பேசினார்.
இந்தியாவில் பொம்மலாட்டம், நாட்டின் மிகப் பழமையான மற்றும் உற்சாகமான கதை சொல்லும் மரபுகளில் ஒன்றாகும். இது இந்தியாவின் செழுமையான கலாச்சார பல்வகைமையையும் கலைத் திறமையையும் பிரதிபலிக்கிறது. பல நூற்றாண்டுகளாக, திறமையான பொம்மலாட்டக் கலைஞர்கள் இசை, உரையாடல் மற்றும் காட்சிக் கலை ஆகியவற்றை ஒருங்கிணைத்த கவர்ச்சிகரமான நிகழ்ச்சிகளின் மூலம் இதிகாசங்கள், நாட்டுப்புறக் கதைகள், ஒழுக்கப் பாடங்கள் மற்றும் சமூகக் கதைகளை உயிர்ப்பித்துள்ளனர்.
இந்தியாவின் பாரம்பரிய பொம்மலாட்டம் பொதுவாக நான்கு வகைகளாகப் பிரிக்கப்படுகிறது — நூல் பொம்மைகள், கையுறை பொம்மைகள், கம்பு பொம்மைகள் மற்றும் நிழல் பொம்மைகள். ஒவ்வொன்றுக்கும் தனித்துவமான பாணி மற்றும் பிராந்தியச் சிறப்பம்சங்கள் உள்ளன. குடும்ப மரபின் மூலம் தலைமுறை தலைமுறையாக திறன்களும் கதைகளும் பரிமாறப்படுவது இந்தக் கலையின் முக்கிய அம்சமாகும்.
இந்த நினைவுத் தொகுப்பில், இந்தியாவின் பல்வேறு பிராந்தியங்களைச் சேர்ந்த எட்டு தனித்துவமான பாரம்பரிய பொம்மலாட்ட வடிவங்கள் இடம்பெற்றுள்ளன: கத்துப்புட்லி (ராஜஸ்தான்), யக்ஷகான சூத்ரத கோம்பெயட்ட (கர்நாடகா), டாங்கர் புத்துல் (மேற்கு வங்காளம்), காத்தி குந்தெய் (ஒடிஷா), பெனிர் புத்துல் (மேற்கு வங்காளம்), பாவகதகளி (கேரளா), ராவணச்சாயா (ஒடிஷா) மற்றும் தொலு பொம்மலட்டா (ஆந்திரப் பிரதேசம்). ஒவ்வொரு தபால் தலையும் அந்தந்த மரபின் தனிச்சிறப்பான ஆடை அலங்காரம், வடிவமைப்பு மற்றும் நிகழ்த்தும் பாணியை பிரதிபலித்து, இந்தியாவின் பல்வகை பொம்மலாட்டக் கலையின் கலைப்பண்பையும் பண்பாட்டு பாரம்பரியத்தையும் வெளிப்படுத்துகிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2227936®=3&lang=1
***
AD/PLM/KR
(வெளியீட்டு அடையாள எண்: 2231817)
வருகையாளர் எண்ணிக்கை : 7