குடியரசுத் தலைவர் செயலகம்
azadi ka amrit mahotsav

குடியரசுத்தலைவர் மாளிகையில் சக்ரவர்த்தி ராஜகோபாலாச்சாரியின் மார்பளவு திருவுருவச் சிலையையும், ராஜாஜி பெருவிழா கண்காட்சியையும் குடியரசுத்தலைவர் திறந்து வைத்தார்.

இடுகை இடப்பட்ட நாள்: 23 FEB 2026 6:16PM by PIB Chennai

குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு, இன்று (பிப்ரவரி 23, 2026) குடியரசுத் துணைத்தலைவர் திரு சி.பி.ராதாகிருஷ்ணன் முன்னிலையில், குடியரசுத்தலைவர் மாளிகையில் சுதந்திர இந்தியாவின் முதல் மற்றும் ஒரே இந்திய கவர்னர் ஜெனரலான திரு சக்ரவர்த்தி ராஜகோபாலாச்சாரியின் மார்பளவு திருவுருவச் சிலையைத் திறந்து வைத்தார். மகாத்மா காந்தியின் சிலைக்கு எதிரே உள்ள அசோக மண்டபத்திற்கு அருகே உள்ள   பிரம்மாண்டமான  படிக்கட்டின் அருகில்  உள்ள திரு சி. ராஜகோபாலாச்சாரியின் மார்பளவு சிலை, எட்வின் லுட்யென்ஸின் சிலைக்கு மாற்றாக அமைக்கப்பட்டுள்ளது. இந்த முயற்சி காலனித்துவ மனநிலையின் மீதங்களை நீக்குவதற்கும், இந்தியாவின் கலாச்சாரம், பாரம்பரியம் மற்றும் காலத்தால் அழியாத மரபுகளின் செழுமையை பெருமையுடன் தழுவுவதற்கும் எடுக்கப்பட்டு வரும் தொடர்ச்சியான நடவடிக்கைகளின் ஒரு பகுதியாகும்.

இதைத் தொடர்ந்து, குடியரசுத்தலைவர் மாளிகையின் கலாச்சார மையத்தில் நடைபெற்ற ராஜாஜி பெருவிழாவில் கலந்து கொண்ட குடியரசுத்தலைவர், அவரது வாழ்க்கை மற்றும் பணிகலாய் விளக்கும் புகைப்படம் மற்றும் புத்தகக் கண்காட்சியைப் பார்வையிட்டார். ராஜாஜியின் வாழ்க்கை குறித்த திரைப்படமும் திரையிடப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் பேசிய குடியரசுத்தலைவர், தற்போதைய குடியரசுத்தலைவர் மாளிகைக்கு ராஜாஜி வந்தபோது, ​​தனது அறையில் ராமகிருஷ்ண பரமஹம்சர் மற்றும் மகாத்மா காந்தியின் உருவப்படங்களை வைத்ததாகக் கூறினார். இந்திய உணர்வு மற்றும் அனைத்து இந்தியர்களுடனும், குறிப்பாக பலவீனமான பிரிவினருடனான தொடர்பு, ராஜாஜியின் எண்ணங்கள் மற்றும் செயல்களில் பிரதிபலித்தது, என்று அவர் தெரிவித்தார்.

 

ராஜாஜி, பன்முக படைப்பாற்றல்களைப் பெற்றிருந்தார் என்று குடியரசுத்தலைவர் கூறினார். சட்டத் தொழில், சுதந்திரப் போராட்டம், சமூக மற்றும் பொருளாதார சீர்திருத்தங்கள், பண்டைய இந்திய வேதங்கள், தமிழ் மற்றும் ஆங்கில எழுத்து, கவிதை மற்றும் இசை, அரசியல் மற்றும் நிர்வாகம் உள்ளிட்ட துறைகளில்  அவரது பங்களிப்புகள் அந்தத் துறைகளை பெரிதும் வளப்படுத்தின, என்றும் திருமதி முர்மு குறிப்பிட்டார். ராஜாஜி விவரித்தபடி, சுதேசி மற்றும் தற்சார்பு இந்தியாவை அடைய நாடு அளிக்கும் முக்கியத்துவம், சுயராஜ்ஜியம் என்ற கருத்தை முன்னெடுத்துச் செல்கிறது என்பதை அவர் அடிக்கோடிட்டுக் காட்டினார். 2047 ஆம் ஆண்டுக்குள் 'வளர்ச்சியடைந்த பாரதம்' என்ற இலக்கை நோக்கி நாம் முன்னேறும்போது, ​​ராஜாஜி போன்ற ஆளுமைகள் தங்கள் கருத்துக்கள் மற்றும் லட்சியங்களால் நம்மை ஊக்குவிக்கிறார்கள் என்று குடியரசுத்தலைவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் கல்வி அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான், கலாச்சார அமைச்சர் திரு கஜேந்திர சிங் ஷெகாவத், மாநிலங்களவை துணைத் தலைவர் திரு ஹரிவன்ஷ், சட்டம் மற்றும் நீதித்துறை இணையமைச்சர் திரு அர்ஜுன் ராம் மேக்வால் மற்றும் தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை இணையமைச்சர் டாக்டர் எல். முருகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

விழாவில் பேசிய குடியரசு துணைத்தலைவர் திரு சி.பி. ராதாகிருஷ்ணன், குறிப்பிடத்தக்க திறமை கொண்ட ராஜாஜி, இந்திய வரலாற்றில் ஒரு சிறப்புமிக்க இடத்தைப் பிடித்தார் என்று கூறினார். அவர் தொடர்ந்து பொருளாதார சுதந்திரத்திற்குக் குரல் கொடுத்ததுடன், இந்தியாவின் பொருளாதாரக் கொள்கை சுதந்திரமாகவும், தாராளமாகவும் இருக்க வேண்டும் என்று விரும்பினார் என்று திரு ராதாகிருஷ்ணன் குறிப்பிட்டார்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2231850&reg=3&lang=1

(Release ID: 2231850)

****

TV/BR/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2231946) வருகையாளர் எண்ணிக்கை : 11
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Gujarati