சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
இலக்கை விஞ்சி 12 லட்சம் இளைஞர்களுக்கு மத்திய அரசு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது: மத்திய அமைச்சர் டாக்டர் எல் முருகன் தகவல்
प्रविष्टि तिथि:
23 MAY 2026 3:07PM by PIB Chennai
மத்திய அரசின் சார்பில் சென்னையில் இன்று (23 மே 2026) நடைபெற்ற வேலைவாய்ப்புத் திருவிழாவில் 65 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கிய மத்திய தகவல் ஒலிபரப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர் டாக்டர் எல் முருகன் நாடு முழுவதும் 10 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, இதுவரை அந்த இலக்கை விஞ்சி, 12 லட்சம் இளைஞர்களுக்கு மத்திய அரசு துறைகளிலும், பொதுத்துறை நிறுவனங்களிலும் வேலைவாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

நாடு முழுவதும் 41 இடங்களில் நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாம்கள் மூலம் 51 ஆயிரம் இளைஞர்களுக்கு பணி நியமன ஆணைகளை பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று காணொலி மூலம் வழங்கினார்.

இந்த முகாமின் ஒரு பகுதியாக, சென்னை ரயில்பேட்டி இணைப்பு தொழிற்சாலை வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை இணையமைச்சர் டாக்டர் எல் முருகன் கலந்து கொண்டு பணி நியமன ஆணைகளை வழங்கினார். அஞ்சல் துறை, ரயில்வே, வங்கி, பாதுகாப்புத் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இந்த வேலைவாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

இந்தியாவை 2047-ம் ஆண்டுக்குள் வல்லரசு நாடாக உருவாக்க வேண்டும் என்ற பிரதமரின் தொலைநோக்கு இலக்கை எட்டும் வகையில், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டு வருவதாகவும், நாட்டின் வளர்ச்சியில் புதிதாக பணியில் சேரும் இந்த இளைஞர்களின் பங்கு முக்கியத்துவம் பெற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
நாட்டின் கட்டமைப்பை உருவாக்குவதில், நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும் என்ற மத்திய அரசின் நோக்கத்தை நிறைவேற்ற இந்த இளைஞர்கள் பங்காற்ற வேண்டும் என்று கேட்டுக்கொண்ட அமைச்சர், மறுமலர்ச்சி, செயல்பாடு, மாற்றம், தகவல் (Reform, Perform, Transform, Inform) என்ற நோக்கத்துடன் மத்திய அரசு தனது பயணத்தை மேற்கொண்டிருப்பதாகக் கூறினார்.
துறைமுகம், விமான நிலையம், நெடுஞ்சாலைகள் என உள்கட்டமைப்பை உருவக்குவதில் அரசு தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும், இதன் ஒரு பகுதியாகத்தான் நாட்டின் உள்கட்டமைப்பை வலுப்படுத்த முக்கியத்துவம் அளிக்கப்பட்டு பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார். இதன்மூலம், மக்களின் சமூகப், பொருளாதார நிலையை மேம்படுத்த அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
மும்பை-அகமதாபாத் புல்லட் ரயில் திட்டம் அடுத்த ஆண்டு இறுதிக்குள் செயல்பாட்டு வரும் என்றும், சென்னை-பெங்களூரு அதிவிரைவு ரயில் திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும் என்றும் அவர் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் ரயில்பெட்டி இணைப்பு தொழிற்சாலையின் பொது மேலாளர் திரு சுப்பாராவ் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

***
SG/AD/PKV/RJ
(रिलीज़ आईडी: 2264501)
आगंतुक पटल : 61